Lekha Books

A+ A A-

தெருவிளக்கு

theruvilaku

ருள் எத்திக்கும் வியாபித்திருந்தது. போகிற பாதைகூட சரியாகத் தெரியவில்லை. வானில் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் "மினுக்மினுக்”கென்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவுகூட இன்னும் எழவில்லை.

சாலையின் திருப்பத்தில் பஞ்சாயத்து விளக்கொன்று மங்கலான ஒளியைப் பரப்பிய வாறு நின்று கொண்டிருந் தது. மங்கலான அந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஒளி, புகை படிந்து போன கண்ணாடிக் கூட்டை ஊடுருவி சற்று தூரத்திற்காவது பரவிக் கிடந்த இருளை விரட்டிக் கொண்டிருந்தது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு மங்கலான, சற்று சிவப்பான அந்த வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையே ஒருவிதமான போட்டியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த அளவிற்குச் சக்தியற்று சோம்பிப் போய் "மினுக் மினுக்”கென்று கண்ணாடிக் கூட்டினுள் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. எந்த நேரத்திலும் இருள் அந்த ஒளியை வென்று தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வியாபிக்கச் செய்துவிடுமோ என்று, ஒவ்வொரு நிமிடமும் சந்தேகம் கொள்ளச் செய்து கொண்டிருந்தது நிலவிய சூழ்நிலை.

விளக்கு கம்பத்தின்மேல் ஏணியொன்று சாய்வாக வைக்கப்பட்டிருந்தது. மூங்கிலால் செய்யப்பட்டிருந்த அந்த ஏணி செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் ஆனதோ என்று கூறிக் கொள்ளும் வகையில் பழமையானதாக இருந்தது அது.

விளக்கு கம்பத்திற்குச் சற்று தூரத்தில் இருக்கிறது சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடை. சங்கரன் பிள்ளை மிகவும் நல்லவர் என்று எல்லாருமே கூறுவார்கள். எந்த நேரமும் வழுக்கை விழுந்த தலையில் வெயில்பட்டு ஒளிரும் வண்ணம் நின்று கொண்டு, வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே கறை படிந்த முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரியும்படி தேநீர்க் கடைக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் சங்கரன் பிள்ளை.

தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தினாலோ என்னவோ, சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடைகூட சற்று தெளிவில்லாம லேயே தெரிந்தது. கடையின்முன் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் குத்துக்காலிட்டு தான் மட்டும் தனியே உட்கார்ந்திருக்கிறான் ஒருவன். குளிரினாலோ என்னவோ, அடிக்கொருதரம் உடலை மூடியிருக்கிற பழமையான அந்தப் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொள்கிறான். அவன் இன்னும் உறங்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். இருளின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனுடைய முனகல் சத்தம் காற்றில் கரைந்து, விரவி வியாபித்துக் கொண்டிருந்தது. இந்த நடுநிசி நேரத்திலும் கண்மூடாமல் விழித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதன் யாராக இருக்க முடியும்?

கிழக்கேயிருந்து தேங்காயை ஏற்றிக்கொண்டு போகும் லாரி "உய்” யென்று சத்தம் எழுப்பியவாறு சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. அநேகமாக அது சங்கனாச்சேரி சந்தைக்குப் போகலாம். சாலையின் முனையில் லாரி திரும்பும்போது, பின்பக்க விளக்கிலிருந்து வெளிவரும் ஒளி தேநீர்க் கடையின் உள்ளே விழ, தலையைத் தூக்கிப் பார்த்துக்கொள்கிறான் அந்த ஆள்.

அது வேறு யாருமல்ல, கொச்சு குட்டிதான். அந்த ஊரில் எல்லாராலும் விரும்பப்படுகிறவனும், யாருக்கும் கேடு நினைக்காதவனுமான கொச்சு குட்டி. கொச்சு குட்டியை நினைக்கும் ஒவ்வொரு தருணமும், நிச்சயம் அந்தத் தெரு விளக்கும் நம்முடைய மனதில் தோற்றம் தரத்தான் செய்யும். அந்த அளவிற்கு அந்தத் தெரு விளக்கு கொச்சு குட்டியின் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டறக் கலந்திருந்தது. தெரு விளக்கு எரியவில்லையென்றால், யாருடைய மனதிலும் முதன்முதலில் ஞாபகத்திற்கு வருவது கொச்சு குட்டியின் முகமாகத்தானிருக்கும். அந்த அளவிற்கு அந்தத் தெருவிளக்கு அவனுடைய வாழ்க்கையில் உறவு கொண்டிருந்தது. இந்த உறவு இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. கிட்டத்தட்ட இருபத்து நான்கு வருடப் பிணைப்பு கொண்ட ஒரு சமாச்சாரம் இது.

இந்தக் கால இடைவெளியில்தான் அந்த ஊரில் எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன. என்னென்ன புதுமைகளும் மாற்றங்களும் உண்டாகியிருக்கின்றன. சாக்கடை தேங்கிக் கிடந்த இடங்களெல்லாம் இன்று எந்த அளவிற்கு மாறிப்போய் புதுமையான கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. காளை வண்டி போகவே முடியாதிருந்த அந்தத் தூசு படிந்த சாலைகளில், இன்று லாரிகளும் பஸ்களும் "விர்விர்”ரென்று ஓசை எழுப்பிக்கொண்டு விரைந்து கொண்டிருக்கின்றன. செய்திப் பத்திரிகை என்றால் என்னவென்றே அறியாத கிராம மக்கள் இன்று உலகக் கதை முழுவதையும் பேசி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்பகமும் இளைஞர் நற்பணி மன்றங்களும் தெருவுக்குத் தெரு எழும்பியிருக்கின்றன. தேநீர்க் கடையோ சாராயக் கடையோ இல்லாதிருந்த ஊரில் இன்று எத்தனை சாராயக் கடை! தேநீர்க் கடை! தபால் அலுவலகமும், நர்சரி பள்ளிக்கூடமும், கூட்டுறவு சங்கமும், கட்சி அலுவலகங்களும்கூட இன்று அந்த ஊரில் உருவாகி விட்டிருக்கின்றன. அப்பப்பா... இந்த இடைவெளியில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் சம்பவித்துவிட்டிருக்கின்றன. ஆனால், எல்லாமே மாறிவிட்டிருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் மாறாமல் இன்றும் இருக்கிறதென்றால் அது அந்தத் தெருவிளக்குதான்.

சாலை திரும்பும் இடத்தில் ஒரு மூலையில், கேட்பாரற்று தன்னந்தனியே கரையான் அரித்துப்போன ஒரு மரத் தூணின் உச்சியில் இருக்கிறது அந்தத் தெருவிளக்கு. கடந்த காலத்தில் நடந்த எத்தனை எத்தனைச் சம்பவங்களைக் கண்ட சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது அது!

மாலை வந்துவிட்டால் போதும். வெளிச்சம் தர ஆரம்பித்து விடும் விளக்கு. ஆதவன் தன்னுடைய முகத்தை மலையின்பின் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கொச்சு குட்டி என்ற அந்த மனிதன் மெல்ல மெல்ல அசைந்தவாறு சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பான். பழமையான அந்த ஏணியில் ஏறி தினமும் விளக்கேற்றும் ஆத்மா அதுதான்.

இந்த நிகழ்ச்சி இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்றல்ல. எத்தனையோ வருடங்களாக ஒரு தொடர்கதை போன்று தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற ஒன்று இது.

தேநீர்க் கடைத் திண்ணையை விட்டு மெல்ல எழுந்தான் கொச்சு குட்டி. மெதுவாக நடந்து சென்ற அவன் கால்கள் விளக்கு மரத்தினடியை அடைந்ததும் நின்றன. அவன் காலடிச் சத்தம் கேட்டு, விளக்கு மரத்தினடியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த சொறி நாயொன்று மிரண்டுபோய் இருளினூடே ஓடி மறைந்து போனது.

விளக்கு மரத்தினடியில் ஊன்றப்பட்டிருந்த குத்துக்காலில் சிறிது நேரம் அப்படியே அமர்ந்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய மனம் அப்போது எத்தனையோ வருடங்களாக நடைபெற்று வருகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் வரிசைக் கிரமத்தில் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறிது நேரம் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அப்பப்பா! அவற்றில்தான் எத்தனை கசப்பான அனுபவங்கள்! அவை மீண்டும் மீண்டும் வலம் வந்து கொண்டிருந்தன மனத் திரையில்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel