தங்கம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7031
அதோடு சேர்ந்து சிரிப்புச் சத்தமும், வாழ்க்கையின் சந்தோஷமான இந்தப் பக்கங்கள் எனக்குள் சிந்தனையைத் தூண்டியது. உலகத்தில் பெரும்பாலானவர்கள் என்னைப்போல துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிலர் மட்டும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்? இதற்குக் காரணம் யார்? நான் சிந்தனையில் மூழ்கினேன். அப்படியே நான் தூங்கிவிட்டேன். திடீரென்று ஒரு ஆரவாரமும் ஈட்டியைப்போல கண்ணுக்குள் நுழையும் இரண்டு வெளிச்சமும். நான் பரபரப்படைந்து திகைத்துப் போய் பார்த்தேன். ஒரு மோட்டார் கார்!
காரிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். பெரிய எஜமானரும அவருடைய மகன் சின்ன எஜமானரும். பெரிய பணக்காரர்கள். அந்த வீடு அவர்களின் பங்காளதான்.
“யார்டா அங்கே?” சின்ன எஜமானர் என்னைப் பார்த்து அதிகாரத்தொனியில் கேட்டார். நான் எதுவும் பேசவில்லை.
“படுத்திருக்கட்டும் மகனே. யாராவது ஏழைகளா இருக்கும்” - பெரிய எஜமானர் கனிவுடன் சொன்னார்.
“ஏழைகள்... அப்பா, உங்களுக்கு எல்லாரும் ஏழைகள்தான். இவன் ஏதாவது பெரிய திருடனாக இருப்பான்” என்று கூறியவாறு சின்ன எஜமானர் தன் கையிலிருந்த விளக்கை என்னுடைய முகத்தை நோக்கி ஈட்டியைப்போல நீட்டினார். என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு உரத்த குரலில் கத்தினார்.
“வெளியே வாடா... ம். இங்கிருந்து போ.”
“அய்யோ! தங்க எஜமானரே!” நான் மிகவும் தாழ்மையான குரலில் சொன்னேன்: “நான் பிச்சைக்காரன். திருடன் இல்ல. இந்த மழையில் நான் எங்கே போவேன்? என்னால நடக்கவும் முடியல...”
அதற்கு சின்ன எஜமானர், “ச்சீ கழுதை... இங்கேயிருந்து கிளம்புடா... பிச்சைக்காரன்! ஏதாவது வேலை பார்த்து மானத்துடன் வாழத் தயாராக இல்லாத பிச்சைக்காரப் பொறுக்கிகள்! ம். போ...” என்றார்.
நான் நகர்ந்து சற்று தள்ளி உட்கார்ந்தேன். பலமாக மழை பெய்து கொண்டிருந்த பயங்கரமான அடர்ந்த இருட்டைப் பார்த்து பயந்துபோய் உட்கார்ந்து விட்டேன். சின்ன எஜமானர் முன்னோக்கி வந்து தன் கையில் இருந்த தங்க வளையம் கட்டப்பட்ட கொம்பால் என்னை ஓங்கி அடித்தார். நான் வாய்விட்டு உரத்த குரலில் அழுதேன்.
“வேண்டாம் மகனே. அவனை அடிக்க வேண்டாம்” - பெரிய எஜமானர் இடையில் புகுந்து தடுத்தார்.
“அப்பா, உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கூறியவாறு என்னை பூட்ஸ் அணிந்த கால்களால் மிதித்து வெளியே தள்ளினார்.
நான் ஈரமான இந்தக் காலை இழுத்துக்கொண்டே நடந்தேன். நேரம் அதிகமாகிவிட்டது. மழை மிகவும் பலமாகப் பெய்து கொண்டேயிருந்தது. பல இடங்களிலும் நான் ஏறிப் பார்த்தேன். தெரு நாயைப்போல எல்லோரும் என்னை அடித்து விரட்டினார்கள்.
இறுதியில் நகரத்தின் வெளிப் பகுதியை அடைந்தேன். ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக தட்டுத் தடுமாறி நான் நடந்தபோது, ஒரு வெளிச்சம் தெரிந்தது. கதவு இடுக்கின் வழியாகப் பார்த்தேன். தயக்கத்துடன் கதவைத் தட்டினேன்.
“யார் அது?” ஒரு குரல் கேட்டது.
“நான்தான்” - தாழ்மையுடன் நான் சொன்னேன்: “ஒரு ஏழை. மழையில் நனைஞ்சிட்டேன்.”
ஓலையாலான கதவை யாரோ திறந்தார்கள். நான் முன்னோக்கி நடந்தேன். ஒரு குடத்தில் தட்டி, தடுமாறிக் கீழே விழுந்தேன்.
நான் கண்களைத் திறந்தேன். ஒரு கட்டு தேங்காய் நாருக்கு அருகில் இருந்த ஒரு படுக்கையறையில் நான் படுத்திருந்தேன். அருகில் ஓலைக் கதவில் சாய்ந்து கொண்டு ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளுடைய முகத்தை நான் பார்த்தபோது, ஈரமான கண்களைத் திருப்பி ஆர்வத்துடன் என்னைப் பார்த்தபடி தங்கம் நின்றிருந்தாள்.
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன். தங்கத்திடம் எல்லா கதைகளையும் சொன்னேன். தங்கம் அழுதாள். நானும் அழுதேன். நானும் தங்கமும் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் அழுதோம்.
“அழக் கூடாது” - ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு தங்கம் சொன்னாள்: “நான் தனியாகத்தான் இருக்கேன். போன மாதம் அம்மா இறந்துட்டாங்க. வேணும்னா நீங்க இங்கே தங்கலாம்.”
தங்கமும் நானும் இப்படித்தான் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கினோம். ஒரு மாதம் கடந்தபோது என்னுடைய காதலியாக மாறிய தங்கம்... என்னுடைய உயிர் நாயகியாக இருக்க அவள் சம்மதித்தாள்.
நாங்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வானத்தில் பொன்நிறக் கதிர்கள் ஒளிரும் பிரகாசமான அதிகாலை வேளையில் காதலென்னும் பூஞ்சிறகுகளை விரித்துப் பாடிப் பறக்கும் இரண்டு பைங்கிளிகள்... அவைதான் நாங்கள். தங்கம்! ஆமாம் - என் தங்கம்... தனித் தங்கம்தான். வானவில்லின் பிரகாசத்தால் பொன்னாடை அணிந்த வசந்த புலர்காலைப் பொழுது அவள்!