
அம்மா அழுவாள். அப்பா முன்னால் அம்மா அழுவதை எத்தனை தடவை அவன் பார்த்திருக்கான்! அந்த மாதிரியான நேரங்களில் அப்பாவுக்கு பயங்கர கோபம் வரும். அம்மாவின் தோளைப் பிடித்து பக்கத்தில் இழுத்தவாறு என்னவெல்லாமோ கூறுவார். அடுத்த நிமிடம் அம்மா அழுகையை நிறுத்தி விட்டு சிரிப்பாள். அப்பாவும் சிரிப்பார். எப்போதும் அப்பா ஒரே விஷயத்தைப் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருப்பாரா என்ன? நிச்சயமாக இல்லை. இந்த உலகத்தில் அப்பாவுக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கிறது? புகைவண்டி எத்தனை மணிக்கு வருகிறது எத்தனை மணிக்கு போகிறது என்பதைப் பற்றியெல்லாம் மிகவும் சரியான தகவல்களை அவர் வைத்திருப்பார். காரின் மூடியைத் திறந்து விட்டு, அதில் அவர் செய்யும் வேலைகளைப் பார்க்க வேண்டுமே!”
உண்ணி மீண்டும் உறங்கினான். காரில் ஏறி ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் பாதையில் போவதுபோல அவன் கனவு கண்டான். திடீரென்று கார் நகராமல் நின்றுவிட்டது.
உண்ணி போர்வையை நீக்கி எழுந்து நின்றான். குளிர் பயங்கரமாக வாட்டிக் கொண்டிருந்தது. ட்ரவுசரை ஒரு கையால் பிடித்தவாறு வேக வேகமாக நடந்து சென்று சமையலறையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான்.
“ஆஹா... உண்ணி, இன்னைக்கு காலங்காத்தால படுக்கையை விட்டு எழுந்துட்டியே!” - அம்மா சொன்னாள்.
அதைக் கேட்டு உண்ணிக்கு கோபம்தான் வந்தது. ‘நான் என்னைக்குமே காலையில் சீக்கிரம்தான் எழுந்திருக்கிறேன். பிறகு ஏன் அம்மா இப்படிக் கூறி சிரிக்க வேணும்?’ என்று மனதிற்குள் நினைத்தவாறு உண்ணி அடுப்பிற்கு அருகில் போய் நின்றான். “வேண்டாம் வேண்டாம். அப்படியொண்ணும் குளிரு இல்ல...” - அம்மா அவனைத் தடுத்தாள். உண்ணியின் கோபம் மேலும் அதிகரித்தது. தன்னை தேவையில்லாமல் அம்மா தடுப்பதாக அவன் நினைத்தான். இனி அம்மா அழுகிறபோது எப்போதும் கூறும் வார்த்தைகளை அப்பா மறந்துவிட வேண்டும். அப்போது பார்க்க வேண்டும் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை.
உண்ணி மீண்டும் அடுப்பை நெருங்கிப் போய் நின்றான். நெருப்பு வெளிச்சத்தில் இருட்டான மூலைகள் எல்லாம் மறைந்து போயிருந்தன.
“உண்ணி... இன்னைக்கு காலையிலேயே எழுந்திட்டியே!” - அம்மா சிரித்தாள்.
மூலையில் குவிக்கப்பட்டிருந்த விறகுகளுக்கு இடையே இருட்டு ஆக்ரமித்திருந்தது. உண்ணி விறகுகளுக்கு அருகில் போய் நின்றான். அந்தச் சிறிய இருட்டான பகுதியையே உற்று பார்த்தான். விறகுக்குக் கீழே கரையான் இருக்குமா? இருக்கும். இருக்காது. அப்படி இருக்க வாய்ப்பில்லை. புதிய விறகாயிற்றே! சில நேரங்களில் இருக்காது. யாருக்குத் தெரியும்? இருந்தாலும் இருக்கலாம். எந்த மாமரத்தை வெட்டியிருக்கிறார்கள்? உண்ணி சிந்தித்தாள்.
அந்த நிலத்தின் ஒரு மூலையில் காயே காய்க்காமல் நின்றிருந்த மாமரத்தைத்தான் வெட்டியிருக்கிறார்கள். மாங்காய்களுக்குள் நீர் கூடு கட்டியிருந்தது. மாங்காய்களாக வெளியே தெரியும் நீர் கூடுகள் அவை. அவற்றுக்குள் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. நீரைப்போல தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். மாங்காய்கள் கீழே விழுந்து அவற்றில் இருக்கும் நீர் காய்ந்துபோன இலைகள்மேல் படுவதை அவன் பார்க்க நினைத்தான்.
உண்ணி ட்ரவுசரை இழுத்துப் பிடித்தவாறு மெதுவாக மாமரத்தை நோக்கி நடந்தான். பனித் துளிகள் விழுந்திருந்த புல்லின்மேல் நடப்பது அவனுக்கு ஒரு ஆனந்த அனுபவத்தைத் தந்தது. உண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் அவனின் கால் சுவடுகள் தெரிந்தன. அவனுக்கு அதைப் பார்த்தபோது மேலும் உற்சாகமாக இருந்தது. கால்களை வேகமாக நகர்த்தி அவன் நடந்து போனான். மாமரத்தை இப்போது பார்த்தால் அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. நிலத்தில் விழுந்து கிடக்கிறபோது அது மிகவும் சிறியதாகத் தெரிந்தது. உயரமே குறைந்துவிட்டதைப்போல் அது இருந்தது. குறைந்துதான் போயிருக்கும்.
இந்தத் தென்னை மரத்தையும் வெட்ட வேண்டும் - உண்ணி நினைத்தான். டக், டக், டக், டக்... குஞ்ஞாப்பு வெட்டுவான். அவனின் உடம்பில் இருக்கும் தசை வியர்வையில் குளித்து, திரள்வதும் தாழ்வதுமாக இருக்கும். மரத்தை வெட்ட, வெட்ட கீழே சாயும் நிலைக்குவரும். க்ரிக், க்ரிக்... என்ற ஓசை உண்டாகும். தென்னை மரம் ஆடும். பிறகு அது அழுதவாறு கீழே விடும். அடுத்த நிமிடம் தரையில் அது விழுந்து கிடக்கும். தக்! “மரம் கீழே விழும்போது நான் கீழே நின்றிருந்தால் என்ன நடக்கும்? பேசாமல் சாக வேண்டியதுதான். மரணம் என்றால் என்ன? குஞ்ஞாப்புவிடம் கேட்க வேண்டும்” - உண்ணி நினைத்தான்.
தென்னை மரத்தின் உச்சியிலும் அடுப்பில் இருப்பதைப்போல மூலைகள் இருக்கவே செய்கின்றன. உண்ணிக்கு அது நன்றாகத் தெரியும். தென்னை மரத்தின் மடல்களுக்கு மத்தியில், பூக்களுக்கிடையே, குருத்துக்கு நடுவில், தேங்காய்களுக்கு இடையில் இடம் இருக்கத்தான் செய்கிறது. இருண்டு போய் காணப்படும் ஒரு சிறு இடம். அங்கே போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது உண்ணிக்கு. குஞ்ஞாப்பு தேங்காயை உரித்துவிட்டு வருகிறபோது, அவனிடம் ஒரு வாசனை வரும். அந்த மணம் நிச்சயமாக அங்கே இருக்கும். அங்குதான் உட்கார வேண்டும் என்று ஆசைப்பட்டான் உண்ணி. அடடா... எவ்வளவு சுகமாக இருக்கும்?
உண்ணி வீட்டை நோக்கி நடந்தான். அப்பா கிளம்பிக் கொண்டிருந்தார்.
“காலை நேர வாக்கிங் முடிஞ்சு உண்ணி வந்துட்டான்” - அப்பா சொன்னார்.
உண்ணி காரையே உற்றுப் பார்த்தவாறு நினைத்தான். கார் சிரிக்கிறதா என்ன? சிரிப்பது மாதிரிதான் இருக்கிறது. யாரையாவது மோதுகிறபோது கார் சிரிக்குமா? சிரித்தாலும் சிரிக்கலாம்.
“உண்ணி இன்னைக்கு ஒண்ணுமே பேசாமல் மவுனியா அமைதியா இருக்குறானே!” - அப்பா சிரித்தார். மவுனி என்றால் என்ன அர்த்தம்? முனி என்று அர்த்தமா என்ன? முனியாக இருக்கலாம். முனி என்றால் அவரைப் போல தாடியை வளர்த்துக் கொண்டு காடுகளைத் தேடிப்போய் யாருமே பார்க்க முடியாத இடத்தில் செடிகளுக்கு மத்தியில் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். சுற்றிலும் குளிர்ந்துபோன காய்ந்த இலைகள் கிடக்கும். அந்த இலைகளை நீக்கினால் கீழே குளிர்ச்சியான மண் இருக்கும். காய்ந்த இலைகளுக்கு மத்தியில் போய் இருப்பது எவ்வளவு சுகமாக இருக்கும்! - உண்ணி நினைத்துப் பார்த்தான்.
குட்டிகள் பால் குடிக்கிறபோது லிஸ்ஸிக்கு வலிக்குமா? உண்ணி ஒரு நாய் குட்டியைத் தூக்கினான். அது அழுதது. குட்டியை மீண்டும் கீழே விட்ட அவன் நாயின் அருகில் போய் உட்கார்ந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook