காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் மம்மூட்டி!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3023
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் மம்மூட்டி!
எனக்கு மிகவும் பிடித்த நவீன மலையாள எழுத்தாளர் சக்கரியா. அவருடைய பல மிகச் சிறந்த படைப்புகளை நான் தமிழில் மொழி பெயர்த்து, அவை நூல்களாக வெளிவந்திருக்கின்றன. அவரை நேரில் சந்தித்து பல மணி நேரங்கள் உரையாடவும் செய்திருக்கிறேன். நான் மொழி பெயர்த்த அவருடைய நல்ல நூல்களில் ஒன்று- 'ப்ரெய்ஸ் தி லார்ட்'.
பல வருடங்களுக்கு முன்பே என்னுடைய இந்த மொழி பெயர்ப்பு புத்தக வடிவத்தில் வந்து விட்டது. இளமை தவழும் அந்த புதினத்தை சமீபத்தில் மலையாளத்தில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். ஷிபு கங்காதரன் அப்படத்தை இயக்கியிருக்கிறார். நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். மிகவும் அருமையாக படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர். நான் மொழி பெயர்த்த சக்கரியாவின் நாவல் சிறிது கூட மாற்றப்படாமல் அப்படியே திரை வடிவமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையை படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த எண்ணத்துடனும், சந்தேகத்துடனும்தான் நான் படத்தையே பார்த்தேன். படத்தைப் பார்த்து முடித்தபோது, மனம் திறந்து இயக்குநரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. படத்தின் கதை இதுதான். டில்லியிலிருந்து ஒரு காதல் ஜோடி தப்பித்து கேரளத்திற்கு வருகிறது.
பக்குவமற்ற அந்த காதல் புறாக்களுக்கு இடம் தந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஒரு குடும்பத் தலைவனுக்கு உண்டாகிறது. ஒரு ஆருயிர் நண்பனுக்காக அவன் அந்த உதவியைச் செய்துதான் ஆக வேண்டும். செய்கிறான். மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ள அவன் அந்த இளம் காதலர்களுக்கு தன் வீட்டில் அபயம் அளிக்கிறான். யாரென்றே தெரியாத அந்த இளம் உள்ளங்களை இரவும், பகலும் கையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாக்கிறான். கேரளத்தில் நல்ல வசதி படைத்த, உயர்ந்த இடங்கள் வரை செல்வாக்கு உள்ள, எப்படிப்பட்ட வன்முறையின் உச்சத்திற்கும் செல்ல தயங்காத, எப்போதும் அடியாட்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் மகன் அந்த இளம் காதலன். இளம் பெண்ணோ வட இந்தியாவைச் சேர்ந்தவள். அவர்களை பத்திரமாக, யார் கண்களிலும் படாமல் அந்த குடும்பத் தலைவனால் காப்பாற்ற முடிந்ததா?இறுதியில் என்ன நடந்தது?
குடும்பத் தலைவன் பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பவர்- மம்மூட்டி. அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருந்தார் என்பதே உண்மை. சக்கரியா படைத்த கதாபாத்திரங்களும், சம்பவங்களும் புத்தகத்தில் உள்ளபடியே படத்தில் இருப்பதைப் பார்த்து எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் மொழி பெயர்த்த அந்த புதினத்தை இன்னொரு முறை வாசித்துப் பார்க்கிறோம் என்ற உணர்வுதான் படத்தைப் பார்க்கும்போது எனக்கு உண்டானது. படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட்-உரையாடல்கள். காதலைப் பற்றியும், காதலர்களைப் பற்றியும் வாழ்க்கையில் இதுவரை தெரிந்திராத நடுத்தர வயது மனிதர்களான மம்மூட்டியும், அவருடைய நண்பராக வரும் முகேஷும் பேசும் உரையாடல்கள் இருக்கின்றனவே. . . ஏ ஒன்! 'இளம் பருவத்து தோழி' படத்தைப் பார்த்துவிட்டு மம்மூட்டியின் மீது வருத்தமும், கோபமும் கொண்டிருந்த என் மனதில் இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மிகப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கி விட்டார் மம்மூட்டி.
அவரைத் தவிர வேறு எந்தவொரு நடிகரும் இந்த கதாபாத்திரத்திற்கு இப்படி பாராட்டுகிற அளவிற்கு உயிர் தந்திருக்க முடியாது. அதனால்தானோ என்னவோ, படம் பார்த்து பல நாட்கள் ஆன பிறகும், இப்போதும் என் மனதில் மம்மூட்டியே வலம் வந்து கொண்டிருக்கிறார்.