பிதாமகன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6351
மதுவும் பெண்ணும் உணவும் மென்மையான படுக்கையும் வேகமாக ஓடக் கூடிய குதிரைகளும் நண்பர்களான மிருகங்களும் பறவைகளும் எனக்கு கட்டாயம் வேண்டும். நான் என்ன செய்யட்டும்? சரித்திரம் என்ற தூண்டில் எனக்காகப் போட்டிருக்கும் இரைகளே இவை எல்லாம். நான் இவை ஒவ்வொன்றையும் கொத்திக் கொத்தி வரலாற்றின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்தத் தூண்டில் என்னைத் தூக்கியெறிந்து கரையில் போட போவதென்னவோ உறுதி. தம்! தும்! இரண்டு முறை துடிப்பேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிடும். சரித்திரத்திற்கு என்னால் ஆன பயன் முடிந்தது. தூண்டில் வேறொரு மனிதனுக்காக மீண்டும் கீழ் நோக்கிச் செல்லும். வேறென்ன?
டேய், நம்முடைய பழைய வாழ்க்கையும் ரோம நாடும் என்னுடைய மனதை விட்டு கிட்டத்தட்ட மறைந்து போனது மாதிரிதான். ரோம மதுவின் ருசி மட்டுமே என்னிடம் இப்போது ஒட்டிக் கொண்டிருக்கிறது. நான் பல நாடுகளுக்கும் போய் அலைந்து திரிந்திருந்தாலும், நம்முடைய ரோம மதுவின் வாலில் கட்டக்கூடிய தகுதி கொண்ட வேறொரு மதுவை நான் எங்குமே பார்த்ததில்லை. இந்த யூதர்களின் மதுவை உதட்டால் தொடக் கூட முடியவில்லை. பிறகு ஒரு விஷயம்... இந்த யூதப் பெண்கள் இருக்கிறார்களே... அன்டோனியஸ், அவர்களைப் பற்றி இப்போதென்ன என்கிறாயா? டேய், ரோம் நாட்டுப் பெண்கள் எட்னா எரிமலையைப் போன்றவர்கள். புகைந்து கொண்டே இருப்பார்கள். வெடிப்பது என்பது அபூர்வ சம்பவமாயிருக்கும். ஆனால் இந்த யூதப்பெண்கள் படுக்கையில் விழுந்தால் பத்து எட்னா எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதைப் போல என்று கூறுவதே சரியானது. அவர்களின் அடக்கமும் வெட்கமும் பிரார்த்தனையும் விரதமும்& எல்லாமே ஒரு மூடுபனியைப் போல. நாம் அதற்குள் தட்டுத் தடுமாறி தேடி அவர்களைப் படுக்கையில் நான்கு சுவர்களுக்குள் கொண்டு வந்து போட்டால் அதற்குப் பிறகு என்ன நடக்குமென்று உனக்குத் தெரியுமாடா? அவர்களின் ஒத்துழைப்பு இருக்கிறதே! அடடா... டேய், ரோமப் பெண்களின் தடித்து கொழுத்து போன உடல் வாகைக் கொண்டவர்கள் அல்ல இந்த யூதப் பெண்கள். இவர்களின் உடம்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எந்தவொரு அலட்டலும் இல்லாமல் அவ்வளவு அமைதியானவர்கள் இந்த யூதப் பெண்கள். நான் இந்தப் பெண்களுக்கு மத்தியில் வந்து வாழ ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நீ நினைத்துப் பாரடா. எனக்கொரு சந்தேகம். இந்த யூத ஆண்கள் மொத்தத்தில் பிரயோஜனமில்லாதவர்கள் என்பதுதான் அது. முன்பிருந்த காலமாக இருந்தால் நீயும் நானும் இங்கு ஒரு வெற்றிப் பயணம் நடத்தியிருக்கலாம். இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது இல்லையா? ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமல் போகிறது. ஒரு இடத்தில் மது நன்றாக இல்லை. பெண்கள் நன்றாக இருக்கிறார்கள். மற்றொரு இடத்தில் மது நன்றாக இருக்கிறது. ஆனால், பெண்கள் மனதிற்குப் பிடிக்கிற மாதிரி இல்லை. மதுவும், மங்கையும் மீனும் பழங்களும்& எல்லாமே நல்லதாக இருக்கும் ஒரு இடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அங்கே நாம் இருக்கமாட்டோம்.
அன்டோனியஸ், இந்தக் கடிதம் கிடைத்தவுடன் நீ ஒருமுறை இங்கு வந்தால் இந்த விஷயங்களை எல்லாம் நீயே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு பண்ணித் தருவேன். ஆனால், உன்னுடைய கடிதத்தைப் படிக்கும் போது, நீ மிகவும் நிலை குலைந்து போயிருப்பது போல் தெரிகிறதே. ரோம் நகரத்தின் மத்தியில் நீ நடத்துவதாகச் சொல்லும் உதவி மையத்தின் அர்த்தம் என்ன? நீ ரோம சாம்ராஜ்யத்தையும் இந்த உலகத்தையும் திருத்தி நன்றாக ஆக்கப் போகிறாயா என்ன? சில விலைமாதுகளை மனம் மாறச் செய்வதாலும் அனாதை கர்ப்பிணிகள் பிரசவமாவதற்கு இடத்தைத் தந்து குழந்தைகளை ஏற்றுக் கொள்வதாலும், சாவதற்கு அவிழ்த்து விடப்பட்ட குதிரைகளுக்கு மேய இடம் தந்ததாலும் முன்பு நாம் ஒரு நாணயத்தைக் காண்பித்து வேலை வாங்கிய தெருக் குண்டர்களுக்கு முந்திரித்தோப்பு வேலை தந்ததாலும் நீ அடையப் போவது என்ன? அதற்குப் பதிலாக நீ வேறொன்று செய்திருக்கலாம். நீ போய் அந்த சக்ரவர்த்தியையும் செனட்டர்மார்களையும் திருத்தப் பார்த்திருக்கலாம். டேய், நீ ஐம்பது பேரைக் காப்பாற்றினாலும், ஏன் ஐந்நூறு பேரைக் காப்பாற்றினாலும் இந்த ரோம சாம்ராஜ்யம் காப்பாற்றப்பட்டு விடுமா என்ன? இதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் சக்ரவர்த்திகள் அல்லவா? அவர்களிடம்தானே அதிகாரமும், பலமும், மகத்துவமும், படைகளும், வரி வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள்? அவர்கள் பெரிய சாலைகள் அமைக்கும் போதும், கொளீஸியம் கட்டும் போதும், ஆலயங்கள் உண்டாக்கும் போதும், கிணறு தோண்டும் போதும், நாடக அரங்கேற்றம் செய்கிறபோதும் அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன. போரும் கலகமும் உண்டாகிறபோது, சரித்திரத்தில் லேசான சலனங்கள் உண்டாகின்றன. இதில் தப்பிப்பதற்கு எங்கு இடம் இருக்கிறது? யார் யாரைக் காப்பாற்றுவது? உனக்கு இதில் என்ன இடம் இருக்கிறது எனக்காவது இதில் ஒரு கருவியின் இடமாவது இருக்கிறது. காப்பாற்ற நினைத்தாலும், அதெல்லாம் நடக்காதடா. அந்தக் கதையை நான் உன்னிடம் இன்னும் சொல்லவில்லை. நான் இப்போது கூறுவதுதானடா உண்மை. வரலாறு என்பது இப்படித்தான் இருக்கிறது. சில பட்டாளக்காரர்களும், சில காலத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். இன்னொரு பக்கம் சக்ரவர்த்திமார்களும் பிரபுக்களும் செனட்டர்மார்களும் உன்னைப் போன்ற புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்களும் உலகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். சூரியன் உதிக்கிறது. இரவு வருகிறது. குளிர், உஷ்ணம், பால்ய காலம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம், மரணம்... மழை பெய்யவோ பெய்யாமலோ இருக்கிறது. சில ஆலிவ் பழங்களுக்கு ருசியில்லை. சில பழங்கள் மிகவும் ருசியாக இருக்கின்றன. சில கிணறுகள் வற்றுவதேயில்லை. சில கிணறுகள் லேசான கோடையில் கூட வற்றிப் போய்விடுகின்றன. டேய், வரலாற்றுக்கு யார் மீது எந்தவித கருணையுமில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களைச் சிறிது கூட நம்பவும் வேண்டாம். காரணம்& வரலாற்றின் தூண்டிலில் சிக்கிக் கிடப்பவர்கள்தான் அவர்களும். என்னை இறுக்கிக் கட்டிப் போடுவது பெண் என்றால், அவர்களை வீழ்த்துவது பெண்ணை விட இறுகக் கட்டிப் போடப் பார்க்கும் ஏதாவது எண்ணங்களாக இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு நாள் ஒரு இழுப்பு... ப்லும்! தம்! தும்! இரண்டு உதைப்பு, ஒரு வாய் திறத்தல், லேசாக தலையைச் சாய்த்தல்... எல்லாம் முடிந்தது.