சிரிக்கும் மரபொம்மை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6436
எல்லாமே அவள் மனதில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிய உணர்வுகளே. தன்னுடைய வெண்மையான பற்களைக்காட்டி அழகாக அவள் சிரித்தாள். தொடர்ந்து மெதுவான குரலில் சொன்னாள்.
"எனக்கு இந்தப் பொம்மை இப்பத்தான் கடற்கரையில் கிடைச்சது..."
"கடற்கரையிலா?"
"சிரிச்சுக்கிட்டு ஈர மண்ணுக்குள்ளே கிடந்தது. யார் இதை மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சாங்கன்னு தெரியல. யாருக்காவது தெய்வமாக இது இருக்குமே?"
"பார்க்குறப்போ அப்படித் தெரியல. ஆமா... உன்னோட பேர் என்ன?"
"ரம்லத்து..."
"என் பேரு அபுல்ஹஸன். பொம்மையை என்ன பண்ணப்போற?"
"என்ன செய்றதுன்னே தெரியல."
"அப்படின்னா... என்கிட்ட கொடுத்திடு"- அபுல் ஹஸன் சொன்னான். நான் அதை நல்லா கழுவி காய வச்சு வார்னிஷ் அடிச்சு எங்க வீட்ல ரேடியோ மேலயோ டி.வி. செட் மேலயோ வச்சுக்குறேன். அங்க இருந்து இது சிரிக்கட்டும்."
"ரொம்ப சந்தோஷம்..." - ரமலத்துபீபி மனமகிழ்ச்சியுடன் பொம்மையை எடுத்து அபுல் ஹஸனின் கையில் தந்தாள். அபுல் ஹஸன் அதைத் தாளில் சுற்றி கையிடுக்கில் வைத்தவாறு "அப்போ... பிறகு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு பாறையை விட்டிறங்கி, மணல் வழியே நடந்து போனான்.
இரண்டரை இலட்சத்துக்கும் விட அதிகமான ஒரு தொகை தன்னை விட்டு போகிறது என்ற விஷயம் அவளுக்கு எப்படித் தெரியும்? தூரத்தில் கண்களை விட்டு மறைகிற வரை அவள் அபுல்ஹஸனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்வையை விட்டு முழுமையாக மறைந்ததும் அவள் மனதில் கவலை வந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அந்த இளைஞன் மேல் காதல் உண்டானதற்கான காரணம் என்ன? முன்பு ஒருபோதும் இப்படியொரு உணர்வு அவள் மனதில் உண்டானதில்லையே! திடீரென்று கொஞ்சமும் எதிர்பாராமல் அவன் அவள் முன் தோன்றினான். தோன்றிய சில நிமிடங்களிலேயே அவளை விட்டு மறைந்தும் போனான். "பிறகு பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறான். நாளை ஒரு வேளை வருவான்!
ரம்லத்துபீபி மனதில் மகிழ்ச்சி பொங்க உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தாள். மனம் முழுக்க சந்தோஷம் ஆக்கிரமித்திருந்தது. சிரித்துக் கொண்டிருக்கும் மரபொம்மை கிடைத்த விவரத்தை தன் தாயிடம் கூற வேண்டும். அதைச் சிரிக்கின்ற அபுல்ஹஸன் என்ற அழகனுக்குக் கொடுத்ததையும் சொல்ல வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். "அபுல் ஹஸனுக்குக் கொடுத்தேன்" என்று கூறினால் போதும். "அழகன்" என்று சொல்லாமல் இருப்பதே நல்லது. அந்த ஆளைப் பற்றி தன் தாயிடம் கேட்டால் அவள் மேலும் அவனைப் பற்றி தகவல்களைக் கூறினாலும் கூறலாம் என்ற முடிவுக்கு வந்தாள். முழுமையான சந்தோஷத்துடன் அவள் வீட்டுப் படியைக் கடந்தாள்.
நான்கு பக்கமும் வேலி கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய இடம். நடுவில் இரண்டு மூன்று அறைகளும் வராந்தாவும் கழிவறையும் கொண்ட ஓடு வேய்ந்த ஒரு சிறு வீடு. வீட்டுக்குப் பக்கத்தில் கிணறும் குளியலறையும். நான்கு பக்கங்களிலும் முற்றத்தில் வெண்மை நிறத்தில் கடல் மணல் போடப்பட்டிருக்கிறது. அந்த மணல் அவளின் தந்தை கடற்கரையில் இருந்து இரவு நேரங்களில் சுமந்து கொண்டு வந்து போட்டது. முற்றத்தைச் சுற்றிலும் மிளகும், பச்சை மிளகாயும், வெண்டையும், கத்திரிக்காயும் ஏராளமாக வளர்ந்திருந்தன. எல்லாக் காலங்களிலும் காய்க்கிற தட்டைப் பயறு கொடி தடிமனாக ஒரு மூலையில் படர்ந்திருந்தது. எல்லாம் அவளின் வாப்பாவின் விவசாயம். பலாப் பழங்கள் ஒரு ஓரத்தில் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன. மொத்தத்தில் நிலத்தையும், வீட்டையும் பார்த்தால் மனதிற்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷத்துடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் ரம்லத்துபீபி. தன் தாயின் முகத்தைப் பார்த்தபோது என்னவோ விரும்பத்தகாதது நடந்திருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
"என்ன உம்மா?"- அவள் கேட்டாள். அவளின் தாய் சொன்னாள். "மகளே, இன்னைக்கு நமக்கு சாப்பிடடுறதுக்கு ஒண்ணுமே இல்ல. என்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இந்த மாத சம்பளத்தையும் தரல. இனி வர வேண்டாம்னு ஹாஜியார் சொல்லியாச்சு..."
"என்ன காரணம் உம்மா?"
"ஒண்ணுமில்ல..."
"பிறகு?"
சிறிது நேரம் கழித்து அவளின் தாய் மெதுவான குரலில் சொன்னாள்.
"மகளே, கொஞ்சம் பயறைப் பறிச்சு வேக வைக்கலாம். பலாப் பழமும் இருக்கவே இருக்கும... சர்க்கரையும், தேயிலையும் நம்மக்கிட்ட இருக்கு. சாயா போட்டுக்கலாம். நானும் இதுவரை ஒண்ணும் சாப்பிடல, மகளே..."
ரம்லத்து பீபி சொன்னாள்.
"உம்மா... நடந்தது என்னன்னு சொல்லுங்க..."
அவளின் தாயின் கண்கள் நனைந்தன. கண்ணீர் வழிய அவள் சொன்னாள்.
"மகளே, மம்முஹாஜிக்கு உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு ஆசை. பொண்டாட்டிமாருங்கதான் உங்களுக்கு நிறைய இருக்காங்களேன்னு நான் கேட்டதற்கு இஸ்லாம்ல எத்தனை பேரை வேணும்னாலும் தான் விரும்புறபடி ஒரு ஆண் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்குன்னு சொல்றாரு. முஹம்மது நபிக்கு ஏகப்பட்ட பொண்டாட்டிமார்கள். அதனால எந்த முஸ்லீம் ஆணாக இருந்தாலும், தான் இஷ்டப்படுகிறபடி திருமணம் செஞ்சுக்கலாமாம்..."
"இந்த மம்முஹாஜிக்கு இப்போ என்ன வயசு இருக்கும்?"
"அறுபத்தேழு. இப்பவும் நான் திடகாத்திரமாகத்தான் இருக்கேன்னு அந்த ஆளு சொல்றாரு..."
"அந்த ஆளுக்கு அப்படியொரு நினைப்பு இருக்கா?" ரம்லத்துபீபி என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு சொன்னாள். "அவர் நினைக்கிறது தப்பு. முஸ்லீம் சமுதாயம் செய்யக் கூடாததை அந்த ஆளு செய்றாரு..."
மகளும், தாயும் சிந்தனையில் மூழ்கி விட்டார்கள்.
"மதத்துல அப்படி எதுவும் சொல்லப்படல. அறிவுறுத்துறதுக்கும் தண்டிக்கிறதுக்கும் ஆள் இல்லாததால் இப்படியெல்லாம் அந்த ஆளு செய்றாரு. மம்முஹாஜியைப் போல நம்மோட சமுதாயத்தில் பல பெண்களைக் கல்யாணம் செய்தவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. கல்யாணம் பண்றது, பிறகு அவுங்களை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிடுறது… இவங்க தூக்கி எறியிற மனைவிமாருங்களோட கதி? இவர்களுக்குப் பிறக்குற பிள்ளைங்களோட எதிர்காலம்? முஹம்மது நபியை மம்முஹாஜி ஒரு உதாரணமா சொன்னது எவ்வளவு பயங்கரமான விஷயம் தெரியுமா? சொல்லப் போனா, நபி அருமையான ஒரு உதாரண புருஷனா வாழ்ந்து காட்டினாரு. உண்மையிலேயே பார்க்கப் போனா, நபி அனாதைகளுக்கு அபயம் தந்தாரு. உம்மா... உங்களுக்குத் தெரியாதா? வாப்பா நபிகளோட வரலாற்றை நமக்கு எத்தனை தடவை படிச்சிக் காட்டியிருக்காரு? அதோட விடாம... அதை விளக்கி நமக்கு அவர் சொல்லவும் செய்திருக்காரு..."
"மகளே, அதையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்?"
"அதையெல்லாம் நாம கட்டாயம் நினைச்சுப் பார்க்கணும். முஸ்லீம் சமுதாயம் எல்லாத்தையும் நினைக்கணும்.