வத்சராஜன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7584
நானும் ஒரு பழைய சுதந்திரப் போராட்டக்காரன்தானே! அரசியல் பென்ஷன் வாங்க எனக்குத் தகுதி இருக்கிறது. ஆனால், விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் கிடந்தேன் என்று சொன்னால் மட்டும் போதாது. சிறைத்தண்டனை அனுபவித்ததற்கான தெளிவான சிறைச் சான்றிதழ்களைத் தயார் பண்ணித் தர வேண்டும். ஆனால், சிறைகளில் அதற்கான அடையாளங்கள் இருக்குமா என்ன? வருடங்கள் எவ்வளவோ கடந்து ஓடிவிட்டனவே! இருந்தாலும் சிறை அதிகாரிகளைப் பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் சிறையில் இருந்ததற்கான அத்தாட்சிகளை அவர்கள் சரியாக வைத்திருக்கவே செய்கிறார்கள். சிறைச் சான்றிதழ்கள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் கிடைத்தன.
கோழிக்கோடு மாவட்ட சிறையில் நான் 1930 ஆம் ஆண்டு இருந்திருக்கிறேன். என்னுடைய எண்: 8962.
கண்ணூர் சிறையில் நான் இருக்கும் போது என்னுடைய எண்: 6012.
திருவனந்தபுரம் சிறையில் இருக்கும்போது என்னுடைய எண் 5091.
நான் மேலே சொன்ன சிறைகளில் பல வருடங்கள் கடுங்காவல் தண்டனைகள் அனுபவித்திருக்கிறேன். இது இல்லாமல், கணக்குப்பார்க்க முடியாத அளவிற்கு எத்தனையோ முறை போலீஸ் லாக்கப்பில் இருந்திருக்கிறேன். ஒன்பது மாதத்திற்கும் மேலாக கொல்லம் கஸ்பா போலீஸ் லாக்கப்பில் கிடந்த ஞாபகம் இப்போது கூட தெளிவாக இருக்கிறது. போலீஸ் லாக்கப்பிலும் சிறையிலும் இருந்து நான் கதைகள் எழுதியிருக்கிறேன். டைகர், போலீஸ்காரனின் மகன், கிழவன் பணிக்கர் ஆகிய கதைகள் நான் கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்பில் அடைக்கப்பட்டு கிடக்கும்போது எழுதியவையே. திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் இருக்கும்போது எழுதியதுதான் நகைச்சுவை நிறைந்த ‘காதல் கடிதம்’. மலபார் போலீஸ் மட்டுமே என்னைத் தாக்கியிருக்கிறது. தாக்கினர் என்றால் அடித்தும், இடித்தும் கால்பந்தை உதைப்பது மாதிரி போலீஸ்காரர்கள் அங்குமிங்குமாய் உதைத்தும், பிடித்துத் தள்ளியும் விளையாடினார்கள். கடைசியில் குனிந்தவாறு நிறுத்தி இரண்டு கைகளையும் சுருட்டி வைத்துக் கொண்டு ஓங்கி ஓங்கி ஆவேசமாகக் குத்தினார்கள். அவர்கள் அப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்: முஸ்லிம். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் என்னை அவர்கள் ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் நான் ‘அம்மா’ என்ற கதையில் முழுமையாகக் கூறியிருக்கிறேன். இந்தியாவைச் சேர்ந்த போலீஸ்காரர்களுக்கும் எதிராளிகளுக்கும் இந்தியா நிச்சயம் விடுதலை அடையும் என்ற நம்பிக்கை சிறிதுகூட இருந்ததில்லை என்பதே உண்மை. அதைப் போலவே இங்கிருந்த பெரும்பாலான அறிவாளிகளுக்கும் பெரும்பாலான இலக்கியவாதிகளுக்கும்கூட இந்தியா விடுதலை பெறும் என்ற நம்பிக்கையே கிடையாது. தம்புரான்மார்களும், மகாராஜாக்களும் இந்தியாவை ஆளுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படியொரு நம்பிக்கையும் கொண்ட ஒரு அறிவாளி நண்பன் எனக்கும் இருந்தார். அவர் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதில் மஹாத்மா காந்தியை எதிர்த்து பல கட்டுரைகளையும் அவர் எழுதிக் கொண்டிருப்பார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் முழுமையாக பைத்தியக்காரர்கள். பையத்திக்காரர்களின் தலைவர் தான் மிஸ்டர் காந்தி என்றெல்லாம் அவர் எழுதிக் கொண்டிருப்பார். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியா சுதந்திரம் என்ற ஒன்றை அடைந்தது. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசாங்கங்கள் உருவாயின. அப்போது நம்முடைய அறிவாளி நண்பர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கதர் உடை அணிந்து அமைச்சராகவும் ஆனார். அதைப் பார்த்து உண்மையிலேயே நான் எரிச்சல் அடைந்து விட்டேன். சொல்லப்போனால் 1929 ஆம் ஆண்டிலிருந்து நான் கதராடை அணிந்து வருகிறேன். அந்தக் காலத்தில் கதராடை அணிந்த மனிதர் யாரையாவது பார்த்தால், அவரை அடித்து உதைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் நம்முடைய போலீஸ்காரர்கள். எல்லாம் முடிந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்முடைய அறிவாளி, கேலியும், கிண்டலும் செய்த கதராடையை அணிந்து அமைச்சராகி விட்டார். இதைப்போல எத்தனையோ சந்தர்ப்பவாதிகள் கதராடை அணிய ஆரம்பித்தனர். அதனால் நான் கதராடை அணிவதை நிறுத்தி விட்டேன்.
நான் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி இருக்கிறேன். உதை வாங்கியிருக்கிறேன். சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன். கதைகள் எழுதியிருக்கிறேன். நான் வாங்கிய அடி, உதைகளையும் சிறை வாழ்க்கையையும் இப்போது நடந்த மாதிரி நினைத்துப் பார்க்கிறேன்.
இந்திய அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் எழுநூறு ரூபாய் எனக்குப் பென்ஷனாக அனுப்பிக் கொண்டிருந்தது. கேரளா அரசாங்கம் மாதந்தோறும் முந்நூறு ரூபாய் தருகிறது. இதற்கு மேலாக தாமிர பத்திரங்கள். முதல் தாமிர பாத்திரம் தேசிய சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப் என்ற முறையில் எனக்கு தரப்பட்டது. அதாவது இலக்கியத்திற்கு இரண்டாவது தாமிரப் பத்திரம் இந்தியா என்ற என் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர் என்பதற்காகத் தரப்பட்டது. அதை வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது முன்பு சுதந்திரத்திற்காகப் போராடிய எத்தனையோ வீரர்களை நான் பார்த்தேன். எத்தனையோ பேரைப் பார்க்க முடியவில்லை. எத்தனையோ பேர் அடியும் உதையும் வாங்கி சிறையிலேயே கிடந்து இறந்து போனார்கள். பலர் தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டார்கள். உயிரோடு இருப்பவர்கள் கிழவர்களாகவும் கிழவிகளாகவும் ஆகிவிட்டார்கள். அந்தக் கூட்டத்திலேயே இளைஞனாக இருந்தவன் நான்தான்.
மத்திய அரசாங்கம் ராஷ்ட்ரீய பென்ஷன் தருவதாகச் சொன்னபோது ஒரு பென்ஷன் புத்தகம் தந்தது.
அதைத்தான் நான் என்னுடைய இடது கையின் இடுக்கில் இறுகப் பிடித்தவாறு வைத்திருந்தேன். லைன் பஸ் வந்தபோது நான் அதில் ஏறி நகரத்தில் இறங்கி வெயிலில் நடந்து சப் ட்ரெஷ்ஷரிக்குச் சென்றேன். ட்ரெஷ்ஷரியில் பென்ஷன் வாங்க வந்த கிழவிகளும் கிழவர்களும் ஏராளமாக நிறைந்திருந்தார்கள். ராஷ்ட்ரீய பென்ஷன் வாங்க வந்தவர்கள் மிகச்சிலரே. இளம் வயது பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அங்கு இருந்தார்கள். பள்ளிக் கூடத்திற்குத் தேவையான சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தத்தில் படு ஆரவாரமாகச் சூழல் இருந்தது. குண்டுகள் நிறைந்த துப்பாக்கிகளைக் கையில் வைத்த போலீஸ்காரர்கள், ட்ரெஷ்ஷரியில் பணம் செலுத்த வந்தவர்கள் எல்லாருமே அங்கு இருந்தார்கள். பென்ஷன் ஃபாரத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, அதன்மேல் கையெழுத்துப் போட்டு முத்திரை அடிக்கும் ஆட்களின் முன்னால் பென்ஷன் வாங்க வந்தவர்களும் மற்றவர்களும் கூட்டமாக நின்றிருந்தார்கள். முத்திரை அடித்து விட்டார்கள் என்றால் அதற்குப் பிறகு ஒரே ஓட்டம்தான். பென்ஷன் புத்தகத்தையும் ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப் போட்டு முத்திரை அடித்த ஃபாரத்தையும் தந்து ஒரு ஓட்டையைப் போல் இருக்கும் ஜன்னல் வழியாக டோக்கன் வாங்க வேண்டும். ஆனால், ஆட்கள் என்ன குறைவாகவா இருக்கிறார்கள்? எல்லோரும் வரிசையில் நின்றிருக்கிறார்கள். க்யூ மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு வயதான மனிதர் நிற்க முடியாமல் களைத்துப்போய் க்யூவிற்கு அருகில் வராந்தாவில் சுவரோடு உட்கார்ந்தார். வரிசையில் நின்றிருந்த ஒரு ஆள் கேட்டார்.