மருந்து
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6771
சாயங்கால மேகங்கள் மர உச்சிகளை இளம் சிவப்பு நிறத்தில் மூடிக் கொண்டிருந்தபோது, அவள் சாளரத்தின் அருகில் நின்றவாறு கண்ணாடிகளைப் பார்த்து அந்தக் குங்குமப் பொட்டைச் சரி செய்து கொண்டிருந்தாள். துடிதுடிப்பாக இருந்த கண்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன.
வெண்மையாக எழுந்து நின்ற மார்பகங்கள் கண்ணாடியில் முழுமையாக நிறைந்து காட்சியளித்தது. இடது கையால் ஆர்வத்துடன் அவள் தடவினாள். அப்போது நரம்புகள் வழியாக ஒரு குளிர்ச்சி பாய்ந்து செல்வதைப்போல அவள் உணர்ந்தாள். சுருண்டு அடர்த்தியாகக் காட்சியளித்த கூந்தலை மார்பின்மீது சிதற விட்டுக் கொண்டு அவள் நின்றிருந்தாள். அந்த எதிர் உருவமும் மிகவும் அழகாகவே இருந்தது. கண்கள் நெல்வயல் போய் முடிவடையும் மலைச்சரிவையே பார்த்தன.வெள்ளை நிற ஆடை அணிந்த திடகாத்திரமான மனிதன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அடுத்த நிமிடம் மரங்கள் இடைவிடாமல் வளர்ந்து காட்சியளிக்கும் ஒற்றையடிப் பாதையில் அவன் மறைந்துவிட்டான். அத்துடன் அவளுடைய இதயத்தில் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சு உண்டானது. பாதி மூடியிருந்த கண்களால் அவள் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அப்போது சிரமம் நிறைந்த ஒரு முனகல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் காற்றைப்போல அங்கு வேகமாக வந்தது. அது தொடர்ந்து அவளைத் தொல்லைக்கு உள்ளாக்கியது.
“நாசம் பிடிச்ச விஷயம்!”-அவள் திரும்பி சமையலறையை நோக்கி நடந்தாள். விறகுக் கொம்புகள் அடுப்பிற்கு வெளியே கிடந்தவாறு எரிந்து கொண்டிருந்தன. வெறுப்புடன் அவள் அழைத்தாள்:
“அடியே... மாதவி!”
“என்ன?”
இப்படி வெளியே எங்கோ இருந்து பதில் வந்தது. அவள் கோபத்துடன் அழைத்துக் கேட்டாள் :
“மருந்து கொடுத்துட்டேல்லடீ?”
“இல்ல...”
“சவம்!”
அவள் காலால் விறகுக் கொம்பை அடுப்பிற்குள் தள்ளி விட்டாள். பிறகு கஷாயச் சட்டியைத் திறந்தபோது, மேலே வந்த ஆவி மூளையையே செயலிழக்கச் செய்துவிட்டதைப்போல அவள் உணர்ந்தாள். வெள்ளைநிறக் கோப்பையில் எடுத்து வைத்த கருப்பு திரவத்தில் தன்னுடைய மார்பு தெரிவதை அவள் பார்த்தாள். அவளிடமிருந்து பரவிய இன்னதென்று கூற முடியாத வாசனைக்கு மீண்டும் அங்கு முக்கியத்துவம் கிடைத்தது.
அன்னப் பறவையைப்போல அந்த அறைக்குள் அவள் சென்றாள். சுவருடன் சேர்த்துப் போடப்பட்டிருந்த கட்டிலில் சிவப்பு நிறப் போர்வைக்குக் கீழே படுத்திருந்த மனிதன் தலையை மெதுவாகத் திருப்பினான். சிறு சிறு ரோமங்கள் வளர்ந்திருந்த எண்ணெய் பசை அற்ற நீளமான முகம். போர்வையை விலக்காமல் முனகியவாறு அவன் எழுந்து உட்கார்ந்தான். மிகவும் சிரமப்பட்டு இருமிக்கொண்டே துப்பிய சளி மஞ்சள் நிறத்தில் சுவரில் படிந்திருந்தது. அதில் ரத்தம் கலந்திருந்தது. எண்ணெய் படிந்திராத தலை முடியைப் பின்னோக்கித் தடவி விட்டவாறு, நீட்டிய கை நடுங்கிக் கொண்டிருந்தது. பாத்திரத்தின் மேற்பகுதிக்கு மேலே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அவளையே வேட்கையுடன் இழுத்துக் குடிக்கின்றனவோ? அந்தக் கண்களை எஜமான்மீது பாசம் வைத்திருக்கும் நாயின் கண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவள் நினைத்தாள். ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அவனுடைய உருவத்தை நினைத்துப் பார்க்க அவள் சிரமப்பட்டு முயற்சித்தாள். பாத்திரத்தை வாங்கிக் கீழே வைத்துவிட்டு, அவள் சாளரத்திற்கு அருகில் போய் நின்று கொண்டாள்.
அவன் முனகினான்:
“என் ஜானு”,
“என்ன?”
அவள் திரும்பி நின்றாள். அவன் எதுவும் பேசவில்லை. அந்தக் குரலில் இருந்த உயிரற்ற தன்மை இதயத்தை சுட்டெரித்தது. “என் அம்மா!”- எதுவுமே செய்ய முடியாமல் அவன் கட்டிலில் சாய்ந்தான். வெளியில் தெரிந்த பாதங்களை அவள் போர்வையை இழுத்து மூடினாள். குலுங்கிக் குலுங்கி அவள் நடந்தாள். நகர்ந்து கொண்டிருக்கும் பருமனான அந்த உடலையே பார்த்துக் கொண்டு அவன் நீண்ட பெருமூச்சை விட்டான்.
“ஜானு...”- அவன் முனங்கினான்.
வாசற்படியில் நின்று கொண்டு அவள் முகத்தைச் சற்று திருப்பினாள். அந்த பார்வை இதயத்தை மகிழச் செய்வதாக இருந்தது.
“வைத்தியர் போயிட்டாரா?”
“போயிட்டார்.”
“மருந்து?”
“ஓ... கொண்டு வருவார்.”
அவள் புன்னகைத்தாள். மனதை மயக்கக்கூடிய குளிர் நிலவின் ஒளி! அதன் குளிர்ச்சியான ஒளிக் கீற்றுகள் இதயத்தை வருடுவதைப்போல அவன் உணர்ந்தான்.காதல் வயப்பட்டு, மிகவும் சிரமப்பட்டு அவனும் மெல்லப் புன்னைகத்தான்.
வாசல் வழியாக அவன் வெளியே பார்த்தவாறு படுத்திருந்தான்.தென்னை மரங்கள் நிறைந்த தோப்பும், கீழே விளைந்து கிடக்கும் நெல் வயலும், அது போய் முடிகிற மலைச்சரிவும்... அவன் அந்த இடங்களில் நடந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. வைத்தியரின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக இருந்தன. ஒரு வருடமாகத் தவறாமல் அவர் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். சிறிய ஒரு சாரல் மழையில் நனைந்ததால் சயரோகமாக மாறிவிடுமா? ஆனால், சயரோகம் என்று அவர் கூறவில்லை. வைத்தியர் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருப்பவர். அவருடைய மருந்திற்கு நல்ல விளைவு இருக்க வேண்டும். பலரிடமிருந்து வாங்கியிருக்கும் சான்றிதழ்களை ஃப்ரேம் போட்டு மருத்துவமனையில் அவர் தொங்க விட்டிருந்தார். ஒற்றையடிப் பாதை மறைந்துவிட்டது. மலை,போர்வையால் மூடியதைப்போல உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கம்பீரமான ஒரு அமைதி அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நீல வானத்துடன் ஒட்டிக்கொண்டு, கருப்பு மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தது. நிலத்தில் இருந்து இருண்ட காற்று மேலே எழுந்து வருகின்றதோ? அது ஆகாயம்வரை பரவி விட்டிருந்தது. பூமியின் விளக்கு அணைந்துவிட்டது... அமைதியான இருட்டு அசைவே இல்லாமல் இருந்தது... அவள் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தான்.
திடீரென்று எரிய வைக்கப்பட்ட லாந்தர் விளக்குடன் வேலைக்காரி அறைக்குள் வந்தாள். தீபத்தின் சுடர் தங்கம் உருகியதைப்போல இருந்தது. அழகான அவளுடைய உடல் மஞ்சள் வெளிச்சத்தில் பிரகாசமாகக் காட்சியளித்தது. முனை வளைந்த கம்பியில் மாட்டுவதற்காக விளக்கை உயர்த்தியபோது, சுவரில் அவளுடைய நிழல் விழுந்தது. அது தரையில் முளைத்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்- ஒரு கரும் பாறையை மடியில் வைத்துக் கொண்டு கீழ்நோக்கிச் சாய்ந்திருக்கும் ஒரு குன்றை ஞாபகப்படுத்தியது.
விளக்கின் ஆட்டம் நின்றது. எந்தவித அசைவும் இல்லாமல் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் சுடரை அடைய சிறிய ஈக்கள் சிம்னிக்கு வெளியே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. முலாம் பூசப்பட்ட ஃப்ரேமில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இருந்து இரண்டு கண்கள் மட்டுமே தெளிவாகத் தெரிந்தன. எவ்வளவு கருணை நிறைந்தவையாக அந்தத் தாயின் கண்கள் இருக்கின்றன! தாயும் குடும்பமும் இல்லாமல் போனாலும் ஜானு கிடைத்தாள் எனினும், தாயின் பாசம்!