பிதாமகன் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6352
பீலாத்தோஸ் (தனக்குள்): இவளை அருகில் வைத்துக் கொண்டு என்ன சொல்வது? இவளுக்கு கொஞ்சம் அறிவு அதிகமாக இருக்கிறது என்பது எனக்கே புரியத் தொடங்கி விட்டது. இப்போது என்ன செய்வது?
ரூத் (பீலாத்தோஸிடம்): என்ன சார், நேற்று சரியா தூங்கலையா? (தனக்குள்): ஏதாவது சொன்னால் விஷயம் எனக்குத் தெரிந்துவிடும் என்று மனதிற்குள் மனிதர் பயப்படுகிறார் போலிருக்கிறது இன்றைக்கு வேலை நடந்தது மாதிரிதான்...
பீலாத்தோஸ் (ரூத்திடம்): ரூத், ஒண்ணு செய்... இன்னைக்கு ஜூலியா எங்கேயோ போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. நீயும் அவ கூட போ. நான் இங்கே உட்கார்ந்து எழுத வேண்டிய விஷயங்களை எழுதிக்கிறேன்.
ரூத் (தனக்குள்): எழுதிய விஷயங்களைப் பூட்டி வைக்க மறக்க வேண்டாம். காரணம் இன்று சாயங்காலமே நாங்கள் மீதிக் கதையை படிக்க வேண்டுமே! அதாவது& உயிர்த்தெழுந்த இயேசுவைப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் போது... (பீலாத்தோஸிடம்): சரி சார். அப்படின்னா நான் போகட்டுமா சார்?
பீலாத்தோஸ் தலையை ஆட்டுகிறார்.
ரூத் (தனக்குள்): இனி பெரியவரை ஒரு வழி பண்ண வேண்டியதுதான்.
ரூத் மிகவும் சாதாரணமாக செருப்பின் கயிறைக் கட்டுவது போல் நடித்துக் கொண்டு தன்னுடைய ஆடையை லேசாகத் தூக்கி நன்கு தெரிகிற மாதிரி அழகான, கவர்ச்சியான தன்னுடைய கால்களை வெளியே காட்டினாள். ரூத் (குனிந்தவாறு தனக்குள்): பீலாத்தோஸே, ஒரு நிமிடம், ஒரு பார்வை. என்னுடைய இயேசு கூட இதைப் பார்த்ததில்லை.
பீலாத்தோஸ் அதிர்ச்சியடைந்ததைப் பார்த்து உறங்கிக் கொண்டிருந்த பூனை கூட கண்களைத் திறக்கிறது. பீலாத்தோஸின் முகத்தில் ஒரு வித பதைபதைப்பும் ஆச்சர்யமும் திணறலும் தெரிகிறது. அவர் சுற்றிலும் பார்க்கிறார். தான் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் இரண்டு பக்கங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு ஒரு சிலையைப் போல ரூத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். ரூத் மெதுவாக நிமிர்ந்தபோது கூட, உறைந்து போன ஒரு மனிதனைப் போல உட்கார்ந்திருந்த இடத்திலேயே சிறிதும் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார் பீலாத்தோஸ்.
ரூத் (பீலாத்தோஸிடம்): நான் வாங்கின செருப்பே நல்லா இல்ல சார்.
பீலாத்தோஸ் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியடைந்த மனிதனாகிறார்.
பீலாத்தோஸ் (ரூத்திடம்): ஆமா... ஆமா ரூத் (பீலாத்தோஸைப் பார்த்து கவர்ச்சியாக சிரித்தவாறு) சார்... இன்னைக்கு உங்களுக்கு எழுதி எழுதி கை பயங்கரமா வலிக்கப் போகுது. அது மட்டும் உண்மை. நான் உங்களுக்கு உதவ வேண்டாமா சார்?
பீலாத்தோஸ் (ரூத்திடம்): அப்படியா? ஆமா... ஆமா... வேண்டாம்... வேண்டாம்.
ரூத் மண்டபத்தை விட்டு இறங்கி, கீழே நின்றவாறு பீலாத்தோஸைப் பார்த்து வணங்குகிறாள். பீலாத்தோஸ் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் ஒரு கையால் பதிலுக்கு மரியாதை செலுத்துகிறார். ரூத் பூச்செடியைத் தின்று கொண்டிருக்கும் கோவேறு கழுதைக் குட்டியை கையால் விரட்டி விடுகிறாள். வீட்டை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் ரூத்திற்குப் பின்னால் வாலை உயர்த்திக் கொண்டு பூனை கத்தியவாறு வேகமாகப் பாய்ந்தோடுகிறது.
ரூத் (தனக்குள்): யூதப் பெண்களின் அடக்கமும் ஒடுக்கமும் போலித்தனமானது என்றல்லவா தன்னுடைய நண்பனுக்கு பீலாத்தோஸ் எழுதியிருக்கிறார்? இனி அதைப் பற்றி மேலும் அவர் நிறைய எழுதலாமே! பீலாத்தோஸ் ஒரு கண் பார்வை தெரியாத மனிதரைப் போல முன்னால் பார்த்தவாறு சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தார். கடைசியில் எழுத்தாணியைக் கையிலெடுத்து எழுத ஆரம்பித்தார்.
டேய் அண்டோனியஸ், நான் உனக்கு எழுதும் கடிதத்தின் எஞ்சிய பகுதியை என்னுடைய கேட்டு எழுதும் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்ததில், நான் தோல்வியடைந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் விளைவாக நானே என் கைப்பட மீண்டும் எழுதுகிறேன். என்ன எழுதுவது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சியில் இப்போது நான் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்டு அவள் எழுதும் சம்பவம் இன்று நடக்கவில்லையென்றாலும், இன்று ஆச்சரியப்படக் கூடியதும், சிறிது கூட நம்ப முடியாததும், மிகவும் இன்பம் தரக்கூடியதுமான ஒரு சம்பவம் நடந்தது. மோசமான செருப்பு உண்டாக்கக்கூடிய புண் அவளிடம் நீண்டநாட்கள் இருக்கட்டும். அதை முழுமையாக விளக்குவது என்றால் இந்த ஒரு கடிதத்தில் அது முடியவே முடியாது. நான் உன்னிடம் அதிகமாக ஒன்றும் கூறப்போவதில்லை. ஜூபிடர் கடவுள்மேல் எனக்கு ஈடுபாடு மேலும் அதிகரித்திருக்கிறது என்பதை மட்டும் இங்கு கட்டாயம் கூற விரும்புகிறேன். இந்த மாதிரியான இனிய சம்பவங்கள் நேர்கிறபோது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
டேய், அண்டோனியஸ், உன்னிடம் மட்டுமே நான் இந்த விஷயத்தைச் சொல்ல முடியும். அந்த இயேசுவைப் பற்றி என்னுடைய மனதிற்குள் இனம்புரியாத ஒரு குழப்பநிலை இருக்கவே செய்கிறது. அது மட்டுமல்ல. அவன் இப்போது உயிர்த்தெழுந்து விட்டானென்று ஒரு தகவல் வெளியே பரவி விட்டிருப்பதையும் நான் அறிகிறேன். உண்மையிலேயே இது பிரச்சினைக்குரிய ஒரு விஷயம்தான். எனக்கு அதனால் எந்தவித பயமும் இல்லை. அந்தப் பையன் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால், அவனைப் பார்க்க எனக்குக் கூட ஆர்வம்தான். உங்கள் இருவருக்கும் சம்மதம் என்றால், நான் உங்களிடம் அவனை அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன். சரியா? ஹா! ஹா! ஹா! இந்த இயேசு ஒருநாள் திரும்பி வந்து யூதர்களுக்கு ராஜாவாகவும் ரட்சகனுமாகவும் ஆவதாக இருந்தால் அவனுக்காக நான் என்னவெல்லாம் செய்ய முயற்சித்தேன் என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியும் என்று திடமாகவே நான் நம்புகிறேன். அவன் என்னைத் தூக்கில் போடமாட்டான். அது நிச்சயம். என்னுடைய பிரச்சினை அதுவல்ல. அவன் ஒரு சித்தனாக மாறி அவனுக்கென்று ஏராளமான சீடர்களை உருவாக்கி உலகமெங்கும் தன்னுடைய செய்திகளைப் பரப்பி, மிகப்பெரிய குறிப்பிடத்தக்க ஒரு நபராக மாறி, ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு அவன் தன்னுடைய பெயரையும் பெருமையையும் எல்லா இடங்களிலும் நிற்கும்படி செய்து விட்டான் என்று வைத்துக்கொள். அப்படியென்றால் அந்த சரித்திரத்தில் நான் எப்படிப்பட்ட மனிதன் என்று அறியப்படுவேன்? இப்படி நான் எண்ணுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? அந்த ஆளின் அச்சமற்ற தன்மைதான். அது என் மனதில் இனம்புரியாத ஒரு எச்சரிக்கை உணர்வை உண்டாக்குகிறது. நிலைமை அப்படி இருக்கிறபோது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? இரண்டாயிரம் வருடங்கள் கடந்தபிறகும் நமக்கு கொஞ்சம் கெட்ட பெயர் இருக்கிறது என்றால் அதனால் நமக்கு என்ன நஷ்டம்? எது எப்படியோ என் மனதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் உன்னிடம் இதையெல்லாம் தெரிவிக்கிறேன். நடந்தது இதுதானடா.