சிரிக்கும் மரபொம்மை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6435
அதற்குச் செலவழிக்கிற பணம் சுத்தமான ஒண்ணா இருக்கணும். நீங்க மோசமான ஒரு பிக்பாக்கெட்டா இருந்த ஆளு. திருடனா இருந்திருக்கீங்க. கடைசியில உங்க சாயா கடையை நீங்களே நெருப்பை வச்சு எரிய விட்டு நம்பிக்கை மோசம் பண்ணி அரேபிய ஆளோட இரண்டு இலட்சம் ரூபாயை அபகரிச்சிட்டீங்க. அதை வச்சுத்தான் நீங்க அரேபியாவுக்கு பரிசுத்த ஹஜ் யாத்திரை போனது! உங்களைப் போல இருக்குற கெட்ட எண்ணம் கொண்ட வஞ்சக மனம் கொண்ட ஹாஜிமார்கள் இன்னைக்கு முஸ்லீம் சமுதாயத்தில் நிறையவே இருக்காங்க நீங்களே சொல்லுங்க- உங்களை என்ன செய்றது?"
கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் மம்முஹாஜியைப் பார்த்துக் கேட்டான்.
"ஹாஜியாரே! ஒரு மூணு காலி சாக்கு தர முடியுமா?"
"தர்றேன். எதுக்கு?"
"பன்னி சைத்தானே! உன்னை மூணு துண்டா வெட்டி சாக்குக்குள்ளே போட்டு கல்லைக் கட்டி கடல்ல வீசி எறியத்தான்."
அதைக் கேட்டதும் மம்முஹாஜி நடுங்க ஆரம்பித்தான். அவன் அழுகிற குரலில் சொன்னான்.
"என்னை விட்டுடு. இனி நான் எந்தத் தப்பும் செய்ய மாட்டேன்."
"இதுவரை செஞ்ச தப்புக்கு?"
"என்ன சொல்றியோ செய்றேன்..."
"போ... ஐந்நூறு ரூபா கொண்டு வா. அந்த ஏழை பெண்களுக்கு கொடுக்கணும்."
மம்முஹாஜி வீட்டிற்குள் போய் ஐந்நூறு ரூபாயுடன் திரும்பி வந்து அதை அபுல்ஹஸனின் கையில் கொடுத்தான். அபுல்ஹஸன் சொன்னான்.
"ஒரு வெள்ளைத்தாள் கொண்டு வா."
அதை அவன் கொண்டு வர. அபுல்ஹஸன் "நான் சொல்ற மாதிரி எழுது..." என்றான்.
ஆச்சரியப்படும் விதத்தில் மம்முஹாஜி சொன்னான்.
"சரிதான்... எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது...."
"சரி... நான் எழுதுறேன்..."
மம்முஹாஜியைப் பற்றிய விஷயங்களையும் அவர் இதுவரை செய்த எல்லாத் தப்புகளையும் எழுதி அபுல்ஹஸன் படித்துக் காட்டினான். அதில் மம்முஹாஜியைக் கையெழுத்திட வைத்தான். மற்றவர்கள் சாட்சி கையெழுத்து போட்டார்கள். மம்முஹாஜியின் இரண்டு வேலைக்காராகளுக்கும் தலா பத்து ரூபாய் வீதம் அபுல்ஹஸன் கொடுத்தான். மீதியிருந்த நானூற்று எண்பது ரூபாயையும் மம்முஹாஜியிடம் திரும்பக் கொடுத்த அபுல்ஹஸன் சொன்னான்.
"அந்தப் பெண்களுக்கு உங்களின் மோசமான, சபிக்கப்பட்ட பணம் வேண்டவே வேண்டாம். பிறகு ஒரு விஷயம்... இனி மேலும் நீங்க வேற எங்கேயாவது பெண்களைத் திருமணம் செய்றதுக்கு முயற்சி பண்றது மாதிரி தெரிய வந்தால்..."
"என்னைக் கொன்னுடுவியா?"
"கொல்றது இல்ல. உங்க ஆண் குறியை ஒடிச்சு உங்க கழுத்துலயே மாலையா கட்டி தொங்க விட்டுருவேன்!"
அவர்கள் அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள். இரவு நேரத்திலேயே ரம்லத்துபீபியையும் அவளின் தாயையும் தூக்கத்தை விட்டு எழுப்பி, மம்முஹாஜியின் குற்றத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்ட தாளை அவர்களுக்கு அபுல்ஹஸன் படித்துக் காட்டினான். பிறகு அவன் சொன்னான்.
"நஷ்டஈடு ஐநூறு ரூபாய் வாங்கினேன்." ரம்லத்துபீபி சொன்னாள்.
"அந்தப் பணம் நமக்கு எதற்கு?"
அபுல் ஹஸன் சொன்னான்.
"அதை நானே திருப்பிக் கொடுத்திட்டேன். சரி... எது எப்படியோ... நிம்மதியோட உறங்குங்க நான் நாளைக்கு வர்றேன்..."
அபுல்ஹஸன் அதற்குப் பிறகு அங்கு தினமும் வர ஆரம்பித்தான்.
வேலிகளைச் சரி பண்ணி கட்டினான். வீட்டிற்கு வெள்ளை அடிக்கச் செய்தான். மின்சார விளக்குகள் பொருத்தினான். மிளகு, பச்சை மிளகாய், வெண்டை, கத்திரிக்காய் ஆகியவற்றின் நாற்றுகளைக் கொண்டு வந்து முற்றத்தில் முன்பிருந்த மாதிரியே நட்டான். தட்டைப் பயறு கொடியைப் புதிதாகக் கொண்டு வந்து நட்டான். அந்த வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடியது! ஒரு நாள் அபுல்ஹஸன் ஒரு புதிய- போர்ட்டபிள் டைப்ரைட்டர் மெஷினையும் சில தாள்களையும் சில பென்சில்களையும் கொண்டு வந்து ரம்லத்துபீபியிடம் கொடுத்துவிட்டு சொன்னான்.
"ரம்லத்தை எங்களோட நிறுவனத்தில் டைப்பிஸ்ட்டாக நியமிச்சிருக்கோம். சம்பளம் என்ன வேணும்?"
"சாப்பிடுற அளவுக்கு ஏதாவது தந்தா போதும்..."
"சரி... அப்படின்னா ஒரு கடிதம் சொல்றேன். சுருக்கெழுத்துல எழுதி, அதை இங்கிலீஷ்ல டைப் செஞ்சு கொடு. ரொம்பவும் முக்கியமான கடிதம்..."
மெஷினில் பேப்பரை நுழைத்த ரம்லத்துபீபி ஏதோ டைப் செய்தாள். பிறகு சொன்னாள்.
"நல்ல மெஷின். மிஷினை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. சரி... கடிதத்தைச் சொல்லுங்க..."
அபுல் ஹஸன் சொன்னான்.
"மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் அவர்களுக்கு,
நாட்டில் பஞ்சம், விலைவாசி உயர்வு, கொள்ளை, போராட்டங்கள், வேலை நிறுத்தம், கதவடைப்பு, கெரோ, தர்ணா, கள்ளக்கடத்தல், திருட்டுச் சந்தை, பட்டினிச்சாவு என்று எவ்வளவோ விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நீக்குவதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். அதற்கு மத்தியில் என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள், நான் ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலிக்கிறேன். அவள் சிரிக்கின்ற மர பொம்மையைப் போல் இருக்கிறாள். ஒன்றுமே பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருக்கிறாள். அவளை வற்புறுத்தி உடனடியாக என்னைக் காதலிக்கும்படி தாங்கள் உத்தரவு இட வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வளவு நேரம் சொன்னவற்றை சுருக்கெழுத்தில் எழுதிய ரம்லத்து பீபி கேட்டாள்.
"பேரு?"
"டைப் செய்... அபுல்ஹஸன்..."
"பிரதம மந்திரி இந்த விஷயத்துல எப்படி தலையிட முடியும்?"
"ஒரு நாட்டு குடிமகன் விஷயத்துல பிரதம மந்திரி கட்டாயம் தலையிட்டுத்தான் ஆகணும். அதற்கு அவருக்கு உரிமை இருக்கு..."
"சரி... பெண்ணோட பேரு?"
"சிரிக்கின்ற மர பொம்மை..."
"வேற பேரு இல்லையா?"
"இருக்கே!"
"என்ன பேரு?"
அவன் சொன்ன பெயரைக் கேட்டதும், ரம்லத்து பீபி ஆடிப் போய்விட்டாள். அதோடு மட்டுமல்ல. அந்தக் கருப்பு நிறப் பெண் ஒரு அழகியாகவே மாறிவிட்டாள். அபுல்ஹஸன் சொன்னது "ரம்லத்து பீபி" என்ற அவளின் பெயரைத்தான் அதைக் கேட்டதும் அவள் உற்சாகத்தில் துள்ளினாள்.
"அப்படியா?"
"ரம்லத்!"
"ம்"
"நான் காதலிக்கிறது மாதிரி ரம்லத், நீயும் என்னைக் காதலிக்க முடியுமா?"
"உம்மாக்கிட்ட கேட்டுச் சொல்றேன்."
"சரி... கேளு..."
ரம்லத்பீபி இருந்த இடத்தில் இருந்தவாறே சொன்னாள். ஆனா, முதல் தடவையா உங்களைப் பார்த்தப்பவே நான் யார்கிட்டயும் கேட்காம உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்."
"அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதம்தானே?"
"சம்மதம்... சம்மதம்..." - என்று சொல்லியவாறு அவள் டைப்ரைட்டர் மெஷினின் மேல் முகத்தை வைத்துக் கொண்டு அழுதாள். அபுல்ஹஸன் சொன்னான்.
"வரதட்சனையா உங்களோட வீட்டையும் நிலத்தையும் எனக்கு தருவீங்களா?"
மெதுவாகச் சொன்னாள்.