வத்சராஜன் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7584
பஸ் ஏகப்பட்ட இடங்களில் நின்றது. நிறைய ஆட்கள் இறங்கினார்கள். ஏறினார்கள். என் அருகில் இருந்தவர்கள் யார் யார் என்பதைக் கவனம் செலுத்தி நான் பார்க்கவில்லை. ஏதாவது நடக்கும். ஏதாவது நடக்கும் என்று மனதில் தோன்ற வேண்டிய அவசியமில்லை அல்லவா? இருந்தாலும் நடக்கக் கூடாதது நடக்கப்போகிறது. அதைப் பற்றி எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லை. நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன். அப்போது பஸ் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வாசக சாலைக்கு அருகில் நின்றது. இறங்குவதற்கு நான் மட்டுமே இருந்தேன். இறங்கினேன். சாலையில் ஆட்களே இல்லை. பள்ளி விடுகிற நேரமாக இருந்தால் சாலை முழுக்க பள்ளிச் சிறுவர்களின் கூட்டம் நிறைய இருக்கும். நான் இடது கையிடுக்கை இறுகப் பிடித்துக் கொண்டு பார்சல்களையும் குடையையும் கையில் வைத்துக் கொண்டு நடந்தேன். வீட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன். திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம். ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு கையிடுக்கில் இருந்த பென்ஷன் புத்தகத்தை எடுக்கலாம் என்று பார்த்தால்... பென்ஷன் புத்தகம் அங்கு இல்லை!
உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். அது எங்கே போனது? பஸ்ஸில் விழுந்திருக்குமோ? யாராவது எடுத்திருப்பார்களோ? எது எப்படியோ நிச்சயம் அது பஸ் ஸ்டாண்டில் இருக்கும். அது திரும்பி நிச்சயம் என்னிடம் வரும். வேறெங்கும் போகாது. இங்கிருந்து பஸ் நிலையம் சிறிது தூரத்தில் இருக்கிறது. நான் மீண்டும் சாலைக்கு வந்தேன். ஒரு நண்பரைப் பார்த்து விவரத்தைச் சொன்னேன். இனி என்ன செய்வது? உடனே பஸ் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும். நடந்தே போனால் என்ன? அது எங்கு போயிருக்கும்? கையிடுக்கை இறுக்கமாகத்தானே பிடித்திருந்தேன்? பென்ஷன் புத்தகத்தை மடிக்காமல் பாக்கெட்டிற்குள் வைக்க முடியாது. அதை மடிப்பதற்கு மனம் வரவில்லை. இறுகப் பிடித்திருந்த கையிடுக்கை விட்டு அது எப்படிப் போனது? அதைப் பார்த்த ஆள் பென்ஷன் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் என்னுடைய பெயர் இருக்கும். அதில் பணமும் இருக்கும். பஸ் நிலையத்திற்குப் போய் பஸ்காரர்களிடம் கேட்போம். நடந்து சென்றால் பஸ் அதற்குள் இந்தப் பக்கமாய் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம். ஒரு கார் நின்றிருப்பதைப் பார்த்தேன். யாருடைய கார் என்று விசாரித்துப் பார்த்தால், அது என்னுடைய நண்பர் ஒருவரின் கார்தான். அந்தக் காரில் பஸ் நிலையத்தை நோக்கி விரைந்தேன். கிடைக்குமா? அதைப் போன்ற ஒரு பொருள் என் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன செய்வேன்? சிறிதுகூட சந்தேகம் வேண்டாம்- நான் அந்தப் பொருளின் சொந்தக்காரரிடம் ஒப்படைத்து விடுவேன். நாங்கள் பஸ் நிலையத்தை அடைந்தோம். பஸ்ஸில் ஏறி ஓட்டுனரிடமும் நடத்துனரிடமும் விவரத்தைச் சொன்னோம். அவர்கள் அதைப் பற்றி தெரியவே தெரியாது என்று கையை விரித்தார்கள். பஸ்ஸில் நிறைய ஆட்கள் இருந்தார்கள் அல்லவா? கையிடுக்கில் இருந்து பென்ஷன் புத்தகம் கீழே விழுந்திருக்க வேண்டும். அது கிடைத்த மனிதன் அதைத் திறந்து பார்த்து பணத்தை எடுப்பான். புத்தகத்தை கிழித்து தூரத்தில் எறிவான். நேர்மையானவர்களைச் சோதித்துப் பார்க்க அதில் பணம் இருக்கிறது. அதை இப்போது தேடி பிரயோஜனமே இல்லை!
நாங்கள் காரில் திரும்பினோம். எனக்கு பெரிய தர்ம சங்கடமாகப் போய் விட்டது. இப்போது ஒரு பென்ஷன் புத்தகத்தை எப்படி வாங்குவது?
பென்ஷன் புத்தகத்தைத் தொலைத்து விட்டு ட்ரெஷ்ஷரியில் உட்கார்ந்திருந்த அந்த வயதான மனிதரை மனதிற்குள் நினைத்துப் பார்த்தேன். நான்கைந்து மாதங்களாக புதிய பென்ஷன் புத்தகத்துக்காக அவர் அலைந்து கொண்டிருக்கிறார். நான்கைந்து மாதங்களாக அவருக்கு பென்ஷனும் கிடைக்கவில்லை. நானும் அவரைப் போல ஒவ்வொரு மாதமும் போய் அலைய வேண்டும்.
அந்தப் பென்ஷன் புத்தகம் எங்கே போயிருக்கும்? என்னால் எந்த முடிவுக்குமே வரமுடியவில்லை. உடம்பில் உயிரே இல்லாதது மாதிரி நான் காரை விட்டு இறங்கினேன். பிரியாணி பார்சலை வீட்டில் கொடுத்து விட்டு ட்ரெஷ்ஷரிக்கு மீண்டும் போய் விவரத்தை சொல்ல வேண்டியதுதான். மொத்தத்தில் கவலையும்- களைப்பும். நான் ஒற்றையடிப் பாதையில் இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பேன்… கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு கொடியைப் போல பென்ஷன் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு என் மகள் ஷாஹினா எனக்கு எதிரில் வந்து கொண்டிருக்கிறாள். பென்ஷன் புத்தகத்தை அவள் உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவளுக்குப் பின்னால் மகனைத் தூக்கிக் கொண்டு அவளின் தாய். அவர்களுக்குப் பின்னால் மெலிந்து, உயரமாக இருக்கும் ஒரு பையன். சந்தோஷத்துடன் நான் மகளின் கையில் பிரியாணி பார்சலைக் கொடுத்துவிட்டு, பென்ஷன் புத்தகத்தை வாங்கித் திறந்து பார்த்தபோது நான் வைத்திருந்த பணம் முழுவதும் அப்படியே இருந்தது!
“இது எங்கே இருந்து கிடைச்சது மகளே?”
மகளின் தாய் சொன்னாள்.
“வத்சராஜன் வீட்டுல கொண்டு வந்து தந்தான்.”
“வத்சராஜன்!”
பக்கத்தில் நின்றிருந்த பையனைச் சுட்டிக் காட்டிய மகளின் தாய் சொன்னாள்.
“இதுதான் வத்சராஜன். காலையில நீங்க பென்ஷன் புத்தகத்தைக் கையில வச்சுக்கிட்டு பஸ்ல ஏர்றதுக்காக நின்னுக்கிட்டு இருந்ததை வத்சராஜன் வாசக சாலையில் இருந்து பார்த்திருக்கிறான். இவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாசக சாலையை விட்டு கிளம்பி வெளியே வந்தா பென்ஷன் புத்தகம் தரையில கிடக்குது! அதை அவன் திறந்து பார்த்திருக்கான். பேரையும் பணத்தையும் பார்த்திருக்கான். உடனே வீட்டுக்கு ஓடிவந்து தந்துட்டான்...”
கடவுளுக்கு வணக்கம்! மாதம் அறுபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழும் பையன். யாருக்குமே தெரியாமல் பணம் அவன் கையில் கிடைக்கிறது... நான் பணத்தை எடுத்து வத்சராஜனிடம் நீட்டினேன்.
“வேண்டாம் சார்.”
“இதைக் கொண்டு வந்து கொடுக்கணும்னு எப்படி உனக்கு தோணுச்சு?”
“சார், இது உங்களோடதுதான்னு எனக்கு நல்லா தெரியும். கொண்டுவந்து இதை உங்க கையில கொடுக்கலைன்னா தெய்வத்தோட கோபத்துக்கு நான் ஆளாகணும் சார்.”
நான் சிறிது தூரம் அந்த இந்து பையனையே பார்த்தேன். தர்மம், நீதி, உண்மை- எதுவும் உலகை விட்டு காணாமல் போகவில்லை. வலது கையை உயர்த்தியவாறு வத்சராஜனிடம் சொன்னேன்.
“வத்சராஜா, உனக்கு எல்லாக் காலத்திலும் கடவுள் அருள் செய்யட்டும்!”
சுபம்
மங்களம்