
"நாம முதன் முதலா சந்திச்சப்போ நீ பாடிய பாட்டு... ஞாபகத்துல இருக்கா?"
அந்தப் பெண் சொன்னாள்.
"சாந்தாரே, ஜாரே, ஜாரே... சரியா?"
அவர் தலையை ஆட்டினார். பிறகு... தனக்குத் தானே சொல்லிக் கொள்வதைப் போல சொன்னார் :
"காலம் எவ்வளவோ கடந்து போயிடுச்சு. நாம ரெண்டு பேரும் அதை நினைச்சுப் பார்க்கிறோம்..."
அந்தப் பெண் சிரித்தாள். ஆனால், அவளின் சிரிப்பில் மகிழ்ச்சி மட்டுமல்ல, சோகமும் கலந்திருந்தது.
பிறகு அவள் சொன்னாள்:
"நாம புறப்படலாம். இங்கே ஒரு பழைய கோட்டை இருக்குல்ல? கடற்கரையில்... முக்கால்வாசி இடிஞ்சி போய்... நாம முதல் தடவையா சந்திச்ச... ஞாபகத்துல இருக்கா? நாம அங்கே போகலாம். எனக்கு ரொம்பவும் விருப்பமான ஒரு இடம் அது..."
அவர் புன்னகைத்தவாறு சொன்னார் :
"எனக்குத் தெரியும்..."
கடற்கரையில் முக்கால் பகுதி இடிந்து போய் காணப்படும் பழைய கோட்டை. பாசி பிடித்த தளங்கள்... சிதிலமடைந்து போயிருக்கும் சுவர்கள்... எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கும் வயதான காற்றாடி மரங்கள்...
ஒரு சோகத்தில் இருப்பதைப் போல உரத்த குரலில் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் கடல்...
மறையப் போகிற சூரியனைப் பார்த்தவாறு அவர்கள் நீண்ட நேரம் நின்றிருந்தார்கள்.
கடைசியில் அந்தப் பெண் சொன்னாள் :
"நாம திரும்பிப் போகலாம்... இருட்ட ஆரம்பிச்சிடுச்சு..."
ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்தவாறு எதுவுமே பேசாமல் அவர்கள் வெளியே நடந்தார்கள்.
காலையில் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருக்கும் கேட்டைத் திறந்து பக்கத்து வீட்டு கிழவி என்றைக்கும் வருவதைப் போல அன்றும் கையில் பாலுடன் வந்தாள். அந்தச் சமயத்தில் அந்த மனிதர் வராந்தாவில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதைத்தான் அவள் இதுவரை பார்த்திருக்கிறாள். ஆனால்... அன்று வராந்தாவில் யாருமே இல்லை. காலியாக இருந்தது.
பத்திரிகை போடும் பையன் வீசி எறிந்த பத்திரிகை பூமியில் கிடந்தது.
புதர் மண்டி கேட்பாரற்றுக் கிடந்த பூமியில் நடந்த கிழவி வாசலுக்கு வந்தாள். சுற்றிப் பார்த்தாள். என்னவோ அவளுக்கு இடித்தது.
வீட்டின் முன் பக்க வாசல் திறந்து கிடந்தது.
கிழவி இரண்டு மூன்று முறை அழைத்தும் யாரும் வெளியே வரவில்லை. கடைசியில் அவள் திறந்து கிடந்த வாசல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தாள்.
ஜன்னல்கள் பத்திரமாக அடைக்கப்பட்ட அறையில் மேஜை மேல் தலையைச் சாய்த்தவாறு அந்த மனிதர் கிடந்தார்... அவரின் இறுகப் பற்றியிருந்த கையில் ஏதோ சில தாள்கள் இருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook