பாம்பும் கண்ணாடியும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6927
அந்தச் சிரிப்பு தெய்வத்துக்குப் பிடிச்சதுன்னு நினைக்கிறேன். பாம்பு மெதுவா திரும்பிப் பார்த்துச்சு. அடுத்த நிமிடம் கண்ணாடி யைப் பார்த்துச்சு. தன் உருவம் கண்ணாடியில தெரிஞ்சதைப் பார்த்துச்சு. அதற்காக கண்ணாடியைப் பார்க்குற முதல் பாம்பே இதுவாகத்தான் இருக்கும்னு நான் சொல்லல. ஆனா, கண்ணாடியையே அது சில நிமிடங்கள் அசையாம பார்த்துக்கிட்டு இருந்த தென்னவோ உண்மை. தன்னோட அழகைப் பார்த்து அது ரசிக்குதோ என்னவோ? சின்ன அரும்பு மீசை வச்சுக்கலாம்னோ, வாலை வச்சு கண்மை பூசலாம்னோ, பொட்டு வச்சுக்குலாம்னோ- சில தீர்மானங்களை அது ஒருவேளை எடுத்திருக்குமோ?
எனக்கு எதுவுமே தெரியல. இந்தப் பாம்பு ஆணா பெண்ணா? எது எப்படியோ- அது சுத்திக்கிட்டு இருந்ததை லேசா விட்டு, மெதுவா என்னோட மடியில இறங்கி, மேஜை மேல ஏறி கண்ணாடியை நோக்கி நகர்ந்து போச்சு. தன்னைக் கண்ணாடியில பார்த்து ரசிக்கிறதுக்காக இருக்கலாம்.
நான் கருங்கல் சிலை இல்ல... ரத்தமும் எலும்பும் உள்ள மனிதன்தான். மெதுவா நான் எந்திரிச்சு நின்னேன். வாசல் வழியே வராந்தாவுக்குப் போயி- அங்கேயிருந்து படுவேகமா ஒரு ஓட்டம்!''
“அப்பாடா- தப்பிச்சுட்டீங்க. எல்லாம் கடவுளோட கருணை!'' நாங்கள் சொன்னோம். ஒவ்வொருவரும் பீடியை உதட்டில் வைத்துப் புகைத்து இழுத்தோம். ஒரு ஆள் கேட்டார்:
“டாக்டர்... உங்க மனைவி இப்போ தடிமனாத்தான் இருக்காங் களா?''
“இல்ல...'' டாக்டர் சொன்னார்: “கடவுள் நினைச்சது வேற மாதிரி. படுவேகமா ஓடக்கூடிய ஒரு ஒல்லியான பெண் எனக்கு மனைவியா வந்திருக்கா!''
இன்னொரு ஆள் கேட்டார்:
“டாக்டர்... நீங்க ஓடின பிறகு, உங்களை பாம்பு துரத்துச்சா?''
டாக்டர் சொன்னார்:
“நான் வேகமா ஓடி என் நண்பன் ஒருவனோட வீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டேன். உள்ளே போன உடனே குளிச்சு, துணியை மாத்தினேன். உடம்புல தைலத்தைத் தேய்ச்சேன். மறுநாள் காலை எட்டரை மணியாகுறப்போ, அறையில இருக்குற சாமான்களை எல்லாம் எடுத்திடலாம்னு நண்பனையும், வேற ரெண்டு ஆளுகளையும் அழைச்சிக்கிட்டு நான் போனேன். ஆனால், எடுத்துட்டு வர்ற அளவுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமே இல்ல. நாங்க அங்க போறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் திருடன் எடுத்துட்டுப் போயிருந்தான். அறை காலியா இருந்துச்சு. போறதுக்கு முன்னாடி அந்தத் துரோகி ஒரு அவமானத்தை அறையிலயே விட்டுட்டு போயிட்டான்!''
“என்ன அவமானம்?'' நான் கேட்டேன்.
டாக்டர் சொன்னார்:
“என்னோட பனியன்... அது பயங்கர அழுக்கா இருந்துச்சு. அந்த ராஸ்கல் அதைப் பேசாம எடுத்திட்டுப் போய் சோப் போட்டு துவைச்சு பயன்படுத்த வேண்டியதுதானே! அதைச் செய்யாம அறையிலயே விட்டுட்டுப் போயிட்டான்!''
“அந்தப் பாம்பை மறுநாள் பார்த்தீங்களா டாக்டர்?''
டாக்டர் சிரித்தார்:
“அதற்குப் பிறகு நான் அந்தப் பாம்பைப் பார்க்கவே இல்ல... என்ன இருந்தாலும் அந்தப் பாம்பு ஒரு அழகை ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பாம்புன்றது மட்டும் உண்மை.''