படம் ஓடாததற்குக் காரணமே மம்மூட்டிதான்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3022
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
படம் ஓடாததற்குக் காரணமே மம்மூட்டிதான்!
சமீபத்தில் நான் மம்மூட்டி நடித்த 'பால்ய கால ஸஹி' மலையாள திரைப்படத்தைப் பார்த்தேன். இதே பெயரில் வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய புகழ் பெற்ற புதினத்தின் திரை வடிவமே இப்படம்.
நான் இப்புதினத்தை 'இளம் பருவத்துத் தோழி' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். எனக்கு நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தந்த நூல் அது. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நான் அந்த படத்தை பார்த்தேன். இறுதியில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது ஒரு அருமையான இளம் பருவத்து காதல் கதை. 20களில் இருக்கக் கூடிய கதாநாயகன் மஜீத்தின் கதாபாத்திரத்தில் 60 வயதைத் தாண்டிய மம்மூட்டி நடித்தால் எப்படி இருக்கும்? அதுவும். . . மீனாவின் மகனாக. என் மனதில் மஜீத் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று மனதில் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அதை முற்றிலும் சிதைத்து விட்டார் மம்மூட்டி. மஜீத்தாக அவர் நடிக்க ஆசைப்பட்டிருக்கலாம். தவறில்லை. ஆனால், அதை அவர் 40 வருடங்களுக்கு முன்பு செய்திருக்க வேண்டும். இப்போதல்ல. இந்த மிகப் பெரிய குறையை நீக்கி விட்டுப் பார்த்தால், படத்தை நன்றாகவே இயக்கியிருந்தார் அறிமுக இயக்குநரான ப்ரம்மோத் பய்யனூர். இளம் கதாநாயகன் ஒருவர் நடித்திருந்தால், இந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்திருக்கும். மம்மூட்டி நடித்த ஒரே காரணத்தால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மஜீத்-ஸுஹ்றா காதலை ஒரு சோக காவியமாகவே புதினத்தில் படைத்திருந்தார் பஷீர். அந்த உணர்வு படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகவில்லை என்பது உண்மையிலேயே தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றமே. . .