தெருவிளக்கு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6955
இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது கொச்சு குட்டி சிறிய பையனாக இருந்தான். வயது வேண்டுமென்றால் பதினான்கு அல்லது பதினாறு இருக்கும். கிழிந்துபோன சட்டையும் அரைக்கால் ட்ரவுசரும் போட்டுக்கொண்டு நாடோடிக் குழந்தைகளின் கூட்டத்தில் அவனும் ஒருவனாகச் சேர்ந்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பான். பனைமரம் போன்ற கரிய உடம்பும், எண்ணெய் தேய்த்தே பல நாட்கள் ஆகிவிட்டன போலும் என்று அறிவிக்கும் தலைமுடியும், வட்ட முகமும் கொண்ட அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்.
அப்பப்பா... அந்தக் காலகட்டம்தான் எத்தனை இனிமையான ஒன்றாக இருந்தது! வேதனையும் கண்ணீரும் அவலம் நிறைந்த வாழ்க்கையும் அப்போதெல்லாம் அவனுக்கு என்னவென்று கூடத் தெரியாது.
அப்படி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தபோதுதான் அது சம்பவித்தது. அன்றே அவனுடைய வாழ்க்கைப் பயணம் வேறு திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்துவிட்டது. ஆற்று நீர் போகும் போக்கில் அல்ல, எதிர் திசையில்...
அவனுடைய தந்தையும் தன்னுடைய இளமைக்காலம் முதலாகவே விளக்கு வைப்பவனாகத்தானிருந்தான். முதுமையில்கூட தன்னுடைய தளர்ந்துபோன கால்களால் நடந்து சென்று பழமையான ஏணியில் ஏறி நடுங்கும் விரல்களுடன் அவன் விளக்கு வைத்ததுகூட, தன்னுடைய ஒரே மகனான கொச்சுக் குட்டியின் வயிறு வளர்க்கதான்... அன்று இரவு... இப்போதும் அந்த நினைவு கொச்சு குட்டியின் மனதின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. காற்றும் மழையும் போட்டி போட்டுக்கொண்டு நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த அந்த அமைதியான இரவில், அவனுக்கென்றே வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் இந்த உலகை விட்டுப் போய்விட்டது நிரந்தரமாக.
கொச்சு குட்டி கதறினான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றான்.
அவனுக்கு இந்த உலகில் சொந்தமென்று கூற யார் இருக்கிறார்கள்? பையில் காலணாகூட இல்லாத துர்ப்பாக்கிய நிலை அவனுக்கு.
வாழ்க்கை என்ற கடும் பாறையில் அந்த பாலகன் ஏறத் தொடங்கினான். உலகம் என்றாலே என்னவென்று அறிந்திராத அந்தச் சிறு வயதில்...
இப்படித்தான் அந்தப் புதிதாக விளக்கு வைப்பவன் வாழ்க்கை அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தான். அவனை விளக்கு ஏற்றுபவனாக ஆக்கியதுகூட இந்தச் சமுதாயத்தின் சில நிர்ப்பந்தங்கள்தானே!
வாழ்க்கையின் தூசு படிந்த நீண்ட பாதையில் அந்தச் சிறுவன் தளர்ந்துபோன கால்களால் நடக்கத் தொடங்கினான்.
ஒவ்வொரு இடத்திலும் அவனுக்குக் கிடைத்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொன்றுமே அவனுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. இப்படித்தான் உலகமென்ற நீரோட்டத்துடன் அவனும் இரண்டறக் கலக்க ஆரம்பித்தது.
பாதையில் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் வாகை மரத்தின் இலைகள் சுமார் பத்து முறை உதிர்ந்து, தளிர்த்து, பூத்து, பின் உதிர்ந்திருக்கின்றன. எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. கடந்து போன காலகட்டம் மனிதனிடத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் இல்லை.
குழந்தைப் பருவம் இளமைக்கு வழிவிட்டது. துடிப்பும் உற்சாகமும் கொண்ட வாலிபப் பருவம் நடனமாடி மெல்ல நெருங்கி வந்தது.
அப்போதே புதிய வாழ்க்கையும் ஆரம்பமாகிவிட்டது. சிறு வயதில் விளக்கு ஏற்ற ஆரம்பித்த கொச்சு குட்டி இதோ இளைஞனாக மாறியிருக்கிறான். அந்தக் கரங்களில் இன்று நல்ல பலமிருக்கிறது. அந்த மனதில் நிறைய தைரியமிருக்கிறது. அந்த உடம்பில் தெம்பும், உற்சாகமும் இருக்கின்றன. கொச்சு குட்டி இன்று ஒரு வாலிபன். வாலிபப் பருவத்திற்கே உரிய கம்பீரம் அவனுடைய முகத்திலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவனுக்கும் சில லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பசுமை தோன்றும் கரையை நோக்கிப் பயணம் செய்யும் பயணிதான் கொச்சு குட்டி. வாழ்க்கையில் கஷ்டமும் அவலமும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் லட்சியமும் இல்லாமலா போகும்? அந்த லட்சியங்கள்... எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.
சின்னம்மாவுடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது எத்தனையோ வருடங்களுக்கு முன்னால்.
ஆதவன் தன்னுடைய பொன் கிரணங்களைச் சுருக்கிக் கொண்டு மலையின்பின் சென்று துயில் கொள்ளச் செல்லும் நேரத்தில், பழமையான அந்த விளக்கை ஏற்றி வைக்கும் கொச்சு குட்டியைப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சுற்றி நின்றவாறு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அரைப் பாவாடையும் ப்ளவுஸும் அணிந்து, தலைமுடியை முடிந்து தூக்கிக் கட்டிய சின்னம்மா பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளக்கு மரத்தினடியில் அமர்ந்தவாறு மாலை வேளைகளில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஊர்க் கதை பேசிச் சிரிப்பாள். அவர்களில் ஒருவனாக இருந்து வந்தான் கொச்சு குட்டி என்ற அந்தப் பையனும்.
அப்போதுதான் அவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் முளைவிட ஆரம்பித்து, காலச்சக்கரம் பல முறை சுற்றிவிட்டது. அந்த பழக்கம் மற்றொரு திக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த அன்பு மாலையில் மணமும் வண்ணமும் நிறைந்த மலர்கள் மட்டுமே இருந்து அணி செய்தன. வேறுபாடு என்பதற்கே அங்கு இடமில்லை. அந்த பந்தத்திற்கு எதிராக ஒரு குரலும் இல்லை- ஏன் ஒரு குழந்தையின் குரல்கூட.
விளக்கு வைப்பவனுக்குச் சமுதாயத்தில் அப்படியொன்றும் பெரிய ஸ்தானமில்லைதான். அவனுக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை, சுற்றமோ, பதவியோ, சொத்தோ ஒன்றுமில்லை. ஆனால், தான் மட்டும் தனியன் என்றிருந்த அவன்மீதும் அன்பு செலுத்த இன்று ஒரு புதிய ஜீவன் இருக்கிறது... யார் தடுத்தாலும் தகர்க்க முடியாத பிணைப்பு அது. சின்னம்மா வேறு யாருமல்ல. தெரு கூட்டும் ஏலிச் சேட்டத்தியின் மகள்தான். அவள் பிறந்ததும் வளர்ந்ததும்கூட சமுதாயத்தின் தாழ்வான ஒரு சுற்றுச் சூழலில்தான். அந்த உறவுக்கு எதிராக வாய் திறக்க யாரால்தான் முடியும்? இப்படித்தான் எவ்வித இடையூறுமின்றி அந்த அன்பு வளர்ந்தது.
ஆனால், நல்லவரான தேநீர்க் கடை சங்கரன் பிள்ளை மட்டும் அவ்வப்போது வழுக்கை விழுந்த தன்னுடைய தலையைத் தடவியவாறு ஏதாவது கூறுவார்.
“பரவாயில்லை. நல்ல காரியம்தான்... பாவப்பட்ட அந்த பெண்ணுக்கு நீ பொருத்தம்தான். கடவுள் புண்ணியத்துல நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.''
“....''
கிறிஸ்துமஸ் கழிந்தவுடன், திருமணம் நடத்த வேண்டும் என்பது திட்டம். அவனுடைய எதிர்பார்ப்பு வானை முட்டிக்கொண்டிருந்தது. வாசனை நிரம்பிய மலர்களும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமும் அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் அரும்பிவிட்டிருந்தன. வானத்தில் பூ நிலாவும் மனது நிறைய இனிய கனவுகளும்... இத்தனைக் காலமும் மனதில் போற்றி வந்த எதிர்பார்ப்புகள் மொய்த்துக் கனிந்து காற்றில் மணம் பரப்பும்போது, ஆனந்தம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?
அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்கள் அவை. அப்போதெல்லாம் விளக்கு வைக்கும்போது அவனுடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கும்.