வத்சராஜன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7583
வத்சராஜன் என்ற சிறுவனைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதிற்குள் அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவேன். 'வத்சராஜா' உன்னை எப்போதும் கடவுள் காப்பாற்றட்டும்!'
இந்த பிரார்த்தனை என் மனதின் அடித்தளத்திலிருந்து வருவது. இது வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
நாங்கள் இந்த ஊருக்கு வந்து வசிக்க ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. மகளும், தாயும் நானும் மட்டும் முதலில் இருந்தோம். பிறகு மகன் வந்தான். அனீஷ்பஷீர். எங்களுக்கு அதாவது- எனக்கு பொதுவாக யாரையுமே தெரியாது. எங்களைச் சுற்றிலும் இருப்பவர்களில் அதிகம் இந்துக்கள்தான். மகளின் தாய்க்கு பக்கத்து வீட்டுக்காரர்களையும் மற்றவர்களையும் ஓரளவுக்குத் தெரியும். இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் இந்த வீட்டைத் தேடி வருவார்கள். அப்படி வரும் சிலரை எனக்கு அறிமுகமுண்டு.
நான் வீட்டை விட்டு கீழே இறங்கி ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து பிரதான சாலையை அடைந்து பஸ்ஸில் ஏறி ஐந்தாறு மைல் தூரத்தில் இருக்கும் நகரத்திற்குச் செல்வேன். அங்கு வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி விடுவேன். மொத்தத்தில் என்னுடைய வாழ்க்கை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. விசாலமான நிலப்பரப்பில் மரங்களும் பறவைகளும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நாங்கள் இருக்கும் வீடு ஒரு பர்ணசாலையைப் போல இருக்கும். என் வாழ்க்கை வண்டி இதில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதாவது எழுதத் தோன்றுகிறபோது எழுதுவேன். இல்லாவிட்டால் படிப்பேன். சில நேரங்களில் ரேடியோ கிராமை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்து வரும் இசையை மெதுவாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பேன். அதுவும் இல்லாவிட்டால் நிலத்தில் இறங்கி ஏதாவது செய்து கொண்டிருப்பேன். எங்கள் வீட்டைத்தாண்டி இரண்டு வீடுகள் தள்ளி பொது சாலையை ஒட்டி இருக்கும் ஒரு சிறு வீட்டில்தான் வத்சராஜன் இருக்கிறான். வீட்டின் பெயர் மாதேத்து வீட்டில். கூலி வேலை செய்யும் இரண்டு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அவனுடன் இருக்கிறார்கள். தாய், தந்தை இருவரும் இல்லை. சித்தி இருக்கிறாள். அவளுக்கு வேறு குழந்தைகள் கிடையாது. அவன் தந்தை ஒரு பீடி சுற்றும் தொழிலாளியாக இருந்தான். வத்சராஜன் ஏதோ கொஞ்சம் படித்திருந்தான். மெயின் ரோட்டின் அருகில் இருக்கும் பஞ்சாயத்துக்குச் சொந்தமான வாசகசாலையில் தான் வத்சராஜன் வேலை பார்க்கிறான். லைப்ரேரியன் வேலை மாதமொன்றுக்கு அவனுக்கு அறுபது ரூபாய் சம்பளம். குறைந்த சம்பளம்தான். கடைசியில் வாங்கும் பொருட்களின் விலையோ மிக மிக அதிகமாகி விட்டது. வாழ்க்கை நடத்துவது என்பது பொதுவாகவே கஷ்டமான ஒரு விஷயம்தான். அறுபது ரூபாயை வைத்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு தொகை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்ன செய்வான்?
வத்சராஜன் என்ன செய்தான் என்பதை நான் கூறுகிறேன். தனிப்பட்ட சில சிறப்பு குணங்கள் சில மனிதர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கின்றன? பிறக்கும்போதே அது அவர்களுக்குக் கிடைத்து விடுகிறதா? இல்லாவிட்டால் மனிதர்களுடன் பழகுவது மூலம் கிடைக்கிறதா? வத்சராஜனைப் பற்றி எனக்கொன்றும் அதிகமாகத் தெரியாது. ஒரு விஷயம்- நாங்கள் இந்த ஊரில் வந்து குடியேறிய பிறகு அவனை நான் எப்போதாவது பார்த்ததாக ஞாபகத்தில் இல்லை. ஒரு வேளை பார்த்தாலும் பார்த்திருக்கலாம். சரியாக கவனிக்காமல் இருந்திருப்பேன். ஏதாவதொரு விதத்தில் அவனுடன் தொடர்பு உண்டாகும் போதுதானே, நமக்கே அவனைப் பற்றிய பல விஷயங்களும் தெரிய வருகின்றன!
ஒருநாள் என்றைக்கும் போல இல்லாமல் சீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்தேன். வேகமாக குளித்து முடித்தேன். தேனீர் குடித்து, ஆடைகளை அணிந்தேன். குடையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசக சாலையத் தாண்டி சாலையில் இறங்கி பஸ்ஸுக்காக காத்து நின்றேன். என் கையில் சிவப்பு வண்ணத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அது நான் பென்ஷன் வாங்குவதற்கான புத்தகம். என் நம்பர் எஃப் எஃப் 699.
அதை நான் என்னுடைய இடது பக்க கை இடுக்கில் இறுக்கமாக இருக்குமாறு வைத்திருந்தேன். பஸ் வருகிறதா என்று பார்த்தவாறு நான் நின்றிருந்தேன். பஸ்ஸில் ஏறி நகரத்திற்குச் சென்று தூரத்தில் இருக்கும் சப் ட்ரெஷ்ஷரிக்குப் போய் பென்ஷன் பணத்தைக் கையெழுத்துப் போட்டு வாங்க வேண்டும். வைக்கம் முகம்மது பஷீர் என்ற எனக்கு பென்ஷன் கிடைக்கிறது என்பதே ஒரு தமாஷான விஷயம்தான். தமாஷ் என்று கூறுவதை விட ஆச்சரியமான ஒரு விஷயம் என்று சொல்வதே பொருத்தமானது. உண்மையாகவே அது ஒரு ஆச்சரியமான விஷயமாகத்தான் என் மனதிற்குப் படுகிறது. நான் ஒன்றும் அரசாங்க ஊழியன் இல்லை. அமைதியாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். எனக்கு எதற்கு பென்ஷன் கிடைக்கிறது?
பல வருடங்களுக்க முன்னால் நம்முடைய தாய்நாடான இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்தது. எங்கேயோ இருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கமும் இங்கேயே இருந்த சில நாட்டு ராஜாக்களும் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒழிய வேண்டும். இந்தியா விடுதலை பெற வேண்டும். இந்தியா இந்தியர்களால் ஆளப்பட வேண்டும். மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மவுலானா அபுல்கலாம் ஆஸாத்- இப்படி எத்தனை எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றினார்கள். இந்தியா முழுக்க போராட்டம் உண்டானது. ஆண்களும் பெண்களும் எத்தனையோ லட்சம்பேர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்கு அடியும், இடியும், சிறைத் தண்டனையும், தூக்குத் தண்டனையும் கிடைத்தன. கடைசியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும், நாட்டு ராஜாக்களும் நாட்டை விட்டுப் போனார்கள். மக்களாட்சி மலர்ந்தது. இந்தியர்கள் தேர்ந்தெடுத்த இந்தியர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். எல்லா விஷயங்களுமே நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தன. இப்படியே நாட்கள் கடந்தோடி விட்டன. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை கிட்டத்தட்ட புதிய தலைமுறை மறந்தேபோனது. இந்தியா சுதந்திரமடைந்து வருடங்கள் எவ்வளவோ ஆகிவிட்டன அல்லவா? சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் கொஞ்சம் பேராவது உயிருடன் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திராகாந்திக்குத் தோன்றியது. அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார். ஆறு மாதங்களுக்கும் மேலான அரசியல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு மாதமொன்றுக்கு முந்நூறு ரூபாய் வீதம் அரசியல் பென்ஷன் தர கேரளா அரசாங்கம் தீர்மானித்தது. அப்போது கேரளத்தின் முதலமைச்சராக இருந்தவர் சி.அச்சுதமேனன்.