பிதாமகன் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6352
இந்த பாதை வழியாகத்தான் அன்று (அதாவது & பொந்தியோஸ் பீலாத்தோஸ் தன் நண்பன் அன்டோனியஸுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக முடித்து முத்திரையிட்டு ரோமுக்குப் போகின்ற தகவல்கள் கொண்டு போகும் மனிதனுக்காகத் தயாராக எடுத்து வைத்து விட்டு, பகல்நேர உணவு முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்) பீலாத்தோஸின் மனைவி ஜூலியாவும் கேட்டு எழுதும் பெண் ரூத்தும் அவர்களின் சினேகிதிகளான மக்தலனாவைச் சேர்ந்த மரியமும் மார்த்தாவும் வேறிரண்டு பெண்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஜூலியா யூத வேடத்தில் இருந்தாள். முகத்தை துணியால் மூடியிருந்தாள். எல்லோரும் உரத்த குரலில் ஒன்றாகப் பேசியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் ஒருத்தி இன்னொருத்தியிடமும் பெரும்பாலும் எல்லோருடனும் என்று பேசிக் கொண்டு வந்தார்கள். பேச்சின் வேகம் கூடக்கூட நடையின்வேகம் குறைந்து கொண்டிருந்தது. பலவிதப்பட்ட விஷயங்களையும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். விஷயம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக் கொண்டிருந்தது. வீட்டு விஷயங்கள், நாட்டு விஷயங்கள் என்று எல்லாவற்றையுமே அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். உதாரணத்திற்கு இப்போது அவர்களிடம் நடந்த உரையாடல்:
ரூத்: (ஆகாயத்தைப் பார்த்தவாறு): மழை வரப்போகுதுன்னு நினைக்கிறேன்.
மரியம்: ஏய்... அது மழை பெய்யற மேகம் இல்லை. இப்போ மழை பெய்யறதுக்கான அறிகுறியே இல்ல. மழை பெய்தா நல்லாத்தான் இருக்கும். என்ன உஷ்ணம்.
ஒரு பெண் (மரியத்திடம்): இயேசு இந்த வழியாதான் வருவார்னு எப்படி உறுதியான குரலில் சொல்ற?
மரியம்: அப்படி உறுதியா ஒண்ணும் நான் சொல்லல. என்னோட யூகம் அது. அவ்வளவுதான். இன்னைக்கு பார்க்கலைன்னா, இன்னொரு நாள் வேற ஒரு பாதையில பார்ப்போம். அவன் எங்கே இருக்கான்ற விஷயம் நமக்குத் தெரியாதுன்னாலும், நாம எங்கே இருக்கோம்ன்ற விஷயம் அவனுக்குத் தெரியும்ல? அதுதான் என்னோட நம்பிக்கை.
ரூத்: நடந்து நடந்து என் கால் ஒரு வழி ஆயிடுச்சு. ச்சே... இந்த செருப்பு ரெண்டு கால்ல பயங்கரமா கடிக்குது. இன்னைக்கு நான் செருப்பைக் கழற்றி ஒரு விளையாட்டு காட்டினதுக்கு இது தண்டனை போல இருக்கு.
மார்த்தா: என்ன விளையாட்டு?
ரூத் (புன்னகை செய்தவாறு): சொல்லக்கூடாது மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.
மழையைப் பற்றி பேசுவதற்காக வழியில் சிறிது நின்ற கூட்டம் இப்போது மீண்டும் முன்னோக்கி நடக்கத் தொடங்கியது. பாதையில் ஆங்காங்கே வீசிய சிறு சுழல் காற்றுகள் தூசியை வட்ட வட்டமாகச் சுழற்றியடித்தன. ஆகாயத்தில் மழை பெய்வதற்காக என்பதைப் போல் மேகங்கள் திரண்டிருந்தன. ஆனால், அவை மரியம் சொன்னதைப்போல, தேவையான அளவிற்கு முதிர்ச்சியடைந்ததாக இல்லை. சூரியன் இப்போதும் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. மணல் மைதானத்தின் ஓரங்களிலும் தூரத்திலிருக்கும் மலைகளிலும் மணல் ஆவி எழும்பி உயர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்தில் எங்கோ முழங்கிய இடியோசை காற்றில் கலந்து எதிரொலித்தது. சில மேகங்கள் வழியாக சூரியனின் கதிர்கள் நிசப்தமாக சுட்டெரித்துக் கொண்டிருந்தன. ஆகாயத்தில் இருந்த காற்று இப்போது பூமியை நோக்கி இறங்கியது. நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிர் திசையில் காற்று வீசியது. அது அவர்கள் தலையில் அணிந்திருந்த துணியை விலக்கியது. அதனால் அவர்களின் தலைமுடி பின்னோக்கி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் அந்தக் காற்று அவர்களின் ஆடைகளை உடலோடு ஒட்டிக் கிடக்கும்படி செய்தது.
ஜூலியா: காற்று என்ன அருமையா வீசுது!
எல்லோரும் அவள் சொன்னதை ஒப்புக் கொள்கிறார்கள்.
மார்த்தா: மழை வருவதற்கான அடையாளம்தான். தூரத்துல எங்கோ மழை பெய்துக்கிட்டு இருக்கு. அதனால்தான் இந்த குளிர்ந்தகாற்று.
ஒரு பெண்: வீட்டுல துணிகளை காயப் போட்டிருந்தேன்.
மார்த்தா: என் ஆட்டுக்குட்டிகள் நல்லா நனையப் போகுது. நேற்றுத்தான் பிறந்தது. தாய் ஆட்டை வாசல்ல கட்டியிருக்கேன்.
ரூத் (குனிந்து காலைப் பார்த்தவாறு): என்னால இனிமேல ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியாது. ரெண்டு கால்களும் பயங்கரமா வலிக்குது.
மார்த்தா: இங்க பாரு ரூத்... இன்னொருத்தர் சொல்றதைக் கேட்டு எழுதுறதும் பக்கத்துல உட்கார்ந்திருந்தாலும் மட்டுமே போதுமா? அப்பப்போ கொஞ்சம் கஷ்டப்படவும் செய்யணும். (ஜூலியாவிடம்) இவளை ஏதாவது கஷ்டப்பட்டு உழைக்கிற வேலையில ஈடுபடுத்தக் கூடாதா? அந்த பீலாத்தோஸ் கூட உட்கார்ந்து உட்கார்ந்து இவளும் ஒரு சுகவாசி மாதிரி ஆயிட்டா. நான் இதைச் சொல்றதுக்காக ஜூலியா, என்னை நீ மன்னிக்கணும்.
அதைக் கேட்டு ஜூலியா சிரிக்கிறாள்.
சற்று முன்னால் கேட்ட இடிமுழக்கம் இப்போது சற்று உரக்க கேட்கிறது. மேகங்கள் எந்தவித அசைவும் இல்லாமல் வானத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கின்றன. யார் கண்ணிலும் படாமல் சூரியன் மறைந்து போய்விட்டது. மீண்டும் வானத்தின் விளிம்பிலிருந்து ஒரு படை புறப்பட்டு வருவதைப் போல இடி முழக்கம் கேட்டது.
ஜூலியா (உரத்த குரலில்): பூமியே குலுங்குற மாதிரி இருக்கே!
ரூத்: ஆமா... பத்திரம்.
ஒரு ராட்சஸன் நடந்து வருவதைப் போல ஒரு சத்தம் எல்லாப் பக்கங்களிலும் கேட்டது. பூமி குலுங்கியது. நடுங்கிக் கொண்டிருக்கும் ஆட்டின் மேற்தோல் ஆடுவதைப் போல அந்த சத்தத்தின் விளைவால் பூமியில் நடந்து செல்லும் பெண்களின் கால்களுக்குக் கீழே லேசாக அதிர்ந்தது. அவர்கள் பாதி வழியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள். காற்றுக்கு எதிராக முகத்தை உயர்த்தி கண்களை சுருக்கிக் கொண்டு பயந்து போய் சுற்றிலும் பார்த்தார்கள்.
ரூத்: என் காலைக் கீழே வைக்க முடியல. அய்யோ!
ஒரு பெண்: ஏய்... பூகம்பம் வந்திடுச்சின்னு பயப்படுறியா? மலை ஏதாவது பிளந்து கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். பயப்படாதே.
மற்றொரு பெண்: இப்போ மழை பெய்தா நல்லா இருக்கும். கொஞ்சம் மாறுதலா இருந்த மாதிரி இருக்கும்.
அப்போது புழுதியை எழுப்பிக் கொண்டு காற்று பயங்கர வேகத்துடன் வீசியது. மீண்டும் பூமி லேசாக அசைந்தது. யாரோ அழைப்பது மாதிரி இருந்தது. ஆகாயம் முழுமையாக இருண்டு போய் காணப்பட்டது. பயத்துடன் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் காற்றின் பிடியில் சிக்கிய மண் சிலைகளின் கூட்டத்தைப் போல விழித்தவாறு பாதையில் அசையாமல் நின்றிருந்தனர். சுற்றிலும் புழுதி காற்றில் பறந்து கொண்டிருந்தது. காற்று வேகமாக வீசும் சத்தம் உரத்து கேட்டது.
அப்போது தூரத்தில் எதிர் திசையிலிருந்து வழிப்போக்கன் ஒருவன் வந்து கொண்டிருப்பது புழுதியினூடே தெளிவில்லாமல் தெரிந்தது.