டைகர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6942
டைகர் என்ற நாயை ஒரு பாக்யவான் என்று சொல்லலாம். நாடே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தாலும், டைகருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அவன் எப்போது பார்த்தாலும் சதைப் பிடிப்புடன் கம்பீரமாக இருப்பான். கால்கள் நான்கும் வாலும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்கள் சிவப்பு கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும். போலீஸ்காரனின் கண்களைப்போலவே, டைகரின் கண்களிலும் ஒரு குரூரத்தனம் தெரியும்.
டைகர், தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சொறி நாயின் மகன்தான். நகரத்தில் சாக்கடையில் பிறந்து கிடந்தவன்தான் அவன். ஆனால், அவனுக்கே இந்த விஷயமெல்லாம் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் இருப்பது போலீஸ் ஸ்டேஷனில்தான். வானம் தெரிகிற மாதிரி சதுரமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மையப்பகுதிதான் அவனது இடம். கைதிகளும் போலீஸ் காரர்களும்தான் அவனது நண்பர்கள். ஒவ்வொருத்தரையும் அவனால் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியும். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவனுக்கு ஒட்டுதல் அதிகம். இன்ஸ்பெக்டரின் கண்களும் டைகரின் கண்களும் ஒரே மாதிரி இருக்கின்றன என்று பொதுவாக அங்கிருக்கும் கைதிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.
டைகரைப் பொறுத்தவரை கைதிகளில் வேறுபாடு பார்ப்பதில்லை. கொலைகாரனும், திருடனும், அரசியல் கைதியும் அவனுக்கு ஒன்றுதான். டைகரின் கணக்கில் மனித இனம் என்றால் இரண்டே இரண்டு பிரிவுகள்தாம். ஒன்று- போலீஸ்காரர்கள். இன்னொன்று- குற்றவாளிகள். லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருக்கும் நாற்பத்தைந்து கைதிகளையும் டைகர் ஒரே மாதிரிதான் பார்ப்பான். நான்கு பேர் தனியாக அரசியல் கைதிகள் என்ற பெயருடன் அடைக்கப்பட்டிருப் பதை எல்லாம் அவன் பொருட்படுத்துவதே இல்லை. அவன் அப்படி ஒரே மாதிரி நினைப்பதற்கு இன்னொரு காரணம்- அங்கிருக்கும் எல்லா லாக்-அப்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். வெளிச்சமோ காற்றோ எதிலும் இல்லை. மலம், மூத்திரம் ஆகியவற்றின் துர்நாற்றத்திற்கு மத்தியில், மூட்டைப்பூச்சிகளின் கடியைத் தாங்கி, பழைய- கிழிந்துபோன ஆடைகளை அணிந்து, தாடி, மீசை வளர்த்துக் கொண்டு, கஷ்டங்கள் பலவற்றையும் சகித்துக் கொண்டு அங்கு தங்களின் வாழ்க் கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள். அவர்களுக்கு- சொல்லப்போனால் இருட்டுக்கும் பகலுக்கும்கூட வேறுபாடு தெரியாது. இந்த நிலையில் இருக்கும் போலீஸ் லாக்-அப்கள் நாடு முழுக்க பல இடங்களிலும் இருக்கவே செய்கின்றன. இந்த லாக்-அப்களில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றம் மனித இதயங்களை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடும். இருந்தாலும், அங்குள்ள கைதிகளின் சிந்தனை இது பற்றி எல்லாம் இருக்காது. உணவைப் பற்றிய ஒரே சிந்தனைதான் அவர்களுக்கு எப்போதும். இரவில் அவர்கள் தூங்குவது காலையில் எழுந்ததும் கஞ்சி குடிக்கத்தான். கஞ்சி குடித்து முடித்தால், அவர்களின் மனம் மதியச் சாப்பாட்டைப் பற்றி எண்ண ஆரம்பிக்கும். அது முடிந்தால், இரவு உணவைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பார்கள். மொத்தத்தில் அங்குள்ள எல்லாக் கைதிகளின் மனமும் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பது உணவைப் பற்றித்தான். அவர்களின் பசி ஒருபோதும் அடங்குவதில்லை. எல்லாரின் விருப்பமும் என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டு எவ்வளவு சீக்கிரம் சிறைக்குள் செல்வது என்பதுதான். போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் இருந்து தப்புவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால், அடுத்த நிமிடமே தாமதம் செய்யாமல் அவர்கள் கைதிகளைச் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். கைதிகளின் சொர்க்கம் சிறை என்றுகூடச் சொல்லலாம். அவர்களுக்கு நரகம் எது என்றால் போலீஸ் லாக்-அப்தான். ஒவ்வொரு கைதியின் இதயத்திலும் கடுமையான வெறுப்பும் கோபமும் இருக்கும். தங்களின் கண்கள் வழியாக அதை அவர்கள் டைகர்மேல் பாய்ச்சுவார்கள். அதற்காக டைகர் கவலைப்படுவதே இல்லை. கம்பீரமாக லாக்-அப்புக்கு முன்னால் இங்குமங்குமாய் அவன் நடப்பான். இல்லாவிட்டால் ஏதாவதொரு லாக்-அப் வாசலில் போய் படுத்துக் கொள்வான். உணவு நேரத்தில் இன்ஸ்பெக்டரின் அறை வாசலில் அவன் காவல் காப்பான். இன்ஸ்பெக்டர் சாப்பிட்டு முடித்து, ஏப்பம் விட்டவாறு எச்சில் இலையை எடுத்து நாய்க்கு முன்னால் வைப்பார். ஒரு ஆள் சாப்பிடக் கூடிய உணவை அவன் சுவைத்துச் சுவைத்து சாப்பிடுவான். டைகர் சாப்பிடுவதைப் பார்க்கும் கைதிகளின் வாயில் எச்சில் ஊறும்.
டைகர் சாப்பிட்டு முடித்து தோட்டத்திற்குள் நுழைந்து செடிகளின் நிழலில் போய் படுப்பான். ஒரு சிறிய தூக்கம் போட்டுவிட்டு, அவன் மீண்டும் லாக்-அப் வாசலுக்கு வருவான். அவன் கண்களில் அப்போது தெரியும் பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே! எல்லா விஷயங்களும் தனக்குத் தெரியும் என்பது மாதிரி அவன் காட்டிக் கொள்வான். அங்குள்ளவர்களின் பெரும் பாலான வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவையே! போலீஸ் காரரும் இன்ஸ்பெக்டரும் கைக்கூலி வாங்கிக் கொண்டு பதிவு செய்த வழக்குகள் அவை. சிலர் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை திருடியிருப்பார்கள். அதற்குப் பிறகு நாட்டில் நடக்கும் எல்லா திருட்டையும் அவர்கள் மேல்தான் சுமத்துவார்கள். தாங்கள் செய்யாத குற்றங்களைக்கூட லாக்-அப்பில் உள்ளவர்கள் செய்ததாக ஒப்புக் கொள்வார்கள். நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் நிற்கும்போதுகூட தாங்கள்தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர்கள் கூறுவார்கள். காரணம்- எப்போதும் போலீஸ்காரர்கள் உடன் இருப்பதே. அரசாங்கம் நாளொன்றுக்கு ஒரு கைதிக்கு உணவுக்கென்று இவ்வளவு செலவிடப்பட வேண்டும் என்று ஒரு தொகையை நிர்ணயித்திருக்கிறது. ஒரு போலீஸ்காரனின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இந்தத் தொகை அதிகமாக இருக்கும். போலீஸ் காரன் சாப்பிட வேண்டும். ஆடைகள் அணிய வேண்டும். மனைவி யையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். வேறு எந்த வழியில் அவன் பணம் பண்ண முடியும்? சாதாரண ஒரு சம்பளத்தை வைத்து போலீஸ்காரர்கள் தங்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? கைதிகள் கம்பி வழியே கையை நீட்டி பயங்கரமான கோபத்துடன் டைகரைத் தடவுவார்கள்.
“எங்களோட சோறு இது...'' அவர்கள் கூறுவார்கள்.
டைகர் வாலை ஆட்டுவான்.
"ஆமா.. இதுதான் வாழ்க்கை. இதை மாற்ற யாராலயும் முடியாது...' என்று கூறுவது மாதிரி டைகர் அவர்களைப் பார்ப்பான். மாற்ற முடியுமா? முன்பு சிலர் சொல்வார்கள்.
“எங்களுக்குப் பசி அடங்கல. அரசாங்கம் நிச்சயிச்ச தொகைக்கு உள்ள சாப்பாடு எங்களுக்குக் கிடைச்சாகணும்.''
ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா? போலீஸ்காரர்களின் அடியும் இன்ஸ்பெக்டரின் பூட்ஸ் மிதியும்தான். அதோடு நிற்காமல் இன்ஸ்பெக்டர் பயங்கரமான கோபத்துடன் கர்ஜனை செய்தார்.
“அரசாங்கம் நிச்சயிச்சதை உனக்குத் தரணுமா? உன்னோட அப்பன் பாரு அரசாங்கம்...''