செம்மறி ஆடு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5005
அவளுடைய நாற்பத்து மூன்றாவது வயதில், எப்போதும் தமாஷ் பண்ணும் மூத்த மகன் சொன்னான்:
“அம்மா, உங்களைப் பார்க்குறப்போ ஒரு செம்மறி ஆடுதான் ஞாபகத்துல வருது.”
அவள் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.
ஆனால் அன்று அவர்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போனபோது, அவள் கண்ணாடியை எடுத்துக் கவலையுடன் தன்னுடைய முகத்தை ஆராய்ந்தாள். தன்னுடைய ஒட்டிப்போன கன்னங்களை மீண்டும் சதைப்பிடிப்பானவையாக ஆக்க வேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. இளமையும் சதைப்பிடிப்பான சரீரமும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய்விரித்துப் படுத்துத் தூங்கமாட்டாள். ஆனால் ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. சமையலறையில் பால் கொதிக்க ஆரம்பித்தது.
காலை முதல் நள்ளிரவு நேரம் வரை ஓய்வே இல்லாமல் வேலை செய்து, அவள் தன்னுடைய குடும்பத்தை வளர்த்துக்கொண்டு வந்திருந்தாள். மெலிந்துபோய், வெளுத்து, இங்குமங்குமாக சில வளைவுகள் விழுந்திருக்கின்றன என்று தோன்றக் கூடிய ஒரு சரீரத்தை அவள் கொண்டிருந்தாள். ஆனால் எந்தச் சமயத்திலும் அவள் தளர்ந்து போய் விழுவதோ, புலம்புவதோ நடந்ததில்லை. அதனால் அவள் நீர் நிறைக்கப்பட்ட பாத்திரங்களை எடுத்துக் தூக்கிக் கொண்டு குளியலறையிலிருந்து சமையலறைக்கும், சமையலறையிலிருந்து குளியலறைக்கும் நடக்கும்போது, அவளுடைய கணவரும் வயதிற்கு வந்த பிள்ளைகளும் அவளுக்கு உதவ வர மாட்டார்கள். அவள் படிப்பும் நவநாகரீக விஷயங்களும் இல்லாதவளாக இருந்தாள். வீட்டைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதிலும், உணவு சமையல் பண்ணுவதிலும், துணிகளைச் சலவை செய்வதிலும் அவளுக்கு இருக்கும் திறமையைப் பற்றி அவர்கள் அவ்வப்போது புகழ்ந்து பாராட்டினர். பாராட்டு உரைகளைக் கேட்கும்போது, தேய்ந்துபோன பற்களைக் காட்டி அவள் புன்னகைப்பாள். இளைய மகன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வரும்போது, ஒருநாள் அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று சமையலறையின் இருட்டில் நின்று கொண்டு அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். காலப்போக்கில் அவனுடைய கண்களிலும் அவள் ஒரு பேயாகத் தோன்ற ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் நடக்கும் நாடகத்திற்குத் தானும் அவனுடன் வருவதாக அவள் கூறியபோது, அவன் சொன்னான்:
“அம்மா, நீங்க வரவேண்டாம். எனக்குக் குறைச்சலாக இருக்கும்.”
“அதற்கென்ன? நான் பட்டுப்புடவை அணியிறேன். என்னுடைய திருமணப் புடவை” - அவள் சொன்னாள்.
“இருந்தாலும் வரவேண்டாம்.”
மெலிந்துபோன கால்கள், இரண்டு அறைகளைக் கொண்ட அந்தச் சிறிய வீட்டில் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன. இறுதியில் அந்த இயந்திரத்திற்கும் கேடு வந்தது. அவளுக்குக் காய்ச்சல் ஆரம்பித்தது; வயிற்றில் வலியும். இஞ்சி நீரும் மிளகு ரசமும் அவளுக்கு உதவவில்லை. பத்தாவது நாள் டாக்டர் அவளுடைய கணவனிடம் சொன்னார்:
“இவங்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போகணும். இவங்களுக்கு மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் இருக்கு.”
பாடப்புத்தகங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த பிள்ளைகள் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஒரு வேலைக்காரன் அவளைச் சக்கரங்கள் இருந்த கட்டிலில் படுக்க வைத்து, தள்ளிக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, கண்களை விழித்துக்கொண்டு அவள் சொன்னாள்:
“அய்யோ! பருப்பு கரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.”
அவளுடைய கணவரின் கண்கள் ஈரமாயின.