சிரிக்கும் மரபொம்மை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6436
எப்போதும் அடக்க ஒடுக்கத்துடன் இருப்பாள். மத சம்பந்தமான பாடங்கள் சகிதமாக பள்ளி இறுதி வகுப்பை முடித்தவள். அதற்குப் பிறகு டைப் ரைட்டிங்கும், சுருக்கெழுத்தும் படித்தாள். அந்தச் சிறு நகரத்தில் இவ்வளவு தகுதிகளுடன் இருக்கும் ஒரே முஸ்லீம் இளம் பெண் ரம்லத்துபீபிதான். எத்தனையோ இடங்களுக்கு வேலை கேட்டு மனு அனுப்பினாள். ஆனால், ஒரு பயனும் இல்லை. அவளுக்கு உதவ யாருமே இல்லை. அவளை யாராவது காப்பாற்ற வேண்டும்!
காப்பாற்றினார்கள்! வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏதாவது இருந்தால், வந்து டைப் செய்ய வேண்டும். மாதமொன்றுக்கு இருபது ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும். அறுநூறோ ஆயிரமோ சம்பளமாக வேண்டும் என்று கேட்க முடியுமா? சரி என்று சம்மதிப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. அவளுக்கு இருப்பது தாய் மட்டுமே. ஓடு வேய்ந்த ஒரு சிறு வீடும் இருபது சென்ட் நிலமும் சொந்தத்தில் இருக்கின்றன. தென்னை மரத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் நூறு தேங்காய்கள் கிடைக்கும். அதை மட்டும் வைத்துக்கொண்டு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியுமா?
ஊர் பொதுவாகவே பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுதான் இருந்தது. அரிசிக்கும் மற்ற பொருட்களுக்கும் கண்டபடி விலை வைத்திருந்தார்கள். அவளின் தாய் சிறிது தூரத்தில் உள்ள மம்முஹாஜி என்ற பணக்காரனின் வீட்டில் மசால் அரைப்பது, காய்கறி நறுக்குவது, குளிப்பதற்கு நீர் இறைத்து சூடு பண்ணுவது ஆகிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மதிய நேரத்தில் சோறும் மாதம் ஒன்றுக்கு சம்பளமாக ஐந்து ரூபாயும் அவளுக்குக் கொடுக்கப்பட்டன. அங்கு தனக்குத் தரப்படும் சோற்றை மதியத்திற்கு பிறகு பத்திரப்படுத்தி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வருவாள் அதை அவளும் ரம்லத்து பீபியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். ரம்லத்து பீபிக்கு மொத்தம் இருப்பதே இரண்டு புடவைகள்தாம். அது கூட கொஞ்சம் கிழியத் தொடங்கிவிட்டது. இப்படி பல வகையிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு மாதமொன்றுக்கு இருபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு தன்னுடைய நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள் ரம்லத்து பீபி.
அவளின் வீட்டிற்கு வர இரண்டு வழிகள் இருக்கின்றன. கடைகளைத் தாண்டி வரும் ஒரு வழி. இன்னொரு வழியில் வருவதாக இருந்தால் கடற்கரை வழியே வர வேண்டும். கடலையொட்டிய வழியில் வருவதாக இருந்தால், அது பயங்கர அமைதி நிறைந்ததாக இருக்கும். அங்கு ஆட்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். மீனவர்களின் குடிசைகள், காய வைத்திருக்கும் வலைகள், கரையில் ஏற்றி வைத்திருக்கும் படகுகள், இங்குமங்குமாய் நடந்தும், ஓடியும் கொண்டிருக்கும் உடம்பில் ஆடைகள் எதவும் இல்லாத மீனவர்களின் குழந்தைகள், நாய்கள், பன்றிகள், பசுக்கள், எறுமைகள், ஆடுகள், கோழிகள், பூனைகள், பருந்துகள், காகங்கள், ஆங்காங்கே காற்று வாங்குவதற்காக கறுப்பான பாறைகளில் வந்து அமர்ந்திருக்கும் மனிதர்கள். எங்கு பார்த்தாலும் ஒரே அமைதி சூழ்நிலை. பரந்து கிடக்கும் பெரிய கடல். அதிலிருந்து கிளம்பி வந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகள். வட்டமிட்டு பறந்து கொண்டிருக்கும் கடல் காகங்கள். தூரத்தில்-... எங்கோ இருக்கும் வெளி நாடுகளில் இருந்து துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பாய்மரக் கப்பல்கள்...
சாயங்கால நேரம். காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. சூரியன் மேற்குத் திசையில் இருந்தது. இருந்தாலும் நல்ல வெப்பம். இளம் நீல வண்ணத்தில் கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்த வெள்ளைப் புடவையின் முந்தானையைத் தலையில் போட்டவாறு ரம்லத்துபீபி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். கடலை அவள் பார்க்கிறபோது, தன் தந்தையின் ஞாபகம் அவளுக்கு வரும். மனதில் இனம் புரியாத கவலை வந்து மண்டிக் கொள்ளும்.
மனதில் ஏகப்பட்ட கவலைகளைத் தாங்கியவாறு ரம்லத்து பீபி அப்படி நடந்து வருகிறபோது, ஈர மண்ணின் மேல் ஒரு அலை ஏறி இறங்கியவுடன், நிலத்திற்குள் உருண்டையாக என்னவோ தெரிந்தது.
என்ன அது? அவள் தன்னுடைய வலது காலின் பெருவிரலால் மண்ணை நீக்கிப் பார்த்தாள். ஒரு சிறிய தலை தெரிந்தது. அப்போது ஒரு அலை வந்து எல்லாவற்றையும் மூடியது. அவள் தன் புடவையை முழங்காலுக்கு மேலே உயர்த்தினாள். அலை மீண்டும் கீழே இறங்கி வந்தபோது அவள் குனிந்தாள். கையால் ஈர மண்ணை இலேசாக விலக்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை விலக்கி அவள் அதைக் கையால் தூக்கி எடுத்தாள். கிட்டத்தட்ட ஒரு அடி நீளத்தில் உள் சிரித்துக்கொண்டிருக்கும் மர பொம்மை அது!
சிரிக்கின்ற மர பொம்மை!
நல்ல கனமாக இருந்தது.
அவள் அதை உப்பு நீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்தாள். தொப்பை விழுந்த வயிறை அந்த பொம்மை கொண்டிருந்தது. சம்மணம் போட்டு அமர்ந்திருந்தது. வயது கிட்டத்தட்ட நாற்பது இருக்கும். சிரிக்கிறான்.
இந்த சிரித்துக் கொண்டிருக்கும் மர பொம்மையை என்ன செய்வது?
அந்த பொம்மையின் கழுத்தை உற்று நோக்கினால் அதைச் சுற்றிலும் ஒரு கோடு தெரியும். தலையைப் பிடித்து பலத்தை பயன்படுத்தி ஒரு முறை திருப்பினால், தலை லேசாக உயரும். உள்ளே தூய வெள்ளை நிறத்தில் பஞ்சு தெரியும். பஞ்சுக்குள் இரண்டரை இலட்சம் ரூபாயையும் தாண்டி விலை மதிப்பு இருக்கக்கூடிய ஒளி வீசிக்கொண்டிருக்கும் இரத்தினக் கற்கள் இருக்கின்றன. யாருக்கும் காட்டாமல் அதை அவள் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டியதுதான்... ஆனால், இந்த விஷயங்களை அவளுக்கு யார் விளக்கி எடுத்துச் சொல்வது?
அவள் அந்த பெரும் பொக்கிஷத்தைக் கொண்ட மர பொம்மையுடன் பாறை மேல் ஏறினாள். பொம்மையைத் தனக்கு முன்னால் வைத்துவிட்டு அமர்ந்தாள். இதென்ன உருவம்? தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் பொம்மையையே அவள் பார்த்தாள். இது ஏதாவது கடவுளின் உருவமாக இருக்குமா? இது எப்படி இங்கே
வந்தது? இதை பூமிக்கு அடியில் புதைத்து வைத்தது யார்? எதற்காக இதை பூமிக்குள் கீழே புதைத்து வைக்க வேண்டும்?
அவள் கடலையே பார்த்தாள். அலைகள் அதிலிருந்து கிளம்பி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த போது அவளுக்கு மனதில் பயம் உண்டானது. கடல் காகங்கள் இலேசாக கத்தியவாறு பறந்து சென்று அலைகளில் போய் உட்கார்ந்தன. அலைகளோடு சேர்ந்து வரும் சிறு மீன்களை உணவாகத் தின்பதற்காக இருக்கும். கடல் காகங்களால் எப்படி அலைகளின் மேல் உட்கார முடிகிறது? அவளின் வாப்பாவைப் பற்றிய கவலை கலந்த நினைவுகள் அப்போது அவளின் மனதில் வலம் வந்தன.