தங்கம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7024
அன்புள்ள இளைஞர்களே,
ஒரு கதை கூறுகிறேன். கேட்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கவிஞர்கள் எல்லோரும் சுற்றிலும் நின்றுகொண்டு ஏக்கத்துடன் வாழ்த்தும் அளவிற்கு நல்ல உணவை உண்டு சதைப்பிடிப்பான உடலும் பேரழகும் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு கூட்டு தான் என்னுடைய தங்கம் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது ஒரு மிகப்பெரிய தவறு. அழகை வழிபடும் நம்முடைய கவிஞர்கள் யாரும் அவளைப் பார்த்ததில்லை.
என்னுடைய தங்கத்தின் நிறம் தனிக் கறுப்பு. நீரில் மூழ்க வைத்து எடுத்த ஒரு நெருப்புக் கொள்ளி. கறுப்பு நிறம் இல்லாத பகுதி என்றால் அது கண்ணின் வெள்ளை மட்டுமே. பற்களும் நகங்ளும்கூட கறுப்பு நிறம்தான்.
தங்கம் சிரிக்கும்போது அவளுடைய முகத்தைச் சுற்றிலும் ஒரு பிரகாசம் பரவும். ஆனால் அந்தப் பிரகாசம் இருட்டின் போர்வை போர்த்தியது. கறுத்த விளக்கிலிருந்து பரவும் வெளிச்சத்தின் ஒரு கீற்று.
கொஞ்சிக் குழைந்தவாறு எப்போதும் என்னுடன் காதல் மொழிகள் பேசும் தங்கத்தின் அந்தக் குரல்! அது வசந்தகால இரவில் அமர்ந்து பாடும் கருங்குயிலின் குளிர்ந்த நாதமல்ல. உண்மையாக சொல்லப்போனால் என்னுடைய தங்கத்தின் குரல் இனிமையானது என்று கூறுவதற்கில்லை. இருட்டின் தனிமையில் நிலவறைக்குள் இருந்துகொண்டு, காய்ந்த முரட்டுத்தனமான காய்களை முறுமுறுப்புடன் கடித்துத் தூளாக்கிக் கொண்டிருக்கும் கறுப்புநிற பெருச்சாளிகளின் ‘கறுமுற’ சத்தத்தைப்போல இருக்கும் என்னுடைய தங்கத்தின் குரலின் இனிமை!
தங்கத்திற்கு வயது பதினெட்டு தான். உடலுறுப்புகளெல்லாம் நன்கு வளர்ந்து இளமையின் மலர்ச்சியில் அப்படியே ஜொலித்துக் கொண்டிருப்பாள் என்னுடைய தங்கம்.
தங்கம் என்னுடைய உயிர்க் காதலி. வெறும் உயிருக்கு மட்டுமல்ல. என்னுடைய எல்லாவற்றுக்கும் அவள்தான் நாயகி. தங்கத்தின் காதல் கொடி படர்ந்து வளரும் அந்தத் தனிமையான மாமரம்தான் நான்.
புனிதமான தங்கத்தின் காதலுக்குப் பாத்திரமான என்னிடம் சிறிது பொறாமையும் மிகப்பெரிய மதிப்பும் உங்களுக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
நான் நல்ல குணங்களைக் கொண்டவனும், மிகப்பெரிய தியாகியுமான ஒரு இளம் வீரன். என்னுடைய ஒரே பார்வையில் எப்படிப்பட்ட அழகிய ராணியும் எனக்கு அடிபணிந்து விடுவாள். காதலுக்காக என்னுடைய கால்களில் விழுந்து கண்ணீர் சிந்துவாள். மாலை நேரத்தில், தெருக்கள் வழியாக அமைதியான கம்பீரத்துடன் நான் நடந்து செல்லும் அந்த அபூர்வமான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து இந்த நகரத்தின் கண்மணிகளான பெண்மணிகள் எல்லோரும் என்னை ஒரே ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக ஏக்கத்துடன் மணி மாளிகைகளின் சாளரங்களின் வழியாகப் பார்த்துப் பார்த்து நிற்பதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் எல்லா வற்றையும் துறந்துவிட்ட ஒரு முனிவரைப்போல பாதி கண்களை மூடிக்கொண்டு, மார்பை நிமிர்த்திக் கொண்டு நடந்தவாறு நான் அங்கிருந்து நகர்ந்து விடுவேன்... என்றெல்லாம் மதிப்புடன் உங்களிடம் கூற வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆவல் உண்டு. ஆனால், என்ன செய்வது? பொய் சொல்லக் கூடாது என்பது கடவுளின் சட்டம் ஆயிற்றே!
உண்மையை உண்மையாகவே கூறுவதென்றால் எனக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஆனால், ஒரு காலுக்கு சற்று நீளம் அதிகம். காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் வேலிக்காயைப் போல அது இருக்கும். ஊன்றுகோல் ஒன்றின் உதவியுடன் சாலையில் சிரமப்பட்டு முன்னோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கும் நான் இந்தக் காலைத் தரையில் இழுத்துக் கொண்டே செல்வேன். கயிறு கொண்டு இழுத்ததைப் போன்ற ஒரு அடையாளம் தூசு நிறைந்த தரையில் இருப்பதைப் பார்த்தால், அதன் முடிவில் என்னைப் பார்க்கலாம். கோணியில் கட்டி வெளியே தொங்கவிடப்பட்டிருக்கும் பலாவைப்போல எனக்கு கூனும் இருக்கும். என் தலையைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அது பூசனிக் காயைப்போல இருக்கும். மோட்டார் டயர் துண்டைப்போல இரண்டு உதடுகளும் எனக்கு இருந்தன. அவற்றுக்கு அலங்காரமாக இருப்பதைப்போல உதடுகளின் ஒரு ஓரத்தில் எப்போதும் ஒரு பீடித்துண்டு புகைந்து கொண்டே இருக்கும்.
இரண்டு கண்கள் இருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவை. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் அவர்களுக்கிடையே சிறிதுகூட நட்புணர்வு இல்லை. ஒரு கண்ணின் பார்வை கிழக்கு பக்கம் இருக்கும் கம்பிக் காலை நோக்கி இருக்கிறது என்றால், இன்னொரு கண்ணின் பார்வை நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு வாலைச் சுருட்டியவாறு வடக்கு திசையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் தெருநாய் மீது இருக்கும்.
தங்கம் சில நேரங்களில் கூறுவதுண்டு - ஒரு கண்ணால் தங்கத்தைப் பார்க்கும்போது இன்னொரு கண்ணால் சமையலறைக்குள் இருக்கும் சட்டிக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருக்கும் திருட்டுப் பூனையைப் பார்க்க முடியும் என்று.
என் குரலைப் பொறுத்தவரையில் அதற்குப் பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. வழியில் ஏதாவது கழுதை கத்தினால் தங்கம் ஓலையாலான கதவை நீக்கி ஆர்வத்துடன் வெளியே பார்ப்பாள். ஒருநாள் நான் கேட்டேன். அதற்குத் தங்கம் சொன்னாள்: “நீங்கதான்னு நினைச்சேன்!”
சரி... இப்போது என்னைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த வரை படம் உங்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். இனிமேல் வழியில் எங்காவது என்னைப் பார்க்க நேர்ந்தால், என்னைப் பார்க்காதது மாதிரி காட்டிக்கொண்டு நீங்கள் என்னைக் கடந்து செல்ல மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுக் கூறும் வண்ணம் வேலை எதுவும் இல்லை. கொஞ்சம் கைநீட்டி யாசிக்கும் பழக்கம் இருக்கிறது. அவ்வளவுதான்.
தங்கத்திற்கு பக்கத்து வீட்டு முற்றத்தைப் பெருக்கி சுத்தம் செய்வதுதான் வேலை. ஒருநாள் அதிகாலை வேளையில் படுக்கையிலிருந்து எழுந்த முதலாளியின் மகன் தங்கத்தைப் பார்த்து பயந்து விட்டான். அந்தக் காரணத்தால் வேலையிலிருந்து அவளைப் போகச் சொல்லிவிட்டார்கள். இப்போது ஒரு வாழைத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்வதுதான் வேலை. பசுக்களோ வேறு மிருகங்களோ உள்ளே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் தங்கம் இலைகளையும் கொடிகளையும் பறித்து கட்டாகக் கட்டி கடைகளுக்கு எடுத்துச் செல்வாள்.
தங்கமும் நானும் முதல் தடவையாக சந்தித்தது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த கர்க்கடக மாதத்தின் அமாவாசை இரவன்று தான். வழக்கம்போல அன்றும் நான் வேலைக்குச் சென்றேன். கிடைத்த ஒன்றிரண்டு செப்புக் காசுகளைத் துணி முனையில் கட்டினேன். நேரம் இருட்டிவிட்டிருந்தது. ஒரு ஹோட்டலிலிருந்து கிடைத்த கொஞ்சம் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு, ஒரு பெரிய வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தேன். நல்ல மழை. சிறிது காற்றும் அடித்தது. இடையில் அவ்வப்போது அந்த மாளிகையில் இருந்து இசை கேட்டுக்கொண்டிருந்தது.