மருந்து - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6777
அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது. தொண்டையில் ஏதோ வந்து தங்கிவிட்டிருந்தது. திரும்பத் திரும்ப சிரமப்பட்டு அவன் இருமினான். அது செம்புப் பானையை வெளியே இருந்து தட்டுவதைப் போன்ற சத்தத்தை உண்டாக்கியது. அவனுடைய நெற்றி வியர்வையால் நிறைந்தது. காய்ச்சல் இருக்கிறதோ என்று அவன் சந்தேகப்பட்டான். மூக்கிலிருந்து வந்த மூச்சு மிகவும் வெப்பமாக இருந்தது. நெஞ்சில் பெரிய சுமை இருப்பதைப்போல இருந்தது. கீழ்நோக்கி நாம் இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று அவன் பயந்தான்.
வேலைக்காரி ஒரு டம்ளர் பாலையும் ஒரு காய்ந்து போன ரொட்டியையும் எடுத்துக்கொண்டு வந்தாள். பாதி பாலைக் குடித்தவுடன், அவனுக்குச் சற்று நிம்மதி உண்டானதைப்போல இருந்தது. அவள் ரொட்டியை அறுத்துப் பாலில் தொட்டுக் கொடுத்தாள். அவன் அதைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவள் அவ்வப்போது அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எதற்காக கவலை? அவளுடைய கண்கள் எதற்காக பனிக்க வேண்டும்?
அவன் படுத்தான். போர்வையை எடுத்து அவள் நன்றாக மூடிவிட்டாள். அவன் சொன்னான்:
“காய்ச்சல் இருக்கான்னு பார்.”
அவள் துணியின் முனையால் துடைத்துவிட்டு, குளிர்ச்சியான தன் கையை அவனுடைய நெற்றியில் வைத்தாள். பாத்திரங்களின் பாசியும், புகையும், வியர்வையும், சாம்பலும் சேர்ந்து உண்டான ஒரு வாசனை அவனைத் தழுவிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பில் அவளுடைய கை பட்டது. இதயம் அவளுடைய கையில் படுவதைப்போல அவன் உணர்ந்தான். அவளுடைய தொடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அவன் மீண்டும் கேட்டான்:
“காய்ச்சல் இருக்குதா?”
“கொஞ்சம் வெப்பம் இருக்கு.”
அந்த மூச்சுக் காற்று அவனுடைய மூக்கில் அடித்தது. அது நறுமணம் நிறைந்ததைப்போல் அவனுக்கு இருந்தது. அவளுடைய இதயத்தைத் தழுவிவிட்டு வந்ததாக அது இருக்குமோ? அவன் முனகினான்:
“மாதவி...”
“என்ன?”
“அம்மா எங்கே?”
“புத்தகம் படிச்சுக்கிட்டு படுத்திருக்காங்க.”
நிமிடங்கள் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகமான ஒரு நிம்மதி அவனை வந்து ஆக்கிரமித்தது. அவள் கேட்டாள்:
“மருந்து கொண்டு வரட்டுமா?”
“வேண்டாம்... உறக்கம் வருது.”
அவள் விளக்கின் திரியை இறக்கினாள். இருள் பரப்பில் மேலே வந்த இளம் மொட்டைப்போல தீபத்தின் சுடர் இருந்தது. அவனுடைய கண்களுக்கு சுமை அதிகமாகிக் கொண்டே வந்தது... அகன்று அகன்று தூர தூரமாக அந்த இளம் மொட்டு நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. அப்படி... அப்படி... அவன் தூங்கியும் விட்டான்.
சுய நினைவு வந்தபோது அவன் வியர்வையில் மூழ்கிக் கிடந்தான். தொண்டை வறண்டு போயிருந்தது. இதயம், நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பஞ்சு மூட்டையைப்போல அவனுக்குத் தோன்றியது. தாகம்...மிகவும் கடுமையான தாகம்! அவன் கண்களைத் திறந்தான். சுற்றிலும் அடர்த்தியான இருட்டு! அவன் மருந்துக்காக அழைக்க முயற்சித்தபோது... அருகில் எங்கோ ஒரு அடக்கிய சிரிப்பு! தொடர்ந்து ‘ஓ...’ என்றொரு சிணுங்கல்! இளமை தவழும் பெண்ணிடமிருந்து வந்த காமம் கலந்த இனிய குரல்... அவனுடைய ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு ரோமங்களும் முன்னெச்சரிக்கையுடன் எழுந்து நின்றன. மூச்சை அடக்கிக்கொண்டு, அவன் கவனித்தான். இருட்டில் இருந்து தாழ்வான குரல் இவ்வாறு வந்து ஒலித்தது:
“என் திருடி!”
“ம்... வீடு வீடா... ஏறி... இறங்குகிற...”
“என் தேன் அடையாச்சே!”
“பிறகு... இப்படியே எத்தனை நாட்கள்... இருப்பது?”
“எல்லாம் சரியாகும்... இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுமையாக இரு”
“என்... இதயம்...வலிக்குது!”
“அதற்குத்தானே மருந்து!”
(சிறிது நேரத்திற்கு அமைதி)
“ஓ... என்னை... முத்தம் தந்து தந்து... நெரிச்சுக் கொல்லுங்க.”
“என்ன... மருந்து வேண்டாமா?”
“பிறகு... வே... ண்டாமா?”
மீதியை அவன் கேட்கவில்லை. நரம்புகளில் ஒரு வெறி பாய்கிறதா? முன்பு எங்கோ நடைபெற்ற ஒரு சம்பவம்! பதைபதைப்புடன் அவன் எழுந்து தட்டுத் தடுமாறி மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு சாளரத்தை மெதுவாகத் திறந்தான். கண் தெரியவில்லை. முழு உலகமும் சுற்றிக் கொண்டிருந்தது... எவ்வளவு நிமிடங்கள் அப்படியே நின்றோம் என்று அவனுக்கே தெரியவில்லை. பார்வை தெளிவடைந்தபோது, உறங்கிக் கொண்டிருந்த நிலவு வெளிச்சத்தில், கட்டிப் பிணைந்த ஒரு உருவம் தெரிந்தது.
அவனுடைய இதயம் வெடித்து விடுவதைப்போல அவன் உணர்ந்தான். வாயில் நீர் இல்லை. சத்தம் வெளியே வர மறுத்தது. மூச்சு இல்லாமல் கை, கால்கள் குழைந்து அவன் விழுந்தான்.
சுய உணர்வு வந்தபோது, அவன் கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்திருந்தான். நல்ல பிரகாசமான பகல். ஒரு புதிய உற்சாகம் அவனை வந்து ஆக்ரமித்திருந்தது. அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். ஜானகியும் அவளுடைய தாயும் சகோதரனும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்களும் அறையில் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். அழும் முகத்துடன் வேலைக்காரி கதவுக்கு அருகில் நின்றிருந்தாள். ஒவ்வொரு முகங்களிலும் அவனுடைய பார்வை பதிந்தது. இறுதியில் மனைவியின் வெளிறிப்போன முகத்தில் போய் நின்றது. திரை போடாமல் அவளுடைய இதயத்தை எரிக்கக்கூடிய இரண்டு நெருப்புக் கட்டைகளோ அவை?
அவன் மெதுவான குரலில் கேட்டான்:
“ஜானு... யார் அது?”
“எது?”
அவள் சுற்றிலும் பார்த்தாள். அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் . வறண்டு போன ஒரு பொய்யான சிரிப்பு! அப்போது வைத்தியர் படியைக் கடந்து வந்து கொண்டிருந்தார். எழும் செருப்பின் ஓசையைக் கேட்டு ஜானகி சொன்னாள்:
“வைத்தியர்.”
“ஓ... வை...த்தியர்!”
நெருப்புக் கட்டைகளைப்போல அவளுடைய கண்கள் ஜொலித்தன. பாண்டி நாட்டு துப்பட்டா அணிந்து, இரட்டைக் கரை வேட்டி உடுத்தியிருந்த அழகான தோற்றத்தைக் கொண்ட வைத்தியர் வழக்கமான புன்னகையுடன் அறைக்குள் வந்தார். நோயாளி உணர்ச்சி வேகத்துடன் கேட்டான்:
“வைத்தியரே, அதைக் கொண்டு வந்தீங்களா?”
“எதை?”
“அந்த மருந்தை...? ஜானுவின் இதய வலிக்கான மருந்தை...!”