அலிபாபாவின் மரணம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6465
ராம்லாலுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. அவன் திருடர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியதிருக்கிதே!
அவர்கள் நான்கைந்து மாதங்களில் கவுன்சிலர் சாஹிப்பின் பங்களா சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்தார்கள். முதல்தரம் வாய்ந்த விலையதிகமான ‘டிம்பரை’ டில்லியிலிருந்து கொண்டு வந்தார்கள். மார்பிள் மக்ரானாவிலிருந்து. பம்பாயிலிருந்து டைல்ஸ் சானிட்டரி இணைப்புகளையும் பல்புகளையும் ஷேட்களையும் காற்றாடிகளையும் சாஹிப்பின் மனைவியே நேரில் சென்று பார்த்துக் கொண்டு வந்தாள். கான்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பலமுறை சென்ற சாஹிப்பின் மனைவிக்கு ராம்லால் உதவ வேண்டியதிருந்தது. எல்லாவற்றையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும். மேலிடத்திலிருந்து வந்த கட்டளை...
பங்களா கவுன்சிலரின் மகன்களிலிருந்து பேரன்கள் வரை வசிப்பதற்கு ஏற்றபடி உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். பள்ளிக்கூட கட்டடத்தின் காரியம் எப்படியிருந்தால் என்ன? அது நாளைக்கே இடிந்து விழுந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. அதன் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கிடக்கும் குழந்தைகள் பாரதம் என்ற குப்பைக் குவியலில் கிடக்கும் புழுக்கள்தானே! கணக்கில்லாமல் பிறக்கிறார்கள். எப்படியோ வளர்கிறார்கள். கட்டாயம் பள்ளிக் கூடத்திற்குச் சென்றுதான் ஆக வேண்டுமென்று அவர்களிடம் யார் சொன்னது? மற்ற குழந்தைகளைப் போல அவர்களும் ஷுக்களுக்கு பாலீஷ் போடலாம். தொழிற்சாலைகளில் இரவைப் பகலாக்கலாம். மூட்டைகள் தூக்கலாம். வீட்டு வேலைகள் செய்யலாம். பத்திரிகைகளை விற்கலாம். இவற்றையெல்லாம் ஏன் செய்யவில்லை? பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டுமாம்! அரசாங்கப் பள்ளிக் கூடங்களின் கட்டடங்கள் உறுதியாக இல்லையென்ற விஷயம் தெரியாது. மழைக்காலத்தில் இடிந்து விழுந்து நசுங்கி சாக வேண்டியதுதான்.
அன்று முழுவதும் ராம்லால் மிகுந்த கோபத்துடன் இருந்தான். இறந்த குழந்தைகள் மீதும், தன் மீதும், காற்றின் மீதும், மழையின் மீதும், நாற்காலியின் மீதும், மேஜையின் மீதும், மண்ணின்மீதும், ப்யூன்மீதும்- எல்லாரின்மீதும்...
மதியத்தைத் தாண்டி சாஹிப் அவனை அழைத்தார். “ராம்லால், அந்த பள்ளிக்கூட கட்டடத்தைக் கட்டிய கான்ட்ராக்டரின் அனைத்து ஃபைல்களையும், இன்றுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் எல்லா கான்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட ஃபைல்களையும் எடுத்துக் கொண்டு சாயங்காலம் பங்களாவுக்கு வா.”
மாலையில் ராம்லால் ஃபைல்களுடன் சாஹிப்பின் பங்களாவை அடைந்துபோது, கான்ட்ராக்டரும் அவருடைய மகனும் சாஹிப்பின் பெரிய அறையில் அமர்ந்து விஸ்கி பருகிக் கொண்டிருந்தார்கள். “வா, ராம்லாம்... அந்த ஃபைலை இங்கேவை. பள்ளிக்கூட கட்டடம் சம்பந்தப்பட்ட எல்லா பேப்பர்களையும் கொஞ்சம் எடுத்து வை. இரவில் பார்ப்போம்.”
ராம்லாலின் இடம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்த கான்ட்ராக்டர் அவனுக்கும் ஒரு ‘பெக்கை ஊற்றிக் கொடுத்தார். தான் எந்த சமயத்திலும் மது அருந்தியதே இல்லை என்று ராம்லால் கூறினான். “முடியாது... முடியாது. இதை குடித்தேயாக வேண்டும். இதன்மூலம் நாங்கள் உங்களை கௌரவப்படுத்துகிறோம். குடிக்கவில்லையென்றால் எங்களுக்கு அவமரியாதை உண்டானதைப் போல இருக்கும்.” கான்ட்ராக்டர் கூறினார்.
கவுன்சிலர் சாஹிப்பும் புன்னகைத்தவாறு அதை வழி மொழிந்தார்.
ராம்லால் ஒரே மூச்சில் அந்த ‘பெக்’கை உள்ளே செலுத்தினான். பிறகு குவளையை கான்ட்ராக்டரின் முன்னால் வைத்தான்.
இரண்டாவது ‘பெக்’கைக் குடித்துவிட்டு, அவன் மெதுவாக சற்று தன்னைச் சுற்றிலும் பார்த்தான். ஆச்சரியம்தான். அவன் இதே பங்களாவிற்கு முன்பும் பலமுறை வந்திருக்கிறான். ஆனால், வேலை முடிந்துவிட்டால் தலையை குனிந்து கொண்டே, உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுவான். ஆனால், இன்று இரண்டு ‘பெக்’குகளை உள்ளே அனுப்பிவிட்டு மேலே பார்த்தான். சுற்றிலும் பார்த்தான். தன்னுடைய சாஹிப்பை, கான்ட்ராக்டரை, சாஹிப்பின் மனைவியை, சுவர்களை, பாரசீக விரிப்புகளை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை, வீடியோ மியூசிக் சிஸ்டத்தை, ஸோஃபாவை, டின்னர் செட்டை... எல்லாவற்றையும், ‘கட் க்ளாஸால்’ செய்யப்பட்ட ஃப்ளவர் வாஷ், அதில் அலங்கரித்துக் கொண்டிருந்த பூக்கள்...
பிறகு... எதற்கென்று தெரியவில்லை. அவன் உள்ளுக்குள் தனக்குத்தானே திட்டிக் கொண்டான். ‘டேய், ராம்லால்,,, நாயே... பிச்சைக்காரப் பயலே... நீ இவ்வளவு காலமும் என்ன சம்பாதித்தாய்? டேய் நாசமாய் போறவனே! உனக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு வயிறு நிறைய உணவு கொடுக்க உன்னால் முடிந்ததா? பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழுந்து, மரணத்தைத் தழுவிய குழந்தைகளை உன்னால் காப்பாற்ற முடிந்ததா? எதற்குமே லாயக்கில்லாதவன். உன்னால் சொந்தமாக எதையுமே செய்ய முடியாது. மற்றவர்களை ஆக்குவதற்கும் முடியாது. போய் சாகு...’
அவன் கால்கள் தடுமாற வீட்டிற்கு வந்து, இரவு முழுவதும் தனக்குள் போராடிக் கொண்டிருந்தான். தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தான்.
காலையில் குளித்து முடித்து தூய்மையானான். புதிய ப்ளேடால் ஷேவ் செய்தான். அலுவலகத்திற்குச் சென்று மிகுந்த சந்தோஷத்துடன் டவுன்ஹாலில் நான்காவது மாடியிலிருந்து கீழே நோக்கி தாவிகுதித்தான்.