அலிபாபாவின் மரணம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6465
இந்திரா காந்தி மேனகாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்... ராஜீவ் முன்பு விமானத்தைப் பறக்கச் செய்து கொண்டிருந்தார். இப்போது நாட்டைப் பறக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி பல செய்திகள்... அப்படியே இல்லையென்றாலும், வேறு செய்திகளில் என்ன சுவாரசியம் இருக்கிறது? கார்பச்சோவ், ரீகனுக்கு அனுப்பி வைத்த தந்திச் செய்தி என்ன? ஐரோப்பிய பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் என்ன முடிவெடுத்தார்கள்? அங்டாஸ் என்ன வேலையில் கையெழுத்திட்டது? அணி சேரா நாடுகளின் மாநாடு என்ன செய்தது? அமெரிக்க என்னவெல்லாம் சிறிய ரகசியங்களை தன் சிறகுக்குள் மறைத்து வைத்திருக்கிறது? ஸ்பெய்னில் ஆட்சிக்கு வந்திருப்பது சிவப்பு அரசாங்கமா அல்லது கருப்பா? எந்த நாட்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது? அதை எப்படி அடக்குகிறார்கள்? இப்படிப்பட்ட செய்திகளில் யாருக்கு என்ன பாதிப்பு? இல்லையே? சரிதானே?
ஒருவகையில் பார்க்கப் போனால், இன்றைய யுகம் பத்திரிகை கலாச்சாரத்தின் யுகம். ஆனால், ராம்லாலின் மனைவிக்கு இந்த தாங்க முடியாத நாகரிகக் கலாசாரத்தின் மீது சிறிதும் ஆர்வம் கிடையாது. அந்த காரணத்தால் வறுமையிலும் மகிழ்ச்சியடையக் கூடியவளாக அவள் இருந்தாள். தினமும் காலையிலும் இரவில் படுக்கும் நேரத்திலும் கடவுளை வணங்குவாள். மாலையும் சந்தனத்திரியும் விலையதிகமான பொருள்களாக இருந்தாலும், விவேஷ நாட்களில்- சிவராத்திரியிலும் ஜென்மாஷ்டமியிலும்- ராம்லால் காலையில் பால் வாங்கச் செல்லும்போது, பூங்காவில் கீழே விழுந்துகிடக்கும் மூன்று நான்கு மலர்களை எடுத்துக் கொண்டு வருவான். பிறகு சந்தனத்திரியைப் பற்ற வைத்து கடவுளின் ‘ஹேப்பி பர்த்டே’யைக் கொண்டாடுவாள்.
ஆனால், ராம்லாலின் தற்கொலை பற்றிய உண்மையான தகவல் மற்றவர்களுக்கு எரிச்சலும் புளிப்பும் உள்ளதாக இருந்தது. மதிய நேரம் ஆனபோது, செய்தி ராம்லாலின் விதவையின் காதிற்கும் வந்தது.
“இது பொய்... பச்சைப் பொய்... மிகவும் சிரமப்பட்டுக் கொண்டும், தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டும்தான் நான் குடும்பத்தையே நடத்திக் கொண்டிருந்தேன். லஞ்சம் வாங்கக் கூடிய ஆளாக பிள்ளைகளின் அப்பா இருந்திருந்தால், பிள்ளைகள் இன்றைக்கு இப்படி அழுதிருக்க மாட்டார்கள். அந்த அப்பாவி பிள்ளைகளை கரையேற்றுவதற்கு வீட்டில் நாலு காசு இருந்திருக்கும்.” அவள் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அழுது அழுது கண்கள் இருண்டு போய்விட்டன.
நள்ளிரவு ஆனபோது முற்றிலும் அமைதியற்ற நிலையில் அவள் இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. பொதுவாகவே அவன் மிகவும் அமைதியான ஆள். எப்போதும் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருப்பார். ‘குறைந்த சம்பளத்தில் வீட்டை கவனிப்பதில் இருக்கும் சிரமங்களைப் பற்றிய சிந்தனையாக இருக்குமென்று நான் நினைத்தேன். ஆனால், அவருக்கு வெளி வருமானம் கிடைத்து, அதை வீட்டிற்கு கொண்டு வராமல் இருந்திருந்தால்... யாருக்குத் தெரியும்? வேறு ஏதாவது... வேறு எங்காவது... இந்த ஆண்களை எப்படி நம்புவது?’
இப்படி... நண்பர்களே! நான்கில் ஒரு பகுதி மனிதனாகவும், நான்கில் மூன்று பகுதி கிளார்க்காகவும் வாழ்ந்த ராம்லால் என்ற மனிதனின் சிதை அணைவதற்கு முன்பே, அவனுடைய நல்ல பெயர் நாசமாகி விட்டிருந்தது. மடையன், வாழும் காலம் முழுவதும் நினைத்தான்- தான் பட்டினி கிடந்தாலென்ன- தன்னுடைய பிள்ளைகள் மோசமான நிலையிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் படித்தாலென்ன- தன் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சம்பாத்தியம் நேர்மையுடனும் மனசாட்சியுடனும் இருந்ததுதான் என்று. பிள்ளைகள் உணவு சாப்பிட்டாலென்ன, சாப்பிடாவிட்டால் என்ன- அவர்கள் பெருமையுடன் தலைமை நிமிர்த்திக் கொண்டு நடக்கலாமே! நேர்மை குணமும் கடின உழைப்பாளியுமான ஒரு தந்தையின் பிள்ளைகள்தான் தாங்கள் என்று. மடையன், வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவனையும் போல, பிறந்த கணத்திலிருந்து முட்டாளாகவே இருக்கிறோமே என்பதை மறந்துவிட்டான். வறுமையும் முட்டாள்தனமும் ஆரம்ப காலத்திலிருந்தே ஒன்றாகச் சேர்ந்திருக்கும் வண்ணம் வாழ்ந்தவன் அவன். ஏழையால் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். ஒன்று- தன்னுடைய உரிமையைத் தட்டிப் பறிக்க வேண்டும். இல்லாவிட்டால்- சதி செய்து பெற வேண்டும். இவை எதையுமே செய்ய முடியவில்லையென்றால், பாவம் சதியில் சிக்கவைக்கப்படுவான்.
ராம்லாலின் விஷயத்தில் நடைபெற்ற மிகப் பெரிய சதி அவனுடைய மரணத்திற்குப் பிறகு உண்டானதே.
சதிச் செயலில் சிக்கிவிடுவோமோ என்ற பயம்தான் அவனைத் தற்கொலை செய்ய வைத்தது.
நீங்கள் கேட்கலாம்- அவனுடன் இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்த மனைவியால் தெரிந்து கொள்ள முடியாத விஷயத்தை நான் எப்படித் தெரிந்து கொண்டேன் என்று. பல வருடங்களாக ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்களும், மதிய நேரத்தில் அலுமினிய டப்பாவைத் திறந்து காய்ந்த சப்பாத்தியையும் வெறும் கிழங்கையும் சாப்பிட்டு, பால் கலக்காத தேநீரைப் பருகி வாழ்ந்த கிளாஸ்-த்ரீ அலுவலர்கள்கூட தெரிந்திராத விஷயம். நண்பர்களே... சங்கதி ரகசியமானது. இதுதான் என்னுடைய ட்ரேட் ஸீக்ரட். உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால், நீங்கள் எல்லாரும் கதாசிரியர்களாகி விடுவீர்கள். இந்த அப்பாவி மனிதனின் கஞ்சி குடிக்கும் செயல் எப்படி நடக்கும்?
சம்பவம் இப்படித்தான் நடந்தது. ராம்லாலுக்கு மாறுதல் வந்தது. அவனை பொதுப் பணித்துறையின் பொறுப்பைக் கொண்ட நகராட்சி கவுன்சிலரின் பி.ஏ.ஆக்கினார்கள். பி.ஏ. என்றால் தெரியுமல்லவா? பர்ஸனல் அஸிஸ்டென்ட்....
காளையின் வேலை புல் தின்பது, எஜமானின் கொட்டடியில் கட்டிப் போடப்பட்டிருந்தாலும் கவலையில்லை... திருடன்·“ கொண்டு போனாலும் கவலையில்லை. கிளார்க்கின் வேலையும் கிளரிக்கல் வேலைதான். அது ஃபைல் பார்க்கக்கூடிய வேலையாக இருக்கலாம். பில்களைச் சேர்த்து வைக்கும் வேலையாக இருக்கலாம். பி.ஏ.வின் பொறுப்பாக இருக்கலாம்.
ராம்லாலின் நண்பர்கள் அவனை வாழ்த்தினார்கள்.
“எதற்கு வாழ்த்து? எப்படிப் பார்த்தாலும் கிளார்க்கின் வேலைதானே? என்ன வித்தியாசம்?”
“நண்பா, வித்தியாசம் அந்த நாற்காலியில் அமரும்போது தெரியவரும். அவருடைய அறையில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வரவும் செலவும் நடக்கிறது. வெளியிலிருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு தட்சணை கிடைக்கும்.”
ஆனால், அவையெல்லாம் கிண்டல் செய்யும் விஷயங்களாகத்தான் ராம்லாலுக்குத் தோன்றியது. அவனுக்கு மிகுந்த வெட்கம் உண்டானது.
விதி தன்னை எங்கு கொண்டுவந்து கட்டிப் போட்டிருக்கிறது! கடவுளே!
எது எப்படியிருந்தாலும் வேலை என்னவோ வேலைதான். அதன் பெருமையைப் பற்றி கூறுவதற்கு என்ன இருக்கிறது! அனுபவம் கொண்டவர்கள் ‘கில்லாடி வேலை’ என்று கூறியது வெறுமனே அல்ல.