கரும்பு தோட்டத்தில்... சாரல் மழையில்... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7025
மேற்குப் பக்கம் இருந்த ஜன்னலின் அருகில் வெண்மையான மெல்லிய ஆடைகள் அணிந்து நின்றிருக்கும் இளம் பெண்ணை ஐவான் பார்த்தான். அவள் தலை முடியை சுதந்திரமாக வாரி விட்டிருந்தாள். ஆடைகள் மிகவும் மெல்லியதாக இருந்ததால், அவளின் உடல் வனப்பு கிட்டத்தட்ட முழுமையாக வெளியே தெரிந்தது. சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஐவானுக்கு என்னவோ போல் இருந்தது. நரம்புகளில் இரத்தம் வேகமாகப் பாய்வதை அவனால் உணர முடிந்தது. தன் ஆடைகளின் பொத்தான்களை நீக்கியவாறு அவன் அவளை நோக்கி நடந்தான். அறையின் நடுப்பகுதியை அடைந்தபோது, ஆடைகளை எந்த திசை என்று கூட பார்க்காமல் கட்டிலின் மேல் வீசி எறிந்தான். அவன் இப்போது பாதி நிர்வாண கோலத்தில் நின்றிருந்தான். அதற்கு மேல் கொஞ்சமும் தாமதம் செய்யாமல் அவன் அவளை நெருங்கி சென்றான். அவள் அசையவேயில்லை. அவன் கையை நீட்டி அவளின் தோளைத் தொட்டான். அவள் திரும்பி நின்றாள். அடுத்த நிமிடம் இருவரும் திகைத்து நின்றனர்.
'சூசன்...!'
'ஐவான்...!'
இருவரின் மனதிலும் எப்போதோ கரும்புத் தோட்டத்தில் மழை பெய்தது ஞாபகத்தில் வந்தது. இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கம் மேலிட செயலற்று நின்றிருந்தனர். கடலலைகள் பேரிரைச்சலுடன் பாறைகளில் மோதிக் கொண்டிருந்தன.
கீழே - பழைய கால சத்திரங்களை ஞாபகப்படுத்துகிற மாதிரி அமைந்த பெரிய அறையில் கண்ணாடி டம்ளர்களுக்கும் மது குப்பிகளுக்கும் மத்தியில் அமர்ந்திருந்த சால்ஸீம் மற்ற நண்பர்களும் இரவு விருந்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இதற்கென்றே எடுத்து வைக்கப்பட்டிருந்த மது மிகவும் பழமையானதும் போதை அதிகம் கொண்டதுமாக இருந்தது. உணவு பொருட்கள் அவர்களைச் சுற்றிலும் இருந்தன. பல்வேறு பாத்திரங்களில் கடல் மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. அருகிலேயே நண்டுகள்... இறால்...
'ஐவான் நேரப்படி சரியா நடக்காமப் போயிட்டாக் கூட, நாம சரியா நடக்கணும்...' - பீதாம்பரன் சொன்னான்.
பலவான் உடனே 'நீ சொல்றது சரிதான்...' என்று தலையை ஆட்டினான்.
பென்னிக்கு இரண்டாம் எண் வந்திருந்ததால், பயங்கர டென்ஷனில் இருந்தான். மன்சூர் அவனைக் கிண்டல் செய்தவாறு என்னவோ சொன்னான். மன்சூருக்கு மூன்றாம் எண் வந்திருந்தது. பலவானுக்கு நான்காம் எண். சால்ஸீக்கு கடைசி. தன்னுடைய அதிர்ஷ்டத்தை மனதிற்குள் எண்ணி நொந்தவாறு அவன் தன்னுடைய டம்ளரில் இருந்த ரம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து தீர்த்தான்.
எப்போதோ கரும்புத் தோட்டத்தில் பெய்த சாரல் மழை...
'ஐவான்... நாம எப்படிப்பட்ட சூழ்நிலையில சந்திக்கிறோம்... பார்த்தியா?' - சூசன் அழுதாள்.
அதைத்தான் ஐவானும் நினைத்துக் கொண்டிருந்தான். சர்ச் மணியோசையும், அங்கு வாசித்த கவிசேஷ வசனங்களும், ஒற்றையடிப் பாதைக்கு மேலே நகர்ந்து கொண்டிருந்த பனிப் படலமும், மரங்களுக்கு மத்தியில் கேட்டுக் கொண்டிருந்த பறவைகளின் ஒலிகளும் அவனின் மனதில் வலம் வந்தன. புண்ணிய ஆத்மாக்கள் அறையின் மூலைகளில் நின்று கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். சூசனின் கண்களையே அவன் வெறித்துப் பார்த்தான். அவள் மவுனமாக அழுது கொண்டிருந்தாள். ஐவான் அவளின் வலது கை மணிக்கட்டைத் தொட்டான். அவள் எதுவுமே பேசாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
'என்னடா இது! ஒரே அதிசயமா இருக்கு...!' சாவி துவாரத்தின் வழியாக அறைக்குள் பார்த்த பென்னி தன்னுடன் வந்து நின்றிருந்த மன்சூரிடம் மெதுவான குரலில் சொன்னான்.
'எங்கே நான் பாக்குறேன்...' - பென்னியைச் சற்று நகரச் சொன்ன மன்சூர் சாவி துவாரத்தை நோக்கி தன் முகத்தைக் கொண்டு போனான்.
சாவி துவாரத்தின் வழியாக ஐவானையும் சூசனையும் பார்த்த மன்சூர் பென்னியின் பக்கம் திரும்பினான். நடைபெற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே விசித்திரமான ஒரு சம்பவம்தான் என்பதில் அவனுக்கும் மாறுபட்ட அபிப்ராயம் இல்லை.
'கதவைத் திறக்கட்டுமா?' - பென்னி கேட்டான்.
'கொஞ்சம் இரு...' - கையால் சைகை காட்டிய மன்சூர் கீழே அமர்ந்திருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்வதற்காக மிகவும் வேகமாக நடந்தான்.
பென்னி சாவி துவாரத்தின் வழியாக அறைக்குள் பார்த்தான். ஐவான் சூசனின் தலை முடியை கைகளால் வருடியவாறு பென்னியின் காதில் விழாத மாதிரி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். சூசன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறு, தலையை இலேசாக ஆட்டினாள். ஐவான் உணர்ச்சி மேலிட நின்றிருந்தான். அவன் சூசனின் நெற்றியில் முத்தமிட்டான். அவள் உணர்ச்சிப் பெருக்குடன் அவனின் கன்னத்தில் தன் கைகளால் தடவினாள்.
திடீரென்று வாசல் கதவைத் திறந்து சால்ஸீம் மற்ற நண்பர்களும் அறைக்குள் வேகமாக நுழைந்தனர். ஐவானும் சூசனும் ஸ்தம்பித்துப் போய் விட்டார்கள். இருவரும் கட்டிலில் இருந்தார்கள். ஐவான் எழுந்து சூசனைச் சமாதானப்படுத்துவது மாதிரி பார்த்தவாறு, சால்ஸையும் மற்ற நண்பர்களையும் ஏறிட்டு நோக்கினான்.
'சூசன் என் ஊர்க்காரி... நான் சின்னப் பையனாக இருக்குறப்பவே இவளை எனக்குத் தெரியும். ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ நான் பாக்குறேன்...'
'அதுசரி... அப்போ நீங்க இதுவரை உங்க ஊர் விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தீங்களாக்கும்! கீழே நாங்க காத்துக்கிட்டு இருக்குறதை மறந்தே போயாச்சா?'
'சால்ஸ், நான் சொன்னது உனக்கு புரியலையா?'
'புரியுது. நல்லாவே புரியுது. சரி... உன்னோட ஆடைகளை எடுத்துட்டு நீ கீழே போ. நேரம் அதிகமாயிடுச்சு...'
'சூசனைத் தனியா விடு...'
'அப்ப நாங்க என்ன செய்யிறது?'
'இப்போ நான் போகணும். நீ கீழே போ...' - பென்னி மற்றவர்கள் இருப்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஆடைகளை நீக்க ஆரம்பித்தான்.
அவ்வளவுதான் -
கோபத்தின் உச்சிக்கே போய் விட்டான் ஐவான். எல்லோரும் அறையை விட்டு உடனே போக வேண்டும் என்று அவன் கட்டளை பிறப்பித்தான். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
சூசன் ஐவானுக்குப் பின்னால் வந்து அவனின் தோள் மேல் கையை வைத்தாள். அவள் தொட்டதை அவன் உணர்ந்தாலும், தன்னுடைய எதிரிகளாக மாறி நின்றிருக்கும் நண்பர்களை விட்டு அவன் பார்வை மாறவில்லை.
'கொஞ்சம் அமைதியா இரு, ஐவான்...' சூசன் மெதுவான குரலில் சொன்னாள்.
ஐவான் திரும்பிப் பார்த்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் கரும்புத் தோட்டத்தில் பெய்த சாரல் மழை அவனின் ஞாபகத்தில் வந்தது. சால்ஸீம் மற்ற நண்பர்களும் பயங்கர கோபத்துடன் முன்னால் அடியெடுத்து வந்தார்கள். ஐவான் உணர்ச்சி மேலோங்க சூசனைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்து அவளின் உதடுகளில் முத்தமிட்டான்.
தான் பறித்தெடுத்த காளான்கள் கால்களில் விழுவதை சூசன் அறிந்தாள்.
கரும்புத் தோட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.