அலிபாபாவின் மரணம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6465
தினந்தோறும் புதிய புதிய அனுபவங்கள். முதல் நாளன்றே ஸாஹிப் அவனிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தார். ‘அந்த பட்டியலில் இருப்பவர்களின் தொலைபேசி அழைப்பு வந்தாலோ அல்லது அவர்கள் நேரில் வந்தாலோ, உடனடியாக எனக்கு தகவலைச் சொல்லிவிட வேண்டும்’. மீதி விஷயங்களை ராம்லால் தன்னுடைய அனுபவங்களை வைத்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கவுன்சிலர் ஸாஹிப்பின் குரலில் இருக்கக்கூடிய மிடுக்கையும் நேர்மைத் தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளையும் குரலில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவனுடைய வேலையின் முக்கியமான தேவை. யாரை உடனடியாகக் கொண்டுபோய் காட்ட வேண்டும்- யாரை ஏதாவது சொல்லி அனுப்பிவிட வேண்டும். யாருக்கு தேநீர் கொடுக்க வேண்டும்- யாரிடமும் ‘இரண்டு’ வார்த்தைகளைப் பேச வேண்டும்- இவையெல்லாம் தனக்குத்தானே ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... ராம்லாலுக்கு தெரியவும் செய்யும். எனினும், சுய பரிசோதனை செய்து பார்க்கும்போது, இவற்றை தான் செய்ய முடியாதென்று தோன்றும்.
அந்த நாற்காலியில் அமர்ந்து அவன் ஒரு வினாதமான உலகத்தைப் பார்த்தான். தன்னைச் சுற்றிலும் நாற்பது அல்ல- நாற்பதாயிரம் திருடர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். தான் அலிபாபா என்பதை அவன் உணர்ந்தான். ஆனால், கதையில் அலிபாபா திருடர்களுடன் சண்டை போட்டான். இந்த அலிபாபாவோ பயந்து போய்விட்டான். திருடர்களை கவுன்சிலர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களைச் சுற்றிலும் காணப்படும் திருட்டுக் கூட்டம். அமைச்சர்கள். அவர்களைச் சுற்றி குழுமியிருக்கும் திருடர்களின் கூட்டம். மாநில அரசாங்கங்களும் திருடர்கள் நிறைந்த வேறு அமைப்புகளும். திருடர்கள் திருடர்கள்தான். எல்லாரும் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. காரணம்- ராம்லால் பாரதமாக இருந்தான். பாரதம் முழுவதும்... நாடு முழுக்க கொள்ளையடிக்கப் படுபவர்களின் வாரிசுகள். மற்றவர்களால் கொள்ளையடிக்கப்படுவதற்காக பரம்பரை பரம்பரையாகவே வரம் பெற்றவர்கள்...
அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது அவனுக்கு ஞானக் கண் கிடைத்து. லட்சக்கணக்கான நோயாளிகள் மருந்து கிடைக்காமல் எப்படி மரணத்தைத் தழுவுகிறார்கள் என்பதை புரிந்தது. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாமல், இளைஞர்களின் எலும்புகளில் நோயணுக்கள் நிறைகின்றன. புதிதாகப் போடப்பட்ட தார் சாலை, முதல் மழையிலேயே குழிகள் விழுந்து காணப்படுகிறது... புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. நாற்காலிக்காக மீதும் தேர்தலில் போட்டி போடும் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறார்கள். அவர்களுடைய சம்பளமோ, ராம்லாலின் சம்பளத்தைவிட குறைவு.
ஆனால், ராம்லாலைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். வெறுமனே ‘யெஸ் சார்,’ ‘ஆல்ரைட் சார்’ என்று கூற வேண்டும். தொலைபேசி அழைப்புகளை கவனமாகக் காதில் வாங்கி, சந்திப்பிற்கான நேரத்தை முடிவு செய்து கூறவேண்டும். ‘டிக்டேஷன்’ கேட்டு எழுத வேண்டும். டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும். வேலையை மாற்றிப் போட்டால், அவனுக்கென்று தனித்துவும் இல்லாமல் போய்விடும். ராம்லால்? எந்த ராம்லால்? ராம்லால் பவுரப்ரஸாத். அது யாரென்று கேட்கிறீர்களா? இந்த நாட்டில் எவ்வளவு ஆயிரம் ராம்லால்கள் இருக்கிறார்கள். நகராட்சியில் இருக்கக்கூடிய பெரிய அலுவலகத்தில்... அதாவது- டவுன் ஹாலில் வேலை பார்க்கும் அந்த கவுன்சிலரின் பர்ஸனல் அசிஸ்டெண்ட் ராம்லால். ஓ... அந்த ஆளா?
ஆமாம்... அதுதான் அவனுடைய மேல் முகவரி.
அது தவிர, வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு உணவு வேண்டும். அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் ‘எதிர்கால வாக்குறுதிகள்...’ அவர்களுடைய ஆடைகளைப் பற்றி எதுவும் கூறாமலிருப்பதே நல்லது. கிழிசல் தைக்கப்பட்ட பைஜாமாவும், ராம்லாலின் கிழிந்த சட்டையைக் கிழித்துத் தைத்த சட்டையும்தான் ‘எதிர்கால’த்தின் ஆடைகள். ராம்லாலின் மனைவி பிரேமாவிற்கு கையை வெட்டிக் குறைப்பதற்கும், நீளத்தைக் குறைப்பதற்கும், அகலத்தைக் குறைப்பதற்கும் தெரியும். ஊசியையும் நூலையும் வைத்துப் போடும் சண்டை... ஆனால் காலர் தைக்கத் தெரியாது. விளைவு? தலைமுறை தலைமுறையாக நீண்டு சென்று கொண்டிருக்கும் காலர்... நாட்டின் பட்டினியையும் வறுமையையும் போலவே, தந்தையின் கழுத்துக் காலரையே குழந்தைகளும்- நாட்டின் எதிர்காலம்- பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பள்ளி ஆசிரியர்களின் நிரந்தரமான திட்டுகளைக் கேட்க வேண்டி வரும். ஃபீஸ் தாமதமாகும்போதும், ஆடை அழுக்காகும்போதும், தோல்வியடையும்போதும், சண்டையும் சொற்போரும் நடத்தும்போதும்...
நாட்டின் எதிர்காலத்தின் சுமை ராம்லாலின் தோளில் இருந்தது. அதன் காரணமாக அவனால் தோளை அசைக்கவே முடியவில்லை. பூமியைத் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அட்லஸ் கடவுளும், எப்போதாவது தோளை அசைப்பதற்கும் தோளிலிருக்கும் சுமையை மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் பூகம்பம் உண்டாகிறது. ஆனால் பூகம்பத்தால் அட்லஸ் கடவுளின் மனைவியும் குழந்தைகளும் கைநழுவிப் போய் விடப் போவதில்லையே! ராம்லால் இப்படி ஏதாவது செய்தால் பூகம்பத்தின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்களே நசுங்கிப் போய்க் கிடப்பார்கள். மனைவி மற்றும் பரிதாபத்திற்குரிய குழந்தைகளின் விஷயத்தைப் பற்றி கூற வேண்டியதே இல்லை. நண்பர்களே. கடவுள்களின் விஷயமே வேறு... அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தோளை அசைக்கலாம்... மலையைத் தூக்கியவாறு இறக்கப் போகும் மனிதனுக்கு மருந்து கொண்டு போய்க் கொடுக்கலாம். மனைவியை யாராவது அர்த்தம் வைத்துக் கொண்டு பார்த்தால், அவனுடைய குடும்பத்தையே நாசமாக்கலாம். வெண்ணெய் திருடலாம். குளித்துக் கொண்டிருக்கும் பெண்களை ‘சென்ஸார் கட்’ இல்லாமல் நிர்வாணமாகப் பார்க்க வேண்டுமென்றால், அவர்களுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு ஓடலாம். திருமணமான பெண்களுடன் காதல் கொள்ளலாம். கர்ப்பிணியாக இருக்கும் தங்களின் மனைவிகளை காட்டுக்குப் போகச் சொல்லலாம். நெருப்பில் அமரச் செய்து தர்மபத்தினிகளிடமிருந்து ‘பதிவிரதை சர்ட்டிஃபிகேட்’ வாங்கலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். கடவுள்கள் அல்லவா! ஆனால், ராம்லாலைப் போன்ற சாதாரண மனிதன் பூமியில் வெறும் புழுதான். அவன் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும். அதற்குமேல் எதுவும் செய்ய முடியாது.
மழைக்காலம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நன்றாக மழை பெய்தது. மூன்றாவது நாள் ஒரு புதிய பள்ளிக்கூட கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி நான்கு குழந்தைகள் இறந்துவிட்டார்கள். காயமடைந்த இருபத்து மூன்று குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.
அந்த கட்டடத்தைக் கட்டிய கான்ட்ராக்டரை ராம்லாலுக்கு நன்றாக தெரியும். அவனுடைய சாஹிப்பிற்குச் சொந்தமாக சண்டீகரில் ஆயிரம் அடி நிலம் இருக்கிறது. அங்கு ஒரு பங்களா கட்ட வேண்டுமென்று கான்ட்ராக்டர்களிடம் அவன் மூலம்தான் அவர் தகவலையே சொல்லி அனுப்பினார். அவர்களுடன் ஏதாவது நல்ல ஆர்க்கிடெக்ட் இருந்தால், வரைபடம் வரைய வேண்டும். அவர்கள் சந்தோஷமாகக் கூறினார்கள்: ‘எதற்கு வரைபடம் மட்டும்? பங்களாவையும் சேர்த்தே கட்டிவிடலாமே?