மீறி நடப்பவள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4686
அவன் சாலையின் ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அவனைத் தெரிந்தவர்கள் யாரோ கூறி, அவர் கூறினார். அவளிடம் நேரடியாகவே சொன்னார்.
அப்போது அவளுடைய குழந்தை கேட்டது.
“அம்மா, அப்பாவுக்கு என்னம்மா?''
நான்கைந்து வயது மட்டுமே உள்ள குழந்தையின் மனதை அந்தச் செய்தி கவர்ந்தது. அவள் எதுவும் பேசவில்லை. அவளுடைய பார்வையும் நடந்துகொண்ட முறையும், அந்தத் தகவலைக் கூறிய மனிதரை திகைப்படையச் செய்தன. இப்படியும் பெண்கள் இருப்பார்களா?
அவளுக்குப் புரியவில்லை என்று தோன்றுகிறது. அவர் மீண்டும் சொன்னார். அவன் சாலையில் ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அப்போதும் குழந்தை கேட்டது.
“அம்மா, அப்பாவுக்கு என்னம்மா?''
அவள் வெறுமனே நின்றிருந்தாள்.
அந்தத் தகவல் கூறும் சம்பவமும், குழந்தையின் கேள்வியும், அவளுடைய நின்றுகொண்டிருக்கும் செயலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கலாம். ஒரு மாற்றமும் உண்டாகப் போவதில்லை.
அவள் இறந்துபோய் நின்றிருக்கிறாளோ?
அவன் சாலையின் ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அந்தத் தகவலை மிகவும் உண்மைத்தன்மையுடன் அவன் மனைவியிடம் வந்து கூறிய மனிதர், தானே விருப் பப்பட்டுத்தான் அங்குவந்து கூறினார். எல்லாருக்கும் தெரியும்; அவனுக்கும் தெரியும்- அவனுடைய முடிவு அப்படித்தான் இருக்குமென்று. அவளுக்கும் அது தெரியும். பிறகு... அப்படி அது நடந்து முடியும்போது, யாரும் சற்று அதிர்ச்சியடையத்தான் செய்வார்கள்.
அவள் அதிர்ச்சியடையட்டும் என்றுதான் அந்த மனிதர் கூறினார்.
அவளுடைய இமைகள் திறந்து மூடிக்கொண்டிருந்தன. அவள் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். அவள் இறக்க வில்லை.
"ஹா... இவள் என்ன ஒரு பெண் பிள்ளை! இவள் மனிதப் பிறவிதானா?'
அவர் வெளியேறி நடந்தார். அவள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு முன்னால் அவன் இறந்திருக்கிறான்.
தகவலைக் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் வீட்டிற்கு வந்தார்கள். தாடையில் கையை வைத்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். எதையும் தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இல்லை. பெண்கள் நிறைய பேர் கூடியிருந் தார்கள். அவர்களும் எதுவும் பேசவில்லை.
ஒருத்தி இன்னொருத்தியின் காதில் முணுமுணுத்தாள்:
“அவளுக்கு ஏதோ மூளையில் பிரச்சினை...''
அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றும். அவள் மரத்தைப்போல உட்கார்ந்திருந் தாள். எதையுமே தெரிந்துகொள்ளவில்லை.
யாரோ மெதுவான குரலில் இன்னொரு ஆளிடம் கூறினான்:
“ஏதாவது சொல்லி அவளைச் சிறிது அழச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.''
பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது.
அருகிலிருந்த பலருக்கு என்ன கூறுவது என்றே தெரிய வில்லை. மரத்துப்போன நிலையிலிருந்து அவளை எப்படி மீட்டுக்கொண்டு வருவது என்பதைப் பற்றியும் தெளிவாகத் தெரியவில்லை. என்ன கூறுவது? அந்த மரத்துப்போன நிலையை எப்படி மாற்றுவது?
அப்போது யாரோ எங்கிருந்தோ கூறினார்கள்.
“பாவம்... நல்ல மனிதன்! பொண்டாட்டின்னா உயிரு. அந்த மாதிரி பொண்டாட்டிமேல பாசம் வச்சிருக்குற ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது...''
எல்லாருக்கும் நிம்மதி உண்டானது.
பூனைக்கு மணியைக் கட்டியது யார்?
பலருக்கும் பலவற்றையும் கூறவேண்டுமென்று தோன்றியது. அவளைச் சிறிது அழவைத்தால் போதும். அவளுடைய நடவடிக் கைகள் மாறின.
அவளுடைய கண்கள் உருண்டு கண்ணீரால் நிறைந்து எல்லாரையும் அவள் கூர்ந்து, முழுமையான வெறுப்புடன் பார்த்தாள். அவள் பற்களைக் கடிக்கிறாளோ? அவ்வாறும் சிலர் சந்தேகப்பட்டார்கள்.
அது... கோபம்.
அந்த நிலையில் கோபம் வந்தாலும் போதும். அழவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த கோபத்துடன் அவள் ஏதாவது கூறினால் தப்பித்துக் கொள்ளலாம்.
அப்போது அங்கேவந்த ஒரு வயதான கிழவிக்கு அவள் அமர்ந்திருந்ததும், நடந்துகொண்ட விதமும் சிறிதும் பிடிக்கவில்லை. தன் மனதில் எது தோன்றினாலும், அதை வெளிப்படையாகப் பேசக்கூடிய இயல்பைக் கொண்டவள் அந்தக் கிழவி. முகத்தைப் பார்ப்பதில்லை. சூழ்நிலையையும் பார்ப்பதில்லை.
கிழவி கூறினாள்:
“அந்த நல்ல பையனை விஷம் குடிக்கவச்சு கொன்னுட்டு, இவள் கருங்கல்லைப்போல உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தீங்கள்ல? பிசாசு...''
தொடர்ந்து கிழவி ஆட்களிடம் கேட்டாள்.
“மனிதர்களே... நீங்க ஏன் நிக்கிறீங்க? நிக்கவேண்டிய அவசியம் என்ன? அவன் இறந்துகிடக்கும் இடத்திற்குப்போய், செய்ய வேண்டியதைச் செய்யுங்க.''
அவள் எழுந்து ஒருமுறை காறித் துப்பினாள்.
எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள்.
ஓ! பைத்தியம் பிடித்துவிட்டது.
இல்லை. அவளுடைய அறிவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
தன் தாயுடன் ஒட்டிச்சேர்ந்து நின்றுகொண்டிருந்த குழந்தை அப்போதும் கேட்டது.
“என் அப்பனுக்கு என்னம்மா?''
எல்லாரின் மனங்களும் உருகிவிட்டன.
அவள் உள்ளே சென்றாள். அங்கு குழுமியிருந்தவர்கள் வெளியேறிச் சென்றார்கள். அதற்குப் பிறகு அங்கு யாரு மில்லை.
உள்ளே கட்டிலில், தாடையில் கையை வைத்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.
பல வருடங்கள் கடந்தோடின. ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். அவன் மறக்கப்பட்டான். இறந்துபோனவனின் வாயில் மண்... உயிருடன் இருப்பவர்களின் வாயில் சோறு- அதுதானே வாழ்வின் சட்டம்!
மாமரத்திற்குக் கீழே அமர்ந்துகொண்டு அவளும் கிழவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழவி என்னவோ சொன்னாள். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். கிழவி தன்னுடைய கோபத்தை மறந்துவிட்டாள். மரத்துப் போய் விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த அவளுடைய உடலுக்குள் வெப்பம் நிறைந்த குருதி ஓட ஆரம்பித்தது.
அவ்வளவுதான் விஷயம்.
அந்த மாமரத்திற்குக் கீழே ஒரு குழந்தை நான்கு கால்களால் தவழ்ந்து விளையாடுவதற்கு மத்தியில் சற்று அழுதது. அவள் ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கினாள். குழந்தையின் உள்ளங்கையில் முள் குத்தியிருந்தது. அதனால்தான் குழந்தை அழுதிருக்கிறது. மூத்த குழந்தை “அம்மா.. சித்தப்பா வர்றாரு'' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே ஓடிவந்தான். அவள் எழுந்தாள். “அப்படின்னா... நீ அவனுக்குச் சோறு பரிமாறு'' என்று கூறிவிட்டு கிழவி அங்கிருந்து கிளம்பினாள்.
அவன் இறந்துவிட்டான். அவனைத் தெரிந்தவர்கள் யாரோ கூறி, அவர் சொன்னார். “ஒரு சாலை விபத்தில் சிக்கி அவன் இறந்துவிட்டான்.''
ஒரு மனிதர் அவரே நேரில் வந்து தகவலைக் கூறினார். அப்போது மூத்த குழந்தை அழுதுகொண்டே கேட்டது.
“அம்மா சித்தப்பனுக்கு என்னம்மா ஆச்சு?'' அங்கு ஓலமும் கூப்பாடும் உண்டாயின. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடிவந்து குழுமினார்கள். ஆட்களின் ஒரு பெரிய கூட்டம். பெண்கள் அவளைக் கட்டுப்படுத்த முயன்றார்கள்.
அவள் மார்பில் அடித்துக்கொண்டிருந்தாள். வாய்விட்டு அழுதுகொண்டிருந்தாள். உடலை வருத்திக்கொண்டு எங்கோ பாய்ந்து போய்விட்ட அவனுடைய ஆன்மாவிடம் அவள் கேட்டாள்: “இனிமேல் எனக்கு யார் இருக்குறாங்க?''
பதில் இல்லை.
“இனிமேல் நான் எப்படி வாழ்வேன்?'' என்றும் அவள் கேட்டாள். இருள் மண்டிக்கிடந்த எதிர்காலம் பதில் கூறவில்லை. நான்கு கால்களில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்.
“மகனே, உன் அப்பா எங்கேடா?''
அவள் தங்களுடைய உறவைப் பற்றி உரத்த குரலில் கூறி அழுதுகொண்டிருந்ததற்கு மத்தியில் கேட்டாள்.
அவள் அவன்மீது மட்டுமே அன்பு வைத்திருந்தாள். அவன் அவள்மீது மட்டுமே...
“என் மகனோட அப்பன் இறந்தப்போகூட நான் அழவில்லை. என்னவெல்லாம் கேட்கக்கூடாத குற்றச் சாட்டுகளையெல்லாம் நான் கேட்டேன்! ஏன் என்னை விட்டுப் போனீங்க?''
அது அவளுடைய நியாயமான ஒரு கேள்வியாக இருந்தது. கவலைப்பட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறினாள்.
“இவள் ஒருத்தன்மேல அன்பு வச்சிருந்தா. எல்லாரும் சேர்ந்து வேறொருத்தனுக்கு இவளை கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அவன் இறந்துவிட்டான். அப்போது இவள் அழாமல் இருந்ததற்காக, நாம் இவளை கடிச்சுத் தின்னப் போனோம். ஒரு வகையில் பார்த்தா- இவள் அன்று அழவேண்டிய அவசியமே இல்லை.''
இன்னொருத்தி சொன்னாள்.
"இவள் அன்பு வச்சிருந்தவன்தான் இவளுடைய கணவன். அவன் இறந்துட்டான். இவளுடைய சங்கு வெடிக்குது.''
கிழவி கூறினாள்.
"இவள் செய்யக்கூடாதது எதையாவது செய்தாலும் செய்துவிடுவாள். இவளோட செயல்களைப் பார்க்குறப்போ அப்படித்தான் தோணுது. இவளை கவனமா பார்த்துக்கணும்.''
நீண்ட நீண்ட ஓப்பாரிகளும் அழுகைகளும் கேட்டுக் கொண்டே இருந்தன. ஆட்கள் யாரும் அங்கிருந்து நகரவே இல்லை. எல்லா நடவடிக்கைகளும் முடிந்து, பிணத்தைக் கொண்டுவரும்போது அவள் என்னவெல்லாம் செய்யப் போகிறாளோ?