டைகர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6943
“அரசாங்கம் யாருக்குத் தந்தை?'' அவர்கள் ஒருமித்த குரலில் கத்தினார்கள்.
“அரசாங்கம் டைகராக்கும்...''
அவர்கள் சொல்வது சரிதானா? ஒவ்வொரு கைதிக்கும் அரசாங்கம் நிர்ணயம் செய்திருக்கிற தொகைக்கு உணவு வழங்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு ஹோட்டல் காரன். அவன் ஹோட்டலை ஆரம்பிக்கும்போது மிகமிகச் சாதாரண நிலையில் இருந்தவன். கைதிகளுக்கு உணவு தயாரித்துத் தர ஆரம்பித்தான். அதிர்ஷ்டம்! "கிடுகிடு” என அவன் வாழ்க்கையில் உயர ஆரம்பித்துவிட்டான். பெரிய அரிவாள் மீசையும் தொந்தியும் வைத்திருப்பவன்தான் அந்த ஹோட்டல்காரன். அவனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அந்த ஹோட்டல் உணவைத்தான் தினமும் இன்ஸ்பெக்டரும் ஸ்டேஷன் ரைட்டரும் சாப்பிடுகிறார்கள். உணவுக்கும், காப்பிக்கும் அவர்கள் காசு தரவேண்டிய அவசியம் இல்லை. அதோடு விஷயம் நிற்கவில்லை. ஒவ்வொரு மாதமும் இன்ஸ்பெக்டருக்கும் ரைட்டருக்கும் ஹோட்டல்காரன் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தவறாமல் தரவும் செய்கிறான். அந்த நஷ்டத்தை கைதிகளுக்குத் தரும் உணவில் எப்படிச் சரி பண்ணுவது என்பது ஹோட்டல்காரனுக்குத் தெரியாதா என்ன? ஒவ்வொரு நாளும் ஐம்பதோ அறுபதோ கைதிகள் போலீஸ் லாக்-அப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பாடே கொடுக்கவில்லை என்றால்கூட இங்கு கேட்க யார் இருக்கிறார்கள்? வழக்குக்காக நீதிமன்றத்துக்கு அவர்களைக் கொண்டு செல்லும்போது, நீதிபதியிடம் எங்கே இதை எல்லாம் இவர்கள் சொல்லி விடுவார்களோ என்று நினைத்தால், திரும்பவும் அவர்கள் இங்குதானே கொண்டு வரப்பட வேண்டும்? இன்ஸ்பெக்டர் கேட்பார்- சிரித்துக் கொண்டே. ஆனால் அந்த சிரிப்பு இருக்கிறதே... அப்பப்பா...
“நீ சொல்லிட்டே, இல்லையாடா?''
அவ்வளவுதான்- அவன் மயக்கமடைகிற வரை அவனை அடிப்பார்கள். அதற்குப் பிறகு அவன் என்ன சொல்லப் போகிறான்? இங்குள்ள எல்லாக் கைதிகளின் நிலைமையும் இதுதான். அவர்கள் இந்தக் கோபத்தை டைகரின் மேல் காட்டுவார்கள். கைதிகள் யாருக்கும் டைகரைப் பிடிக்காது என்பது எல்லாருமே நன்கு அறிந்த விஷயம். இன்ஸ்பெக்டரே இந்த விஷயத்திற்காக மிகவும் ஆச்சரியப்படுவார். ஒன்றுமே தெரியாத இந்த அப்பாவி நாயை இவர்கள் ஏன் வெறுக்க வேண்டும்?
ஆனால், கைதிகள் டைகரின் மேல் அன்பு காட்டுவதே இல்லை. வாய்ப்பு கிடைக்கிறபோது அவர்கள்- சொல்லப்போனால் அதற்குத் தொந்தரவு கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தன்னைத் தொல்லைக்குள்ளாக்கப் போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டால், டைகர் "உர்...உர்...' என்று தன் கொந்தளிப்பைக் குரல் மூலம் வெளிப்படுத்துவான்.
“யார்டா நாய்க்குத் தொந்தரவு தர்றது?'' இன்ஸ்பெக்டர் லத்தியுடன் வெளியே வருவார்.
“நாய்களே... டைகரை ஒரு பயலும் தொடக்கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். தொட்ட வன் ஒழுங்கா கையை நீட்டு...''
கம்பி வழியே ஒரு கை வெளியே நீளும். அந்த விரலை இறுகப் பிடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் வெறித்தனமாக அவனை அடிப்பார். அந்தக் கைதி வலியால் அழும் சத்தம் அந்தப் பகுதி முழுக்க கேட்கும். கை, இன்ஸ்பெக்டர் கொடுத்த அடியால் வலிக்கும். ரத்தம் "சொட்... சொட்...” என்று கீழே விழும். டைகர் அதை நக்கித் துடைப்பான்.
கைதிகள் ஏற்கெனவே செய்த குற்றத்தை மீண்டும் செய்வார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் தண்டனை அனுபவிக்கிறபோதும், அவர்கள் மேலும் பலசாலிகளாக ஆகின்றனர் என்பதே உண்மை. நாயைத் தொட்ட குற்றத்திற் காக அங்குள்ள பலரும் பல முறை தண்டனை பெற்றிருக்கின்றனர். நாயைப் பொறுத்தவரை, அவர்களைக் குற்றவாளியாக்க எப்போதும் அது தயாராகவே இருக்கிறது.
டைகர் வெளியே எங்கும் செல்வதில்லை. அவன் பயங்கர கோழை. வேறு நாய் ஏதாவது அங்கு வந்தால், அவன் குரைத்து அதை விரட்ட முயற்சிப்பான். ஒரு புலிபோல் இருப்பான் டைகர் அந்த நேரத்தில். ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே எப்போதாவது போக நேர்ந்தால், ஏதாவது ஒரு சொறி நாயைத் தெருவில் பார்த்தால், டைகர் தன் வாலைச் சுருக்கிக் கொண்டு, அதைப் பின் கால்களுக்கு நடுவே உள்ளே விட்டு பயந்துபோய் உள்ளே ஓடி வந்துவிடுவான். டைகரின் இந்தச் செயலைப் பார்த்த ஒரு அரசியல் கைதி ஒருநாள் சிரித்தவாறு சொன்னான்:
“பார்த்தீங்களா, நம்ம இன்ஸ்பெக்டர் எப்படி பயந்துபோய் ஓடி வர்றார்னு...''
அப்போது தத்துவம் பேசும் இன்னொரு கைதி சொன்னான்:
“ஒரு வகையில் பார்த்தால் ஒவ்வொருவருமே ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்கள்தாம்.''
அவன் அப்படிச் சொன்னது, அங்கு ஒரு விவாத விஷயமாகி விட்டது. மூன்று கைதிகள் ஒரு பக்கமும், ஒரே ஒரு கைதி மட்டும் தனிக் கட்சியாகவும் ஆனார்கள். அவர்கள் இந்த விஷயத்தை அலசி சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு சந்தோஷச் செய்தியுடன் அங்கு வந்தார் இன்ஸ்பெக்டர்.
“என்ன இங்கே சண்டை?''
யாரும் ஒன்றுமே பேசவில்லை.
“கதவைத் திற.'' பாராக்காரனைப் பார்த்து இன்ஸ்பெக்டர் கட்டளையிட்டார். பாராக்காரன் லாக்-அப் கதவைத் திறந்தான். அவர்கள் வெளியே வந்தார்கள். இன்ஸ்பெக்டர் சொன்னார்:
“உங்களைப் பார்க்க சில ஆளுங்க வந்திருக்காங்க.''
அவர்கள் அங்கு சென்றபோது, சண்டைக்குக் காரணமான இளைஞனின் நண்பர்கள் சிலர் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் கையில் பலகாரங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இருந்தன. ஆரஞ்சுப் பழங்களில் இரண்டை இன்ஸ்பெக்டர் சாப்பிட்டார். மீதி இருந்த பலகாரங்களை அவர்கள் தின்றார்கள். நாட்டில் அப்படியொன்றும் சிறப்பாக நடப்பது மாதிரி தெரியவில்லை. நாட்டில் வறுமை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சாப்பாடு இல்லாமல் மனிதர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து போரைப் பற்றிய செய்தி, பொருட்களின் விலை உயர்வு, தாங்க முடியாத அளவிற்குப் பஞ்சம்...
“நாங்களும் அதை அனுபவிக்கிறோம்.''
வந்திருந்த ஆள் சொன்னான்:
“உங்களுக்கு என்ன? வேளா வேலைக்குச் சாப்பாடு. எதைப் பற்றியும் கவலைப்படணும்னு அவசியமே இல்ல. கொடுத்து வச்ச மனிதர்கள்...''
அப்போது வாசலில் வந்து நின்ற டைகரைச் சுட்டிக் காட்டிய வாறு அந்த இளைஞன் சொன்னான்:
“இந்த நாய்க்கு கிடைச்சிருக்கிற அதிர்ஷ்டம் மட்டும் இங்கே உள்ள கைதிகளுக்குக் கிடைச்சிருந்தா...''
இன்ஸ்பெக்டர் வாய்விட்டுச் சிரித்தார். மற்ற கைதிகளும் சிரித்தார்கள். அவர்கள் மீண்டும் லாக்-அப்பில் அடைக்கப்பட்டார்கள். நான்கு பேருக்கும் ஒரு வகையில் திருப்தியே. பலகாரம் சாப்பிட்டதால் அவர்கள் வயிறு நிறைந்த மாதிரி இருந்தது. அன்று இரவு அவர்கள் சாப்பிட்டார்கள். கொஞ்சம் சோறு மீதம் வந்தது. அதை அவர்கள் தங்களுக்கு முன்பே லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளின் அறை வாசலில் வைத்தார்கள். அங்கிருந்த இருபத் தியிரண்டு பேரும் ஆர்வத்துடன் வாசல் பக்கம் வந்து நின்றனர்.