
ஒருவன் கம்பி வழியே இலையையும் சாதத்தையும் உள்ளே எடுத்தபோது, சோறு முழுவதும் தரையில் சிதறியது. அதை நக்கித் தின்பதற்காக பக்கத்திலேயே டைகர் தயாராக நின்றிருந்தான். லாக்-அப்பில் இருபத்தியொரு கைதிகள் இருக்க, ஒருவன் சாதத்தை அவர்களுக்குப் பரிமாறினான். இருபத்தியிரண்டு பிடி சோறு நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவர்கள் அதைச் சாப்பிடத் தீர்மானித்தார்கள். சாதத்தைப் பரிமாறிய ஆள் ஐந்து பேரின் கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைப் போட்டான். டைகர் முன்னால் சென்று, நிலத்தில் விழுந்த சோறையும் குழம்பையும் நக்கித் தின்னத் தொடங்கினான். அதைப் பார்த்த ஒரு கைதி அவனை எட்டி உதைத்தான். உதை விழுந்ததும், உயிருக்கு பயந்துபோன டைகர் "ஓ”வென கூக்குரலிட்டான். அவ்வளவுதான்- பாராக்காரன் ஓடி வந்தான். சில போலீஸ் காரர்கள் ஓடி வந்தார்கள். இன்ஸ்பெக்டரும் வந்தார். அந்த இருபத்தியிரண்டு பேரின் இதயங்களையும் ஒரே நேரத்தில் பிடுங்கி ஏறிவது மாதிரி அந்த இன்ஸ்பெக்டர் இலையுடன் இருந்த சாதத்தைப் பறித்து டைகருக்குக் கொடுத்தார். அதோடு நிற்காமல் லாக்-அப்புக்குள் நுழைந்து ஒவ்வொருவரையும் இஷ்டம்போல அடித்து மிதித்து ஆசை தீர்ந்தவுடன் வெளியே வந்தார்.
அந்தச் சம்பவம் நடந்து முடிந்தது. அன்று இரவு பத்து மணி இருக்கும். டைகர் பயங்கரமாக- இடைவிடாது ஓலமிட்டான். போலீஸ் ஸ்டேஷனே அந்த ஓலம் கேட்டு விறைத்துப் போனது. பாராக்காரன் என்னவென்று ஓடிச் சென்று பார்த்தபோது, இரண்டு பேர் நாயைப் பிடித்துக் கொண்டு அதன் முகத்தைப் கம்பி வழியே உள்ளே இழுத்துக் கொண்டிருந்தார்கள்: இரண்டு பேரில் ஒரு ஆளை மட்டுமே பாராக்காரனுக்குத் தெரியும்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனை வெளியே வரவைத்தார். ஒரு திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே வந்தவன் அவன். இன்ஸ்பெக்டர் அவனின் முகத்தில் ஒரு அடி கொடுத்தார். தொடர்ந்து பல அடிகள்- மிதிகள். அவ்வளவுதான்- அவன் தரையில் ஒரு மூலையில் போய் மல்லாந்து விழுந்தான். அதற்குப் பிறகும் அவனை இன்ஸ்பெக்டர் விடவில்லை. "நச் நச்” என்று மிதித்தார். மீண்டும் முகத்தில் பல அடிகள். அவன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. தரையில் ஒரு பல் வந்து விழுந்தது. ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை.
அந்தக் காட்சியை நாற்பத்தைந்து கைதிகளும் ஒன்பது போலீஸ்காரர்களும் டைகரும் பார்த்தார்கள். நிலத்தில் கிடந்த ரத்தத்தை டைகர் நக்கினான்.
இன்ஸ்பெக்டர் கேட்டார்:
“இன்னொருத்தன் எங்கடா...''
ஆனால், அவன் சொல்லவில்லை. சொல்வானா? அவனின் கால்கள் இரண்டையும் கம்பிகளுக்கு இடையே வெளியே கொண்டு வந்து கட்டி, கால் பாதத்தில் பிரம்பால் பல அடிகள் கொடுத்தும் அவன் சொல்லவேயில்லை. பாதங்கள் அடிபட்டுச் சிவந்தன. வீங்கிப்போயிருந்தன. ரத்தம் கொட்டியது. அப்போதும் அவன் யார் என்று சொல்லவில்லை. அவனுக்கு மயக்கம் வந்தது. அதனால் தானோ என்னவோ, பாதத்தின் காயங்களைத் தன்னுடைய நாக்கால் டைகர் நக்கியபோதும், அவன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தான்.
டைகர் உண்மையிலேயே பாக்யசாலியான ஒரு நாய்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook