கரும்பு தோட்டத்தில்... சாரல் மழையில்...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7022
நேர்மையாக வாழ்ந்த சர்ச்சில் மணியடிக்கும் ஒரு மனிதரின் மகனாக ஐவான் பிறந்தான். தந்தை என்றாலே ஐவானுக்கு ஞாபகத்தில் வருவது மணியோசைதான். சர்ச் மணியை ஒலிக்கச் செய்வது தன் தந்தையாகத்தான் இருக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறு எப்போதெல்லாம் சர்ச் மணி காதில் வந்து ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் அவன் முகத்தைச் சற்று தூக்கியவாறு மணியோசையைக் கூர்ந்து கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.
புண்ணிய காரியங்கள் நடக்கிறபோது அங்குள்ள சிறுவர்களில் தானும் ஒருவனாக இருக்கக் கூடாதா என்று அவன் ஆசைப்பட்டான். காலப் போக்கில் அவனின் அந்த மன ஆசை நிறைவேறவும் செய்தது. புண்ணிய காரியங்கள், ஞாயிற்றுக்கிழமை பள்ளி, மரணத்திற்குப் பிறகு உள்ள சடங்குகள், சிறப்பு வழிபாடுகள் என்று பல விஷயங்களிலும் அவன் கலந்து கொள்ள அவனின் இளம் பருவத்து நாட்கள் கடந்து சென்றன.
அதற்கிடையில் கரும்புத்தோட்டத்தில் வைத்து சூசன் என்ற இளம் பெண் அவனுக்கு அறிமுகமானாள். இருவரும் ஒரு மழை நேரத்தில் காளான்களைத் தேடி வீட்டை விட்டு வெளியே கிளம்பியிருந்தார்கள். நல்ல சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. கரும்புகளுக்கிடையே நடக்கிறபோது அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். பாவாடையை மடித்துப் பிடித்து, அதில்தான் சூசன் காளான்களைப் பறித்து இட்டிருந்தாள். அப்படியொன்றும் அது அதிகமாகவும் இல்லை.
'நெறைய கிடைச்சுதா?'
'இந்தா பாரு...'
கூர்மையான கரும்பு ஓலைகள் அவர்கள் உடலில் உரசின. அவர்கள் காளான்களை இங்குமங்குமாய் பார்த்தவாறு நடந்தார்கள்.
சரியாகக் கண்களில் படவேயில்லை. ஐவான் சொல்லப் போனால் வெறுப்படைந்து போனான்.
'நான் போறேன்...'
'ஏன் வெறுப்பாயிடுச்சா?'
சூசன் ஐவானைப் பார்த்து சிரித்தாள். அவளின் பற்கள் வெண்மை நிறத்தில் அழகாக இருந்தன. அவளின் உதடுகள் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தன. ஐவான் தன்னையே மறந்த நிலையில் தன்னுடைய முகத்தை அவளின் முகத்திற்கு நெருக்கமாகக் கொண்டு போனான். அவள் ஒருவித உணர்வுடன் அவனையே உற்று பார்த்தாள். கரும்புகளுக்கிடையே மழைத் துளிகள் வேகமாக விழுந்து கொண்டிருந்தன.
பாவாடையை மடித்து பிடிந்திருந்த சூசனின் கை அதை விட்டதும், அவள் பறித்து வைத்திருந்த காளான்கள் நனைந்து போயிருந்த மண்ணில் விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. ஐவான் அவளை முத்தமிட்டான்.
வருடங்கள் கடந்தோடின. ஐவான் இப்போது ஒரு நகரத்தில் இருந்தான். கடற்கரையையொட்டி இருந்தது அந்த பங்களா. இரவு நேரம். அவனையும் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர். எல்லோரும் அவனின் நண்பர்கள்தாம். அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். கடல் பயங்கரமாக ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. காற்று பலமாக வீசியது.
சால்ஸ் சொன்னான்: 'இப்போ நாம சீட்டு குலுக்கி போடுறோம்.'
சீட்டு குலுக்கி போடும் விஷயத்தை ஆரம்பித்தில் சால்ஸ் சொன்னபோது, அதை ஐவான் விரும்பவில்லை. ஆனால், அவன் மட்டுமே தீர்மானிக்கக் கூடிய ஒரு விஷயம் இல்லை அது என்றும் நண்பர்கள் கூடி முடிவெடுக்கக் கூடிய ஒரு விஷயத்தை அவன் ஒத்துக் கொள்வதைத் தவிர, வேறு வழியே இல்லை என்றும் சால்ஸ் சொன்னான். ஐவான் ஜன்னலின் அருகில் அமர்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்திலேயே நீக்ரோ ரம் இருந்தது.
சால்ஸ் சீட்டுகளைத் தயார் பண்ணினான். அவற்றை அவன் ஒரு தகர டப்பாவில் போட்டு அதன் வாய் பகுதியை ஒரு கையால் மூடியவாறு பலமுறை குலுக்கினான். பின்னர் டப்பாவை ஐவானிடம் கொண்டு வந்தான்.
'எனக்கு வேண்டாம்...' ஐவான் கடல் மீது இருந்த தன் பார்வையை மாற்றாமலே சொன்னான்.
'உனக்கு என்ன ஆச்சு?' - பீதாம்பரன் கேட்டான். அவன் மது அருந்திக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் புகை பிடிக்கவும் செய்து கொண்டிருந்தான்.
'சரி... உனக்காக நான் எடுக்குறேன்...' - சால்ஸ் தகர டப்பாவிற்குள் கையை நுழைத்து, கண்கள் இரண்டையும் மூடியவாறு ஒரு சீட்டை எடுத்து ஐவானிடம் தந்தான். ஐவான் வெறுப்புடன் அதை வாங்கி, பிரித்துப் பார்க்காமலேயே அதை ஜன்னல் வழியாக வெளியே ஏறிந்தான்.
'உனக்கு எத்தனாவது நம்பர்ன்றதை எங்கள் சீட்டுக்களைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது...' - பலவான் சொன்னான்.
ஐவானுக்கு முதல் எண் வந்திருந்தது என்பது அந்தக் கணத்திலேயே தெரிந்து விட்டது. அறை பரபரப்பானது. மன்சூர் ஐவானின் கண்ணாடி டம்ளரில் ரம்மை ஊற்றினான். அனிச்சையாக ஐவான் தன் கையில் இருந்த டம்ளரை உயர்த்தினான். அவர்களும் டம்ளர்களை உயர்த்தினார்கள். அவர்களும் டம்ளர்களை உயர்த்தினார்கள். அவர்களின் ஆரவாரம் அறையை முழுமையாக ஆக்கிரமித்தது.
'இனி தாமதமாகக் கூடாது...' பென்னி சொன்னான்.
'சரிதான்' - சால்ஸ் சொன்னான். சொன்னதோடு ஐவானின் தோளில் அவன் தட்டினான்.
ஐவானுக்கு எழுவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய் விட்டது. அவன் சால்ஸீடனும், பலவானுடனும் சேர்ந்து அறையை விட்டு வெளியே வந்தான். கைப்பிடிகள் அருமையான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிகளில் ஏறி முதல் மாடியை அடைந்தான்.
விக்டோரியா மகாராணியின் காலத்தில் கட்டப்பட்ட பங்களா அது. ராணியின் ஆட்சியில் பணி புரிந்த பல பிரிட்டிஷ் அதிகாரிகளும் அந்தப் பங்களாவில் தங்கியிருக்கிறார்கள். எத்தனையோ கடல் காற்றுகள் இந்த பங்களாவைக் கடந்து போயிருக்கின்றன! பங்களாவின் மேற்குப் பக்கத்தில் கடலையொட்டி கரும் பாறைகள் இருக்கின்றன. அதையும் தாண்டி கடலுக்குள் உயர்ந்து நிற்கும் பாறைகள் பெரும்பாலும் அலைகள் வருகிற நேரத்தில் இல்லாமல் மறைந்து போகும்.
'சரி... நீ அறைக்குள்ளே போ. நாங்க கீழே இருக்கோம்ன்றதை மறந்திடாதே...' - பலவான் சொன்னான்.
'ஆல் தி பெஸ்ட்' - சால்ஸ் வாழ்த்தினான்.
ஐவான் அவர்கள் சொல்வது காதிலேயே விழாத மாதிரி தயங்கியவாறு நின்றிருந்தான். சால்ஸ் அவனை அறைக்குள் தள்ளி கதவை இழுத்து அடைத்து வெளியே தாழ்ப்பாளைப் போட்டான். பின்னர் விழுந்து விழுந்து சிரித்தவாறு பலவானின் தோளில் கையை வைத்தவாறு நீண்ட வராந்தாவைத் தாண்டி படிகளை நோக்கி நடந்தான்.