வத்சராஜன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7584
“என்ன ஆச்சு?”
“வாழ்க்கை முடியப் போகுது” - வயதானவர் கண்ணீர் மல்கக் கூறினார். “ஒண்ணுமில்ல... கஷ்டப்பட்டு நடந்து அஞ்சு மாசமா நான் வந்துக்கிட்டு இருக்கேன். அதை எடுத்துக்கிட்டவனுக்கு அதுனால என்ன லாபம் கிடைக்கப் போகுது? தெய்வம் அவனுக்கு அதற்கான தண்டனையைத் தரட்டும்.”
“என்ன விஷயம்?” வரிசையில் நின்றிருந்த ஒரு பென்ஷன்காரர் கேட்டார்.
“பாவம்... இவரோட பென்ஷன் புத்தகம் தொலைஞ்சு போச்சு. இந்த ட்ரெஷ்ஷரியில் வச்சுத்தான் அது காணாமல் போனது. ஏதோ ஒரு பென்ஷன்காரர் கையில் அது கிடைச்சிருக்கு. கிடைச்ச ஆளு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு. இந்த ஏழை மனிதனுக்கு அந்த பென்ஷன் பணம் மட்டுமே ஆகாரம். பென்ஷன் புத்தகத்தைக் காட்டாம இனிமேல் பென்ஷன் தரமாட்டாங்க!”
“வே பென்ஷன் புத்தகம் வாங்க முடியாதா?”
“அஞ்சு மாசமா முயற்சி பண்றார். ஆனா இதுவரை கிடைக்கலை. மனு கொடுத்தார். பணம் கட்டினார். கடிதங்கள் எழுதினார். கெஸட்டில் விளம்பரப்படுத்தினாங்க. அந்தப் பென்ஷன் புத்தகத்துல திருட்டுக் கையெழுத்துப் போட்டு வேறு யாராவது பணத்தை வாங்க வந்தாங்களான்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. நாட்கள் இப்படி போய்க்கிட்டு இருக்கு. பாவம்... இந்த மனிதர் கஷ்டப்படுறார்...”
“உலகத்துல இருந்து உண்மை, தர்மம், நீதி, எல்லாமே இல்லாமப் போச்சு. என்னை நஷ்டப்படுத்துறவனுக்கு கடவுள் கூலியைத் தரட்டும்!”
பாவம் இந்த மனிதரை யார் இப்படி கஷ்டத்திற்குள்ளாக்குவது? கையில் அப்படியே கிடைத்திருந்தாலும், அதை உடனடியாக அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்காமல் அதை எதற்கு அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள்? பென்ஷன்காரர் ஒரு அரசாங்க ஊழியர். இதற்கு முன்பு அவர்களுக்குள் ஏதாவது முன் விரோதம் இருக்குமோ? என்ன இருந்தாலும் கையில் கிடைத்த பென்ஷன் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது என்பது உண்மையிலேயே பெரிய தவறுதான். க்யூ மெதுவாக நகர்ந்து நகர்ந்து நான் சிறிய ஜன்னலருகில் வந்து விட்டேன். உள்ளே அமர்ந்திருக்கும் அலுவலரின் கையில் நான் என்னுடைய பென்ஷன் புத்தகத்தையும் கையெழுத்துப் போட்ட ஃபாரத்தையும் கொடுத்து டோக்கன் வாங்கினேன். ட்ரெஷ்ஷரியின் உலோக வலையைத் தாண்டி இருந்த இரண்டு ஓட்டைகளுக்கு அருகில் நின்றிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாகக் காத்திருந்தேன். முதன் முதலாக எனக்கு பென்ஷன் கிடைத்தபோது இந்தியப் பெரும் நாடு முழுக்கக் கேட்கிற மாதிரி “மஹாத்மா காந்தி கீ ஜே!” என்று உரத்த குரலில் கத்தவேண்டும் போல் இருந்தது. கதராடை அணிந்த லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஒரு காலத்தில் அந்த கோஷத்தை எழுப்பினார்கள். அன்று அது ஒரு புரட்சி கீதமாக இருந்தது. அன்று கதர் புரட்சியின் சின்னமாக இருந்தது. இன்று கதரின் புனிதம் போய்விட்டது. காந்திஜியை இந்தியர்கள் மறந்து விட்டார்கள். இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. நான் காத்து நிற்கிறேன். என் பெயரை இப்போது அழைப்பார்கள், இப்போது அழைப்பார்கள்! நேரம் போய்க் கொண்டேயிருந்தது. கடைசியில் என் பெயரை அழைத்தார்கள். டோக்கனைக் கொடுத்து என்னுடைய பென்ஷன் புத்தகத்தையும் பணத்தையும் வாங்கினேன். ரூபாய் நோட்டுக்களை பென்ஷன் புத்தகத்திற்குள் வைத்து, அந்த பென்ஷன் புத்தகத்தை மிகவும் பாதுகாப்பாக இடது கையிடுக்கிற்குள் இறுகப் பிடித்துக் கொண்டு, குடையை விரித்து நடந்தேன். ஒரு மைல் தூரம் நடந்தவுடன்- நான் மைல் என்று சொல்வது புதிதாக வந்திருக்கும் கிலோமீட்டர் என்பதைப் பற்றி மனதில் நினைக்காததே காரணம்- ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து அரை பிரியாணி சாப்பிட்டு முடித்து தேநீர் அருந்தினேன். வீட்டில் ஃபாபி பஷீர், ஷாஹினா பஷீர், அனீஷ் பஷீர் - எல்லோரும் எனக்காகக் காத்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு முழு பிரியாணியை பார்சலாக வாங்கினேன். இரண்டு வயதான அனீஷ் பஷீருக்கு தனியாக அவித்த பழம் வாங்கினேன். எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதி சில்லரையை வாங்கி சட்டைப் பாக்கெட்டிலிட்டேன். மீதி பணம் முழுவதும் பென்ஷன் புத்தகத்திற்குள்தான் இருந்தது. மிகவும் பாதுகாப்பாக அதை இடது கையிடுக்கிற்குள் இறுக்கிக் கொண்டேன்.
கையில் இருந்த பார்சல்களுடன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். பல பஸ்களும் வந்தன. நான் செல்ல வேண்டிய பஸ் வந்தபோது, அதற்குள் பயங்கர கூட்டம் இருந்தது. பயங்கர நெருக்கடிக்குள் சிக்கி எப்படியோ நான் பஸ்ஸுக்குள் ஏறி விட்டேன். நல்ல வேளை எனக்கு ஒரு இருக்கை கிடைத்தது. பஸ் முழுமையாக நிறைந்து வழிந்தபோது பஸ் புறப்பட்டது.
நான் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் போராளி. முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவை அடக்கி ஆண்ட வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடியவன் நான். இந்த உண்மையை என்னால் நம்ப... என்னைப் போல லட்சக்கணக்கான பேர் இருந்தார்கள். அவர்களையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்... எல்லாம் முழுமையாக மறக்கப்பட்டு விட்டன. யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட போராளிகளைப் பற்றி இவ்வளவு நாட்கள் கழித்து நினைத்துப் பார்த்தது யார்? ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்திதான். என்ன இருந்தாலும், இது ஒரு நல்ல விஷயம்தான். விடுதலைக்காகப் பாடுபட்ட எவ்வளவோ பேர் மரணத்தைத் தழுவி விட்டார்கள். இருந்தாலும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு பென்ஷன் அனுமதித்திருக்கின்றனர். இந்திராகாந்திக்கு தெய்வம் அருள் செய்யட்டும். அந்தக் காலத்தில் இளைஞனாக இருந்த காலத்தில் நான் வைக்கம் இங்கிலீஷ் பள்ளியில் படிக்கும்போது என்னைப் பெற்ற அன்னையின் கையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு யாரிடமும் ஒரு வார்த்தைகூட கூறாமல் வீட்டை விட்டு ஓடி மிகவும் தூரத்தில் இருந்த கோழிக்கோட்டிற்கு வந்து உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்டத்தை மீறி நாட்டு விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் பங்கு பெற்று அடியும் இடியும் வாங்கி சிறைத்தண்டனை அனுபவித்தேன். அப்போது எதிர்காலத்தில் இப்படியொரு பென்ஷன் கிடைக்கும் என்று நான் நினைத்ததில்லை. எதையும் எதிர்பார்க்காமல் ஈடுபட்ட செயல் அது. தாய் நாட்டின் விடுதலை. அதற்காக நான் போராடினேன். அவ்வளவுதான். எது எப்படியோ இப்போது இந்த பென்ஷன் கிடைத்திருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். இதை பிள்ளைகளின் படிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மகள் ஷாஹினாவை ஒருபோர்டிங் ஸ்கூலில் சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் செலவழிக்க வேண்டி வருகிறது. மகன் அனீஸை பள்ளிக்கு அனுப்பும் போது அவனையும் படிக்க வைக்கலாம். எல்லாம் நான் உயிரோடு இருந்தால் மட்டுமே. கடவுளே, எனக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் தந்து அருள் செய்ய வேணடும்.