இரவின் முடிவு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6987
ஜன்னல் அருகில் வெளியே பார்த்தவாறு அந்த மனிதர் அமர்ந்திருந்தார். எப்போதும் உறங்கப் போகிற நேரம் கடந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது அவரின் மனதில் நேரத்தைப் பற்றியோ தூக்கத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட எண்ணம் இல்லை என்பதே உண்மை. வெறுமனே வெளியே உற்று நோக்கியவாறு அந்த மனிதர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார்.
வெளியே நல்ல இருட்டு. விளக்குகள் இன்னும் போடப்படாமல் இருந்தால், அறைக்குள்ளும் கொஞ்சம்கூட வெளிச்சமே இல்லாமல் இருந்தது. ஆனால், அப்படி இருட்டில் உட்கார்ந்திருப்பதுதான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருட்டில் தனியாக அமர்ந்து...
அந்த மனிதரின் கையில் பிரிக்கப்பட்ட ஒரு தாள் இருந்தது. குண்டு குண்டாக பெரிதாக நீல வர்ணத்தில் பக்கம் முழுக்க எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம். அவர் அவ்வவ்போது தன்னுடைய விரல்களால் கண் பார்வை தெரியாத ஒரு மனிதன் செய்வதைப் போல கடிதத்தை இறுகப் பற்றுவதும், அதை மென்மையாகத் தடவுவதுமாய் இருந்தார்.
அந்த இளம் பெண் எழுதியிருந்தாள்.
'எனக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் எனக்கு எந்தக் காலத்திலும் பதில் கடிதம் எழுதப் போவதில்லை. ஆனால், பதில் கிடைக்கிற கடிதங்களை விட பதிலே கிடைக்காத கடிதங்களைத்தான் நான் விரும்பத் தொடங்கியிருக்கிறேன். இது ஜீலை மாதத்தில் நான் எழுதும் கடிதம். அடுத்த கடிதம் எப்போது எழுதுவேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் கட்டாயம் எழுதுவேன்.
என்னை ஞாபகத்தில் இருக்கிறதா?
மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுதான் நாற்று நடும் வேலை தொடங்கியது. ஜன்னல் திறந்திருக்க, உடனே ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியது.
இரவு நேரத்தின் களைப்பு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து எழுதுகிறேன்.
மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அம்மா படுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள்.
அங்கே நாற்று நடும் வேலை ஆரம்பமாகிவிட்டதா?
என் மேல் கோபம் உண்டாகக் கூடாது. ஏன் இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதுகிறேன் என்று என்னைப் பார்த்து ஒரு நாளும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் எதற்கு நான் கடிதம் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது.
வெளியே நிலவு காய்ந்து கொண்டிருந்தது. நிலவு வெளிச்சத்தில் தூரத்தில் இருந்த காடுகள் மேலும் கறுப்பாகத் தெரிந்தன.
அந்த மனிதரின் களைத்துப் போன கண்கள் யாரையோ எதிர்பார்ப்பதைப் போல காட்டை நோக்கியும், காட்டைத் தாண்டி அப்பாலும் சென்றன.
எங்கும் ஒரு சிறு அசைவோ ஓசையோ எதுவுமே இல்லை. மொத்தத்தில் அங்கு இருந்தது நிலவு வெளிச்சமும் காட்டின் இருட்டும் மட்டுமே.
பிறகு... காட்டைக் கடந்து நிலவிற்குள் பெண் வந்தாள்.
ஆனால், அது அந்தப் பழைய இளம் பெண்தான்... அந்த மனிதருக்குச் சமீப காலமாகக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிற இளம் பெண் இல்லை. அவளிடம் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. முன்பு தான் பார்த்தது மாதிரியே இப்போதும் அவள் இருப்பதாக அவருக்குப்பட்டது. அந்தப் பெண் பேசத் தொடங்கியபோது... அவளின் படபடப்பான கேள்விகளும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சத்தமும்... முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியேதான்.
அவளின் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவளின் இளமை தவழும் உள்ளங்கையைத் தடவியவாறு அவர் சொன்னார்:
"எனக்கு ரொம்பவும் களைப்பா இருக்கு. போதாக் குறைக்கு நான் இப்போ ஒரு நோயாளி வேற..."
அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாத மாதிரி அந்தப் பெண் அவரின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவர் தொடர்ந்து சொன்னார்:
"ஆனா... பரவாயில்ல... நீ இங்கே என் பக்கத்துல இருக்குறப்போ... நீ வருவேன்னு எனக்குத் தெரியும். ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது... முதல் முதலா நாம சந்திச்சது போல..."
அந்தப் பெண்ணுக்கு அப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவள் ஒருவித குழப்பத்துடன் அந்த மனிதரின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.
"உனக்கு ஒரு தம்பி இருந்தானே! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... நாம முதன் முதலா சந்திச்சப்போ அவனோட கையில தகரத்தால் செய்யப்பட்ட ஒரு சின்ன விமானம் இருந்துச்சு! அது ஒரு சணல்ல கட்டப்பட்டிருந்துச்சு. தலைக்கு மேல அவன் அந்த சணலை வட்டமா சுத்திக்கிட்டே இருந்தான்..."
அந்த இளம் பெண் அவரைப் பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னாள்:
"நீங்க அதையெல்லாம் இன்னும் மறக்கலியா?"
"என்னால எப்படி மறக்க முடியும்?" அந்த மனிதர் கவலையுடன் சொன்னார்: "அதை மறக்கத்தான் முடியுமா? அப்படி மறந்தா என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?"
அந்தப் பெண் சொன்னாள் :
"நீங்க சொல்றது சரிதான். நானும் எதையும் மறக்கல..."
அப்போது அவர் கேட்டார் :
"ஆமா நீ சொல்லலியே... அவன் இப்போ என்ன செய்றான்?"
பெண் சிரித்தவாறு சொன்னாள் :
"அவன் இப்போ பெரிய ஆள். அமெரிக்காவுல போயி படிச்சு... அவனுக்கு இப்போ மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க..."
அவர் அடுத்த நிமிடம் சொன்னார்:
"அப்படி இருக்குறதுதான் எனக்குப் பிடிக்கும்..."
அவள் சொன்னாள் :
"எனக்கும் தான்."
அழகான தன்னுடைய பற்கள் வெளியே தெரியும் வண்ணம் அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அப்போது அவளுடன் சேர்ந்து அவரும் சிரித்தார்.
அந்தப் பெண் என்னவோ ஞாபகத்தில் வந்த மாதிரி சொன்னாள் :
"நான் இப்போ திரும்பிப் போறதா இல்ல..."
அவர் வியப்புடன் கேட்டார்:
"பிறகு...?"
அந்தப் பெண் அவரின் தளர்ந்து போன கைகளைத் தடவியவாறு சொன்னாள் :
"நான் இங்கேயே இருக்கப் போறேன். உங்ககூட... உங்களுக்கு ஒரு துணையா..."
பலமான ஒரு காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல இதைக் கேட்டதும் அந்த மனிதர் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்.
"இங்கேயா? இங்கே எப்படி தங்க முடியும்? இங்கே நீ தங்குற அளவுக்கு ஒரு அறை இல்லியே! பிறகு... உனக்குச் சாப்பாடு பண்ணித் தர்றது யாரு? ஒரு கப் தேநீர் தயாரிச்சுக் கொடுக்கக் கூட என்னால முடியாதே!"
அவரின் குரலில் சந்தோஷமும் சங்கடமும் இரண்டறக் கலந்திருந்தன.
அந்தப் பெண் சொன்னாள் :
"எனக்கு எல்லாமே தெரியும். சாதம் தயார் பண்ணவும், குழம்பு வைக்கவும், பலகாரங்கள் தயார் பண்ணவும், சுவையான தேநீர் தயாரிக்கவும்... இது எல்லாம் தயார் பண்ணி விருப்பப்படி உங்களை நான்..."