உண்ணி என்ற சிறுவன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7676
உடம்பில் ஆடை எதுவும் அணியவே இல்லையே! அய்யய்யோ, என்ன வெட்கக்கேடு! உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான். உண்ணி வழியிலேயே நின்றிருந்தான். கடைகளில் இருந்த ஆட்கள் எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள். இங்கிருந்து உடனே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடவேண்டும் என்று நினைத்தான் அவன். ஆனால், கால்கள் அசைந்தால்தானே! மனதில் வருத்தமும் குற்ற மனப்பான்மையும் உண்டானது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. அழுகை கிளம்பிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் ஒலி வெளியே கேட்கவில்லை.
அழுகையை எதுவோ பிடித்து நிறுத்தி விட்டதைப்போல இருந்தது!
அடுத்த நிமிடம் உறக்கம் தெளிந்தது. மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி கரை புரண்டு ஓடத் தொடங்கியது. ஓ... எல்லாமே கனவா? கனவு! உண்ணி போர்த்தியிருந்த போர்வையை மேலும் நன்றாக இழுத்து போர்த்தியவாறு திரும்பிப் படுத்தான். ஆமாம்... எல்லாமே கனவுதான்!
உண்ணியின் மனதில் மீண்டும் அந்த காட்சிகள் கடந்து போயின. கனவு... கனவு... மீண்டும் மீண்டும் அவன் அதை மனதில் ஓட்டிப் பார்த்தான். அப்படி நினைத்துப் பார்ப்பதில் அவனுக்கொரு திருப்தி கிடைத்தது. ஒருவகை நிம்மதி அலைகள் வீசி உண்ணியின் மனதின் மீது ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
சமையலறையில் புதிய விறகு எரியும் வாசனை காற்றில் தவழ்ந்து வந்தது. விறகு வெட்டும் குஞ்ஞாப்பு இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? காலையில் எழுந்து ஆற்றங்கரையில் இருக்கும் கல்லில் கோடரியை உரசி முனையை தீட்டிக் கொண்டிருப்பான். குஞ்ஞாப்பு எப்போதும் வராந்தாவில்தான் படுத்திருப்பான். அடடா... அங்கு படுப்பது என்பது எவ்வளவு சுகமான ஒரு அனுபவமாக இருக்கும்! இரவு நேரங்களில் எப்போது கண்களைத் திறந்தாலும் வானத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கலாம். வானத்தில் காய்ந்து கொண்டிருக்கும் நிலவையும் பார்க்கலாம். இல்லை.... நட்சத்திரங்கள் இருக்கிறபோது நிலவும் இருக்குமா? இருக்காது, இருக்கும். இருக்காது போகலாம்.
இருக்குமே! இதோ நிலவு ஆகாயத்தில் மெதுவாக நீங்கிக் கொண்டிருக்கிறதே! குஞ்ஞாப்புவின் வீட்டு திண்ணையில் படுத்துக் கிடந்தால் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பார்க்கலாம். உண்ணி திண்ணையில் மல்லாந்து படுத்தவாறு சந்திரனைப் பார்த்தான். அப்போதுதான் உதித்திருந்த நிலவு இரவின்மேல் தளர்ந்து கிடந்தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்கள். நிலவு இதோ ஆகாய வெளியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நட்சத்திரங்களும் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன. சந்திரன் கீழே விழப் போகிறானா என்ன? அப்படியெல்லாம் விழமாட்டான் என்று அப்பா சொல்லியிருக்கிறாரே! இதோ நிலவு நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எங்கே ஓடுவது? ஓட முயற்சித்தான். உடல் அசைந்தால் தானே! வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது அவனுக்கு. தொண்டைக்குள் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு திணறல் மட்டும் வெளியே வந்தது.
உண்ணி மீண்டும் எழுந்தான். இதயம் அடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே படுத்த இடத்திலேயே படுத்துக் கிடந்தான். காண முடியாத, புரிந்து கொள்ள முடியாத கண்களைக் கொண்டு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்த அறையைத் துலாவி பார்த்தான். இப்போது உண்ணிக்கு புரிந்தது. இதுவரை கண்டது எல்லாமே கனவு. ஒருவகை நிம்மதி உணர்வு அவன்மேல் கம்பளிப் போர்வையைப் போல் படர்ந்தது. தலையணை, போர்வை ஆகியவற்றின் இளம் சூட்டுக்குள் மீண்டும் தன்னை அடக்கமாக்கிக் கொண்டான் அவன்.
சமையலறைக்குள் இருந்து வரும் வெளிச்சத்தின் ஒரு நீண்ட கோடு ஜன்னல் திரைச்சீலையின் இடைவெளி வழியாக சுவர் மேல் விழுந்தது. அடுப்பில் ஆடிக் கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைக்கேற்ப அது பிரகாசமாவதும், மங்கலாவதும், அணைவதுமாக இருந்தது. பார்க்க அது நன்றாகவே இருக்கிறது - உண்ணி மனதிற்குள் நினைத்தான். இப்போது அடுப்புக்கு அருகில் போய் நின்று நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன என்று அவனுக்கொரு ஆசை வந்தது. இல்லாவிட்டால், நெருப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பே அங்கு போய் நின்று விட வேண்டும். நேற்றைய சாம்பலை இன்று அடுப்பில் இருந்து மாற்றுவார்கள். அப்போது அடுப்பின் இருண்ட சிறு மூலையில் என்னவோ ஒன்று இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றும். அந்த இருண்ட மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும் போல் அவனுக்கு இருக்கும். ஒரு எறும்பைப் போல சின்னஞ்சிறியதாய் அந்த மூலையில் போய் உட்கார்ந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்தான். ‘அடுப்பின் அந்த இருண்டு போன மூலையைப் பற்றிய மர்மம் எனக்கு தெரியும். நன்றாகவே தெரியும். என்னுடைய அந்த மனதில் மூலைகளும், சிறு மேடுகளும் உள்ளதைப் போலத்தான் அங்கும் இருக்கின்றன. ஆனால் அங்கே நான் போய் உட்கார முடியாதே! உண்ணி நினைப்பான்.
அப்படிப்பட்ட மூலைகள் எங்கெல்லாம் இருக்கின்றன? உண்ணி மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். முற்றத்தில் விறகுகள் அடுக்கி வைக்கும் பழைய வீட்டில் அத்தகைய மூலைகள் இருக்கவே செய்கின்றன. குளிர்ச்சியான மண்ணும் தனிமையும் அங்கு குடிகொண்டிருக்கும். தூண்களில் வைக்கப்பட்டிருக்கும் விறகுகளுக்குக் கீழே குனிந்து உட்கார வேண்டும். வண்டுகள் மண்ணை ஆங்காங்கே கிளறி குழிகள் உண்டாக்கி விட்டிருக்கின்றன. அந்தக் குழிகளுக்கு மத்தியில், அந்த குளிர்ச்சியான மண்ணில், கற்களின் மூலையில் அந்த வண்டுகளுக்குப் பக்கத்தில் போய் உட்கார வேண்டும். அடடா.... அப்படி அமர்ந்திருப்பதில்தான் என்ன சுகம்!
உண்ணி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். சமையலறையில் இருந்து பாத்திரங்களின் சத்தம் கேட்டபோது, அவனின் தூக்கம் கலைந்தது. பொழுது இன்னும் சரியாகப் புலரவில்லை பொழுது விடிந்தபிறகு முற்றத்தில் போய் நிற்பது உண்மையிலேயே ஒரு சுகமான அனுபவம்தான். தூரத்தில் மலைகளுக்கு மத்தியில் மேகங்களுக்கு நடுவில் ஆங்காங்கே இடைவெளி தெரிந்தது. சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். மலைகளைப் போலவே மேகங்களும் நீளமாக இருந்தன. மென்மையான பனிப் படலத்தினூடே பார்க்கும்போது மலை எது மேகம் எது என்பதையே சில நேரங்களில் பிரித்து பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அடடா... என்ன மேகம் அது! காலை நேரத்தில் ஆகாயத்தில் காற்று இருக்காதா என்ன? இல்லாமல் இருக்கலாம். குஞ்ஞாப்புவிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.
குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆள்! அவனுக்கு எல்லாமே தெரியும். ஆகாயத்தைப் பார்த்தவாறு அவன் கூறுவான்: “ம்... மழை வரப்போகுது. கோடாரியைத் தோளில் வைத்துக் கொண்டு எவ்வளவு வேகமாக அவன் நடந்து போவான்! இப்போது அவன் அனேகமாக மலைக்குக் கீழே போயிருக்க வேண்டும். அப்படிப் போயிருந்தால்...? அது ஒரு சுகமான அனுபவம்தான். உடம்பில் கீறல்கள் உண்டாகும், கால் அடிபடும், இரத்தம் வரும்... குஞ்ஞாப்பு அழுவானா? கட்டாயம் அழுவான்.