பாரம்பரியம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5294
பாரம்பரியம்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் : சுரா
ஒ
ரு நாள் காலையில் அந்த பிச்சைக்காரன் சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்த நிலையில் இறந்து கிடந்தான். சுமை தாங்கிக் கல்லின் மீது ஒரு சிறிய மூட்டையும், அதற்கு மேலே அந்த வாளும் வைக்கப்பட்டிருந்தன. சந்திப்பிலிருந்த வியாபாரம் செய்பவர்களும் மற்றவர்களும் சுற்றிலும் கூடினார்கள். எல்லோரும் இரக்கத்துடன் நான்கு வார்த்தைகளைக் கூறினார்கள்,
பாவம்.... யாருக்கும் தொல்லை கொடுக்காதவனாக இருந்தான். எந்த திசையைச் சேர்ந்தவனோ? சந்திப்பிற்கு வந்து சேர்ந்து இரண்டு வருட காலம் ஆகியிருக்கும். அவன் யாருடனும் பேசி பார்த்ததில்லை. நாயர்களிடம் தவிர வேறு யாரிடமிருந்தும் அவன் நீர் பருக மாட்டான். சுமை தாங்கிக் கல்லில் பதிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை வாசிப்பதற்கு அவன் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தான். இரவில் தூங்குவது விளையாட்டு நடக்கும் இடத்தில்தான். துணியால் மூடப்பட்டிருந்த அந்த வாளை ஒரு போர் வீரனைப் போல பிடித்தவாறு நடந்து செல்வதை நீக்கி விட்டுப் பார்த்தால், அவனிடம் பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு அடையாளமும் இல்லை.
காவல் துறையினர் வந்து பிணச் சோதனையை ஆரம்பித்தார்கள்.
அது ஒரு பழைய வாள். மூட்டையில் ஒரு செம்பு தகடும், ஒரு கடிதமும் இருந்தன. செம்பு தகட்டில் என்னவோ எழுதப்பட்டிருந்தது. யாராலும் வாசிக்க முடியாத ஏதோ பழைய எழுத்து.. கடிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது:
'பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் பிணம், பயணிப்பவர்களுக்கு ஒரு தொல்லையான விஷயம். அவன் அந்த வகையில் உடலை நீட்டிக் கொண்டோ சுருண்ட நிலையிலோ பாதி மூடப்பட்ட கண்களுடனோ திறக்கப்பட்ட வாயுடனோ கிடப்பதைப் பார்த்து பாதையில் நடந்து செல்வோரின் முகம் சற்று கோணும். அந்த பிச்சைக்காரன் ஏராளமான பதில்களை வைத்துக் கொண்டு மரணத்தைத் தழுவும் ஒரு பெரிய கேள்வியின் சின்னம்.
பாதையின் ஓரத்தில் கிடந்து இறக்கும் பிச்சைக்காரனின் வாழ்க்கை வரலாறு அந்த வகையில் யாருக்குமே தெரியாமல் போய் விடக் கூடாது. அந்த ஒவ்வொரு ஆதரவற்ற பிணத்திற்கும் ஒவ்வொரு செய்தி கூற வேண்டிய நிலை இருக்கும். இறுதி தாகத்தின் போது திறக்கப்பட்ட வாய், ஒரு துளி நீர் விழுந்து மூடாமல் இருந்தது, கண்களைக் காகம் கொத்தி எடுத்தது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால், உலகத்திற்கு அருமையான பாடங்கள் கிடைக்கும். பாதையின் ஓரத்தில் அந்த வகையில் இருக்கக் கூடிய சாட்சிகள் குறையும்.
என்னுடைய மரணத்தின் மூலம் நானும் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன். நான் பிறந்தது, வளர்ந்தது, மரணமடைந்ததால் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் அது மட்டுமே. என்னுடைய செய்தி யுகங்களைக் கடந்து எல்லையற்ற பரம்பரைகளின் செவிகளுக்குள் போய்ச் சேர வேண்டும்.
நான் பிறந்தது ஒரு எட்டு அறைகளைக் கொண்ட பெரிய மாளிகையில்.... காசு மாலையும், தங்கத்தால் ஆன அரை ஞாணத்தையும் அணிவித்து, இலட்சக்கணக்கான பேர்களுக்கு நெல்லையும் பணத்தையும் கையாளக் கூடிய ஒரு மனிதர்தான் எனக்கு சோறு அளித்தார். எங்களுடைய பெரிய மாமா! ஊரிலேயே பெரிய மனிதர்!
எங்களுடைய குடும்பத்தின் பெருமை வரலாற்றையும் தாண்டியது. எங்களுடைய அறையில் மாணிக்கத்திற்கு நிகரான நெல்லும், பொன் நிறத்தில் வாழைக் குலையும் இருந்தன. நான் சிறு குழந்தையாக இருந்தபோது, பாட்டி என்னை மடியில் உட்கார வைத்து கதைகள் கூறுவாள். குடும்பத்தின் பழைய மாமாமார்களைப் பற்றிய கதைகள்.....
மந்திரவாதி மாமா அமாவாசையன்று நிலவை உதிக்கச் செய்த மனிதர். அவருக்காகத்தான் தெற்கு பகுதியில் களரிப் பயிற்சிக்கு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சேரமான் பெருமாளுடன் போர் புரிவதற்குச் சென்ற மாமாவின் வாள்தான் இன்று களரியில் இருக்கிறது. மாணிக்கத்தையும் பத்து எடை பொன்னையும் அவர் கொண்டு வந்தார். இந்த அளவிற்கு நிலங்கள் கைவசம் வந்து சேர்வதற்குக் காரணம் -செண்பகசேரி தம்புரானின் போர் வீரனாக ஒரு மாமா இருந்ததுதான். தாசில்தார் மாமாவை பாட்டி பார்த்திருக்கிறாள்.
நான் அந்த மாமா மார்களின் மருமகன்! யார் என்னைப் பார்த்தாலும், அந்த உண்மை அவர்களுடைய நினைவில் வரும் என்று எனக்கு தோன்றியது. எல்லோரும் என்னை 'குழந்தை' என்று அழைப்பது வெறுமனே அல்ல.
அந்த வகையில் என்னுடைய இளமைக் காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் என்னுடைய வீட்டில் என்னவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருந்தன. என்ன என்று எனக்கு தெரியவில்லை. சில சம்பவங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன. என் தாய்க்கும் சித்திகளுக்குமிடையே சண்டை நடந்தது. அன்று சோறு சமைக்கவில்லை. பின்பு ஒருமுறை பெரிய மாமா சிறிய மாமாவை அடிப்பதற்காகச் சென்றார். சிறிய மாமா எதிர்த்தார். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு வருடம் முடியும்போதும், மே மாதத்தில் வரக் கூடிய நெல் குறைந்து கொண்டிருந்தது. சில பணியாட்கள் போய் விட்டார்கள். சிறிய மாமா விவசாயம் செய்ய போகவில்லை. படகையும் சக்கரத்தையும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) யாரெல்லாமோ கொண்டு போனார்கள்.
பாம்புப் புற்றின் அருகிலிருந்த கோவிலில் விக்கிரகங்கள் சாய்ந்து விழுந்தன. கந்தர்வனின் மடம் இடிந்து விழுந்தது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கக் கூடிய பாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்து மூன்று வருடங்களாகி விட்டன. களரிக் கட்டிடம் ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. வசித்துக் கொண்டிருந்த வீடு வேயாததால், சிதிலமடைய ஆரம்பித்திருந்தது. பசிக்கும் நேரங்களில் வீட்டில் சோறு கிடைக்காத நிலை உண்டானது.
நாயர் குடும்பத்தின் வீழ்ச்சியைப் பார்த்திருக்கக் கூடிய கேரளத்தைச் சேர்ந்தவர்களிடம் அந்த விஷயத்தை விளக்கிக் கூறவில்லை. என்னுடைய வாலிபப் பருவத்தின் ஆரம்ப நிலையில் குடும்ப வீடு நின்றிருந்த நிலத்தின் பட்டயத்தில் நான் கையெழுத்துப் போட்டேன். நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.
ஆனால், அந்த போருக்குச் சென்ற மாமாவின் வாளையும், எங்களுடைய குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்த செம்பு பட்டயத்தையும் நான் முந்தைய நாளே என் கையில் வைத்துக் கொண்டேன். பின்னர் ஒரு நாள் நடைபெற்ற கதையை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன். கோவிலின் வாசலில் மூன்று நான்கு பேர் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த வழியாக கடந்து சென்றேன். ஒரு மனிதர் அழைத்து சொத்து கைமாறி எழுதப்பட்டதைப் பற்றி என்னிடம் விசாரித்தார். நான் எல்லாவற்றையும் கூறினேன். இறுதியில் அவர்களில் ஒரு ஆண் கேட்டார்:
'குழந்தை, இனி என்ன செய்வே?'
நான் முழுமையான தன்னம்பிக்கையுடன் பதில் கூறினேன்:
'போருக்குச் சென்ற மாமாவின் வாளையும் செம்பு பட்டயத்தையும் நான் எடுத்து வைத்திருக்கிறேன்.'