அலிபாபாவின் மரணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6463
அலிபாபாவின் மரணம்
அஜீத் கவுர்
தமிழில் : சுரா
இறுதியாக ஒருநாள் அவன், தன்னுடைய அலுவலகத்தின், டவுன் ஹாலின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். சிறிது மனிதனாகவும், அதிகமாக கிளார்க்காகவும் இருந்த ராம்லால்.
மறுநாள் பத்திரிகையில் வட்டாரச் செய்திகள் பிரசுரமாகும் மூன்றாவது பக்கத்தில், ஓரிரு வரிகளில் ராம்லாலின் மரணச் செய்தி வெளிவந்திருந்தது. ‘நகராட்சியில் கிளார்க்காகப் பணியாற்றிய ராம்லால், டவுன்ஹாலில் நான்காவது மாடியிலிருந்து குதித்து மரணமடைந்துவிட்டான்!’ சாதாரண கெட்ட செய்திகள்தான் பொதுவாகவே அந்தப் பக்கத்தில் பிரசுரமாகும்.
நகரத்தில் இவ்வளவு மரணங்கள் நடந்துவிட்டன; இத்தனை கற்பழிப்புகள் நடந்தன; ஒரு ஆள் லாரி மோதி இறந்துவிட்டான்; ஒரு சிறுவன் புகைவண்டியின் தண்டவாளத்தில் தலையை வைத்து இறந்துவிட்டான்; இன்னொரு ஆள் தற்கொலை செய்து கொண்டான்; ஏதோ சில பெண்கள் ஸ்டவ்வில் தேநீர் தயாரிக்கும்போது வெந்து இறந்து விட்டார்கள் என்று தொடங்கி பலவும்...
அன்று மாலை திருமதி மிடாயின் பார்ட்டியில் திருமதி மாதுர் கோழித் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்: “யார் இந்த பாவம் ராம்லால்? நேற்று டவுன்ஹாலில் குதித்து இறந்த ஆள்?” திருமதி மாதுர் மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எளிமையான ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருந்தாள். காரணம்- அவருடைய கணவரை இந்திய அரசாங்கம் கடந்த ஆறு வருடங்களாக பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு சாதாரண பிரிவில் வேலை கொடுத்து உட்கார வைத்திருந்தது. அங்கு வெளி வருமானத்திற்கு எந்தவொரு வாய்ப்புமில்லை. அதனால் திருமதி மாதுர் தன்னுடைய புடவைகள், நகைகள் ஆகியவற்றின் எளிமையை மறைப்பதற்காக, பார்ட்டி நடக்கக்கூடிய நாளன்று மிகவும் கவனமாகப் பத்திரிகைகளை வாசித்து, அவற்றில் பிரசுரமாகியிருக்கும் இரண்டு மூன்று செய்திகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, பார்ட்டியில் அவற்றைப் பற்றி பேசி, மற்றவர்களுக்கு முன்னால் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வாள்.
எல்லாரையும் பார்ட்டிக்கு அழைத்திருந்த திருமதி மிடா கூறினாள்: “புவர் டியர்...”
அன்று மதியம் பிரஸ் கிளம்பில் பீர் புட்டிகளை நிறைத்துக் கொண்டு, பத்திரிகையாளர்கள் தாராப்பூர் ப்ளாண்ட்டைப் பற்றியும், ஹெவி வாட்டரைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். குப்தா கேட்டார்: “அந்த ராம்லாலைப் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சதா?” இந்தியில் இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு மாலைப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கும் குப்தாவை, இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக அறிவித்தார்.
“ராம்லால் சூடாக இருக்கக்கூடிய ஆள். ஒவ்வொரு முதலமைச்சரும் முன்னாள் முதலமைச்சராகும்போது, புதிதாக வரக்கூடிய ஆளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறுவான். நேற்றைக்கு முந்தைய நாள் பார்த்தபோது, புதிய முதலமைச்சரைப் பற்றிய தகவல்களைத் தருவதற்குத் தயாராக இருந்தான்.” ஹிந்துஸ்தான் டைம்ஸைச் சேர்ந்த ராஜன் கூறினார்.
“நண்பரே, இது அந்த ராம்லால் அல்ல; நேற்று டவுன் ஹாலிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ராம்லாலைப் பற்றிச் சொன்னேன்.”
“அந்த சம்பவத்தைப் பற்றி க்ரைம் ரிப்போர்ட்டர் விசாரணை செய்து கொண்டிருக்கிறார். இன்றிரவுக்குள் ஸ்டோரியை முழுதாக எழுதி விடுவார்.”
ஆனால், ‘ஸ்டோரிகள்’ நேற்று இரவிலிருந்தே எல்லாரின் பாக்கெட்களிலும் இருந்தன. இந்த விஷயத்தில் எல்லாருக்கும் உதவியது பவன் மன்சந்தாதான். இன்றிரவில் அதை எழுதுவான். நாளை பத்திரிகைகளில் பிரசுரமாகும்.
அலுவலகத்தின் பி.ஆர்.ஓ. (பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆஃபீஸர்) பவன் மன்சந்தா பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை ஒரு விசேஷ பார்ட்டி வைத்தான்- தாஜில். இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள், மரணமும் கொலையும் எந்தவொரு அலுவலகத்திற்கும் மிகவும் அவமானத்தை அளிக்கக்கூடியவையே. ஒவ்வொரு அவமானத்தையும் மரியாதைக்குரியதாக மாற்றுவதுதான் மன்சந்தாவின் வேலையே. மந்திரிமோ மாயமோ எதுவும் தேவையில்லை.
ராம்லாலின் தற்கொலைச் செய்தி எவ்வளவு ஒதுக்கி வைத்தாலும், ஒதுங்காமல் வந்து கொண்டிருந்தவுடன், பவன் மன்சந்தாவை நகராட்சியின் கமிஷனர் அழைத்தார்: “என்ன இது? யார் இந்த ராம்லால்? நீங்கள் இருக்க, பாழாய்ப் போன பத்திரிகைக்காரர்களுக்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது? ஆறு தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன.”
பவன் மன்சந்தா புன்னகைத்தான். “சார்... அந்த ஆளின் பிணம் எல்லாரும் பார்க்கும்வண்ணம் கீழே முற்றத்தில் வந்துவிழுந்தால்... பிறகு... என்னால் என்ன செய்ய முடியும்?”
“எனக்கு அது எதுவும் தெரியவேண்டாம். ஆனால், பிணம்... இல்லையென்றாலும், போகட்டும்... குறைந்தபட்சம் இந்த செய்தியையாவது மறைத்திருக்கலாம்.” நகராட்சி கமிஷனரின் முகத்தில் இறுக்கம் இருந்தது. புன்னகைத்துக் கொண்டே அதை சந்திக்க முடியவில்லை. ஆனால், இருவரும் ஒரு விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள்- இந்த பத்திரிகையாளர்கள் நன்றி கெட்டவர்களாகவும், மது அருந்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்... தங்களுக்கென்று கொள்கையே இல்லாதவர்கள்.
பவன் மன்சந்தா ராம்லாலின் தற்கொலைக்கான காரணத்தை அவனுடைய வீட்டில் இருப்பவர்களின் மீது சுமத்துவதற்கு முயற்சித்தான். எது வேண்டுமானாலும் நடக்கக்கூடியதுதான். ராம்லாலின் மனைவி வேறு யாருடைய வலையிலாவது விழுந்திருக்கலாம். ராம்லாலின் திருமணமாகாத மகள் கர்ப்பிணியாகியிருக்கலாம். ராம்லாலின் மகன் ஏதாவது குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால்...
ஆனால், எல்லா விசாரணைகளுக்கும் எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. கிழிந்த ஆடையை அணிந்திருக்கும் முப்பத்தைந்து வயது கொண்ட பொண்ணான (இப்போது ஐம்பது வயது கொண்டவளாகத் தோன்றுவாள்) திருமதி ராம்லால் வேறு யாருடனும் சேர்ந்து ஓடுவதற்கோ வாய்ப்பில்லை. ஆண் பிள்ளைகள் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள்... அவர்களால் கொள்ளையடிப்பதற்கும், நெருப்பு வைப்பதற்கும் போக முடியாது. அப்படியே இல்லையென்றாலும், இந்த அப்பாவிச் சிறுவர்கள் எதைச் சாப்பிட்டுவிட்டு கொள்ளையடிப்பார்கள்? பெரிய பெரிய பணக்காரர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கென்று இருக்கக்கூடிய உரிமையாயிற்றே அது!
ஆனால், தற்போதைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும். மன்சந்தாவுக்கு சம்பளம் கொடுப்பதே இந்த விஷயத்திற்காகத்தான்.
அதற்குப் பிறகு காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. அலுவலகத்தில் மேலேயிருந்து கீழேயும் பிறகு கீழேயிருந்து மாடிக்கும் ஒரு பேப்பர் சென்றது. வழக்கம்போல ஃபைல்களில் சேர்த்து, பழைய தேதியைக் குறிப்பிட்டு வைத்தார். ஏதோ பரத்வாஜின் புகாருடன்- ராம்லால் சொத்து வரியில் மாறுதல் செய்வதற்காக அவரிடமிருந்து நாநூறு ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டான் என்று... (மன்சந்தாவிற்கு திடீரென்று தோன்றிய பெயர்தான் பரத்ராஜ். அதற்குக் காரணம் இருக்கிறது. சமீபகாலமாக ஏதோ பரத்வாஜின் மகளுடன் அவருக்கு திருமண அலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...) பிறகு... கேஸ் முழுவதும் தயாரானது. லஞ்சம் வாங்கும் ராம்லாலை ஆதாரத்துடன் பிடித்தார்கள். (காரணம் இருக்கிறது. வாசகர்களே... கிளார்க்குகளையும், கீழ்நிலையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மட்டுமே ஆதாரங்களுடன் பிடிக்க முடியும். பிறகு... உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் பெரிய அளவில் ஒத்துப் போகாத சிறிய ஆஃபீஸர்களையும். இந்த நாட்டின் கடந்த நாற்பத்தொன்பது வருட வரலாறே இதற்கு சாட்சி). சார்ஜ் ஷீட்டும், சஸ்பெண்ட் ஆர்டரும் கையெழுத்திடுவதற்காக ஏதோ கவுன்சிலரின் மேஜையின்மீது கிடந்தது. சஸ்பென்ஷன் ஆர்டரைப் பற்றி அலுவலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்... ராம்லாலின் காதிற்கும் விஷயம் போய்ச் சேர்ந்தது. கெட்ட பெயருக்கு பயந்து ராம்லால் தற்கொலை செய்து கொண்டான்.