பிதாமகன் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6352
முக்கிய யூதப் பெரியவர்களும், பணியாட்களும் சேர்ந்து அந்த ஆளைப் பிடித்துக் கட்டி என்னுடைய அரண்மனைக்குக் கொண்டு வந்தார்கள். நான் முதல் நாள் குடியும், கூத்தாட்டமும் முடிந்து படுக்கும்போது பொழுது விடியும் நேரமாகி விட்டது. படுக்கையில் படுத்து கண்களை அப்போதுதான் மூட ஆரம்பித்திருப்பேன். வேலைக்காரன் வந்து என்னை அழைத்தான். நான் என்னுடைய தலையைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு, எப்படியோ கஷ்டப்பட்டு ஆடையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தபோது, இந்த ஆட்களின் கூட்டம் அங்கே நின்றிருந்தது. அவர்களுடன் இயேசுவும் இருந்தான். கிழக்குத் திசையில் அப்போது தான் வெளிச்சத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்துக் கொண்டிருந்தன. அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நான் திரும்பிப்போய் குளியலறைக்குள் நுழைந்து தலையில் சில நிமிடங்கள் நீரை மொண்டு ஊற்றினேன். தொண்டைக்குள் விரல்களை விட்டு வாந்தி எடுக்க முயற்சித்தேன். சிறிது நேரம் கக்கூஸிற்குள் நுழைந்து உட்கார்ந்தேன். பிறகு சாகப்போகிறவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு சட்ட இருக்கையின் மீது வந்து அமர்ந்தேன். என்னால் கண்களைத் திறந்து பார்க்கவே முடியவில்லை. இயேசு என் கண்களுக்கு முன்னாலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க் கொண்டேயிருந்தான். அப்போது என்னுடைய நிலையைப் புரிந்து கொண்ட ஒரு பணியாள் ஒரு பாத்திரத்தில் நான் பருகுவதற்காக ஏதோ ஒன்றைக் கொண்டு வந்து தந்தான். ரோம நாட்டு மதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகளையும் சேர்த்து தயாரித்த ஒரு வினோதமான திரவம் அது. அதைப் பருகியவுடன் நான் உற்சாகமாகி உட்கார்ந்து விட்டேன். அண்டோனியஸ், நான் மேலே சொன்ன இயேசுவைப் பார்த்து முக்கியமாக ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டேன். நீ யூதர்களின் ராஜாவா? காரணம்& அவன் அப்படி சொல்லிக்கொண்டு திரிந்தான் என்பதுதான் அவன் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டு. அதற்கு பதிலாக இயேசு என்னைப் பார்த்துச் சொன்னது என்னையே சாட்டையால் அடித்தது மாதிரி இருந்தது. ‘அப்படின்னு நீங்க சொல்லாதீங்க’& இதுதான் அவன் சொன்ன பதில். அவன் அப்படிச் சொன்னதற்காக அவனை நான் மன்னித்தேன். பிறகு அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவனுடைய ராஜ்யம் இந்த உலகத்தில் இல்லையாம். பிரச்சினை முடிந்ததா? இந்த உலகத்தில் இல்லாத ராஜ்யத்தைப் பற்றி ரோம சாம்ராஜ்யம் ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மையின் பக்கம் சாட்சியாக இருப்பதற்குத்தான் அவன் பிறந்தானாம். அதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், நான் அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உண்மை என்றால் என்ன? அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? காரணம்& அவ்வளவு சர்வ சாதாரணமாக அவன் உண்மையைப் பற்றி பேசியதுதான். அவன் பேசி முடிந்ததும் நான் வெளியே சென்று யூதர்களைப் பார்த்துச் சொன்னேன். இந்த மனிதரிடம் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் இன்று பெஸஹா பெருநாளாயிற்றே! பெருநாளன்று யாராவது ஒரு குற்றவாளியை நாம் சுதந்திரமாக விட்டுவிடவேண்டுமல்லவா? அது இந்த மனிதனாக இருக்கட்டுமே!
ஆனால், ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனை வேண்டுமானால் நாம் சுதந்திரமாக விடலாம் என்றார்கள் அந்த யூதர்கள். ‘இயேசுவை தண்டிக்க வேண்டும்!’& அவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள். குடித்திருந்த மூலிகை கலந்த திரவத்தின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டிருந்தது. இனியொரு முறை பாத்திரத்தை நிரப்பித் தரும்படி நான் கையால் சைகை செய்தேன். சொல்லிவிட்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து தலையை மட்டும் நீரால் நனைத்து குளிர்ச்சிப்படுத்தினேன். திரும்பி வந்து இரண்டாவது முறையாக பாத்திரத்தில் இருந்த திரவத்தைக் குடிக்க தொடங்கியபோது என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எல்லோரும் காணும் வண்ணம் இயேசுவிற்கு லேசாக தண்டனை தந்தால், ஒருவேளை இந்தப் பிரச்சினைக்கு முடிவுக்கு வந்தாலும் வரலாம் என்றெண்ணிய நான் இயேசுவை சம்மட்டியால் ஓங்கி அடித்தேன். யாரோ அவனின் தலையில் ஒரு முள்ளால் ஆன கிரீடத்தைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒரு சிறு தமாஷ். அந்தச் சமயத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நான் என் தலையில் கையை வைத்து சிறிது நேரம் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினேன். கண்களை மீண்டும் திறந்தது எனக்கு முன்னால் நின்றிருந்த மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுத்தான். யூதர்களுக்கு இயேசுவின் உயிர்தான் வேண்டுமாம். இந்த நேரத்தில்தான் சற்று தூரத்தில் மரியம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. ஜூலியா அனுப்பி வைத்த கடிதம் என் கைகளில் கிடைத்ததும் அப்போதுதான். அதற்குப் பிறகு நான் கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். இயேசுவின் அருகில் சென்று நான் கேட்டேன். ‘இளைஞனே, நீ உண்மையிலேயே எங்கிருந்து வருகிறாய்? இந்த உலகத்தில் இருந்துதானா?’ அதற்கு எந்த பதிலும் கூறாமல் அவன் மவுனமாக இருந்தான். அப்போது நான் அவனைப் பார்த்துச் சொன்னேன். உன்னைக் காப்பாற்றுவதற்கும் கொல்வதற்கும் உள்ள முழு அதிகாரம் எனக்கு இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? என்னிடம் நீ பேசினால் என்ன? அதற்கு அவன் நான் புரிந்து கொள்ள முடியாதபடி என்னவோ பதில் சொன்னான். நீ அப்போது என்னிடம் இருந்திருந்தால் அவன் சொன்னதன் அர்த்தம் உனக்கு விளங்கியிருக்கும். இருந்தாலும் எனக்கு கோபம் வரவில்லை. காரணம்& தன் செயலின் விளைவால் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியவான் அவன் என்பதை நான் புரிந்து கொண்டதுதான். ஆனால், நான் முதலில் சொன்னது போல் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களைத்தானே நம்மால் காப்பாற்ற முடியும் அன்டோனியஸ்? கடைசியில் கூடியிருந்த கூட்டம் அசைய ஆரம்பித்ததடா. விஷயம் மோசமாகி விட்டது. கூட்டம் அரசியல் பேச ஆரம்பித்தது. சக்கரவர்த்தியைக் குறை கூறியும் என்னை எதிர்த்தும் பேசும் குரல்கள் எழ ஆரம்பித்தன. ஆபத்து, ஆபத்து என்று என்னுடைய இதுவரையான பொதுவாழ்க்கை அனுபவம் என்னை அழைத்து ஏதோ சொன்னது. இருந்தாலும் கடைசி முறையாக ஒரு முயற்சி செய்து பார்த்தேன். ஜூலியாவை மனதில் நினைத்து நான் அவனை யூதர்களின் ராஜா ஹெரோதேஸிடம் நீதி வழங்குவதற்காக அனுப்பினேன். அதிர்ஷ்டவசமாக ஹெரோதேஸ் என்னவோ அழிவு உண்டாக்குவதற்காக அந்த நேரம் ஜெருசலேமிற்கு வந்திருந்தார். அவருக்கு மாந்திரீகவாதிகளையும், ஜோதிடர்களையும் மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.