பிதாமகன் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6352
ஜூலியா: யாரோ வர்றாங்க.
ஒரு பெண்: நல்லாதப் போச்சு. ஒரு ஆண் துணைக்கு வந்தது மாதிரி ஆச்சு.
ரூத்: பூகம்பம் வந்துச்சுன்னா, ஆண்&பெண் எல்லாமே அதுக்கு ஒண்ணுதான்.
அவர்கள் தலையில் அணியும் துணியை காற்றுக்கு எதிராக கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு வழிப்போக்கனை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். வானத்தின் விளிம்பில் காதுகள் செவிடாகிற மாதிரி இரைச்சல் கேட்டது.
வழிப்போக்கனின் கால்களில் காலணி எதுவும் இல்லை. தலையில் கட்டப்பட்டிருந்த துணியின் முனையால் புழுதி முகத்தில் படாமல் மறைத்திருந்தான். அவன் மெதுவாக அருகில் வந்து கொண்டிருந்தான். பெண்கள் அந்த ஆளையே உற்று பார்த்தவாறு நின்றிருந்தனர். அவன் அருகில் வந்த போது, அவனுடைய அழுக்கடைந்த ஆடையில் இரத்தக்கறை இருப்பது தெரிந்தது. பெண்கள் அந்த இரத்தக் கறையைப் பார்த்தார்கள். அவர்களிடமிருந்து ஒரே நேரத்தில் அதிர்ச்சி, பயம் இரண்டுமே வெளிப்பட்டன. வந்த மனிதன் தன்னுடைய முகத்திலிருந்த துணியை எடுத்து அதன் ஒரு முனையை தன்னுடைய கழுத்து வழியாக தோள் மீது இட்டான். வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்த மனிதனை பின்னாலிருந்து தள்ளியது. அவன் களைத்துப் போன காயங்கள் இருந்த முகத்தில் ஒரு புன்சிரிப்பு தெரிந்தது.
ஜூலியா: என் இயேசுவே!
ரூத்: ங்ஹே! (மயக்கமடைந்து ஒரு பக்கம் சாய்கிறாள்)
ஜூலியாவும் மார்த்தாவும் நிலைகுலைந்து தரையில் உட்காருகிறார்கள். மரியம் இயேசுவை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருக்கிறாள். அவளின் முகத்தில் பூவைப் போல ஒரு புன்சிரிப்பு மெல்ல அரும்புகிறது. மற்ற பெண்கள் கத்துவதற்காக திறந்த தங்களின் வாய்களை ஒரு கையால் மூடியவாறு முன்னோக்கி தங்கள் பாதங்களை வைக்கிறார்கள்.
மரியம் முன்னோக்கி நடந்து சென்று இயேசுவிற்கு மிகவும் அருகில் போய் நிற்கிறாள். அவன் முகத்தையே உற்று நோக்குகிறாள். அவள் சிரிக்கிறாள்.
மரியம்: இது நீதானா? உன்னோட ஆடையைத் துவைத்துத் தர உன்னோட தந்தையின் வீட்டில் யாருமே இல்லையா?
மரியம் இயேசுவின் கைகளை தன் கைகளில் எடுக்கிறாள். இயேசு முன்னோக்கி நடந்து வந்து அவளின் கன்னத்தில் முத்தமிடுகிறான்.
ரூத் கண்களைத் திறக்கிறாள். விழுந்து கிடக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்காமே இயேசுவை அவள் உற்றுப் பார்க்கிறாள். இயேசு அருகில் வந்து அவளின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அவளை நோக்கி புன்சிரிப்பு சிரிக்கிறான்.
ரூத்: இயேசுவே! இப்போதும் உடம்புடன்தான் இருக்கிறாயா? அப்படின்னா பரவாயில்லே...
இயேசு தன்னுடைய இரு கைகளாலும் அவளின் வலது கையைத் தூக்கி விரல் நுனியில் முத்தமிடுகிறான். ரூத் மீண்டும் மயக்கமடைகிறாள். இயேசு அவள் பாதங்களில் இறுக மாட்டப்பட்டிருந்த செருப்புகளைக் கழற்றி, செருப்பு கடித்திருந்த பாதங்களை கைகளால் மெதுவாகத் தடவுகிறான். பூமி மீண்டும் குலுங்குகிறது. இயேசு புன்னகை செய்தவாறு ஆகாயத்தை நோக்கித் தன்னுடைய தலையை உயர்த்துகிறான்.
நாம் சில பிற்சேர்க்கைகளைப் படிப்போம்
1
யூதர்களின் ராஜாவான ஹெரோதேஸ் யூதர்களின் ரோமன் கவர்னரான பொந்தியோஸ் பீலாத்தோஸுக்கு எழுதிய குறிப்பு:
வாழ்த்துக்கள்!
பிறகு என்ன விசேஷம், பெருமதிப்பிற்குரிய பீலாத்தோஸ்? நாம் இரண்டு பேரும் இந்த அளவிற்கு அறிமுகமில்லாதவர்களைப் போல இருக்க வேண்டுமா என்ன? சமீபத்தில் தாங்கள் சிறிதும் எதிர்பார்க்காத வேளையில் என்னுடன் தொடர்பு கொண்ட பிறகு நான் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். நான் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரியா என்ன? இல்லையே! ரோம சாம்ராஜ்யமும் தாங்களும் என்னை மதிக்கிறீர்கள் அல்லவா? யூத பகுதியின் ரோமன் கவர்னரும் யூதர்களின் ராஜாவும் தங்களுக்குள் ஏன் இப்படி ஒரு இடைவெளியுடன் இருக்க வேண்டும்? அதிகாரிகளான நாமெல்லாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டாமா? தாங்கள் என்னை சமீபத்தில் நினைத்துப் பார்த்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்று என்னிடம் தாங்கள் அனுப்பி வைத்திருந்த மந்திரவாதிக்கு அதற்குப் பிறகு என்ன நடந்தது? அந்த மனிதன் செய்த குற்றம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் முன்னால் அற்புதச் செயல்கள் எதையும் காட்ட அந்த மனிதனால் முடியவில்லை. நான் என்னுடைய நண்பர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் அவன் காட்டப்போகும் வித்தைகளைப் பார்ப்பதற்காக அழைத்திருந்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. என்னைப் பார்த்து அவன் பயப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. அவனைப்பற்றி என்னால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால்தான் நான் அந்த மனிதனை தங்களிடமே திரும்பவும் அனுப்பி வைத்தேன். தாங்கள் என்னுடைய அரண்மனைக்கு ஒருமுறை தயவு செய்து வருகை தர வேண்டும். இதயபூர்வமாக வரவேற்கிறேன். ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிக்கு எந்தவித குறைபாடும் தோன்றாத அளவிற்கு நான் தங்களுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் பண்ணித்தருவேன். தங்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள். வருக! வருக!
அந்த மந்திரவாதி இப்போது எங்கிருக்கிறான்? கிடைத்தால் அவனையும் அழைத்து வரவும். நாமிருவரும் சேர்ந்து அந்த மனிதனின் அற்புதங்களையும், வித்தைகளையும் சிறிது கண்டு களிப்போம். நான் தங்களுக்காக ஏற்பாடுகள் செய்யப் போகிற பல விஷயங்களுடன் அதையும்.
தங்களின் நண்பன்,
ஹெரோதேஸ்
2
மரணத்திலிருந்து திரும்பி வந்த ஒரு இளைஞன் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்.
லாசரை உயிர்ப்பித்து எழுப்பியபோதோ, யொவாராஸின் குழந்தையை மரணத்திலிருந்து திரும்பக் கொண்டு வந்தபோதோ எனக்கு இதைப்பற்றிய எந்த புரிதலும் கிடையாது. நான் சொன்னேன். அது நடந்தது. அவ்வளவுதான். இப்போது இதோ நானே உயிருடன் வந்திருக்கிறேன். யார் என்மீது வாழ்க்கையின் வார்த்தைகளை உச்சரித்தது? மொத்தத்தில் எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இரண்டு நாட்கள் நான் என்னுடைய தந்தையின் வீட்டிலிருந்தேன் என்றால் அந்த விஷயம் என்னுடைய ஞாபகத்திலேயே இல்லை. பிறவி தருவது தாயாக இருந்தால், உயிர்த்தெழ வைப்பது தந்தையாக இருக்குமோ? ஆனால், என்னுடைய தந்தை என்னைவிட்டு விலகி இருப்பது ஏனோ? என்னுடைய தாயைவிட்டு அவர் விலகி இருந்தார். நான் ஒரு அனாதையாக இருந்ததற்காக என்னுடைய அன்னையிடம் நான் எந்த அளவிற்கு கோபித்திருக்கிறேன்! நினைக்கும் போது மனதிற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. கர்ப்பம் தரித்த ஒரு பெண்ணைப் பற்றி அப்படி நான் பேசலாமா? அவள் உயிரின் வித்தை தன்னிடம் ஏற்றுக் கொண்டவள் அல்லவா? கடவுள் ராஜ்யத்தின் வித்து. இந்த விஷயமெல்லாம் முன்கூட்டியே எனக்கு ஏன் தெரியாமல் போனது? எல்லாம் முடிந்தபிறகுதான் அறிவு வேலை செய்யுமா என்ன?