அலிபாபாவின் மரணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6465
இந்தி திரைப்படக் கதாசிரியர் வடிவமைப்பதைப் போன்ற கதை.
மதியத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் சரி செய்து விட்டு பவன் மன்சந்தா தன்னுடைய ரிப்போர்ட்டை நகராட்சி கமிஷனரிடம் கொடுத்தான். அந்த வகையில் ராம்லாலின் பிணத்தின்மீது ஊழல் செய்தவன் என்ற முத்திரையைக் குத்தினான். போஸ்ட் மார்ட்டத்திற்காக டாக்டர்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் இறந்த சரீரம். ராம்லாலின் இறந்த உடலின் வயிற்றில், பழைய லஞ்சம் வாங்கிய ரூபாய் நோட்டுகளை வலிய திணித்து வைத்தான்.
போஸ்ட்மார்ட்டம் நடக்கும் அறைக்கு வெளியே, ராம்லாலின் அப்பாவி மனைவியும், பதைபதைப்புடன் இருந்த மூன்று குழந்தைகளும் காத்திருந்தார்கள் களைப்படைந்து தளர்ந்துபோய் சோர்வுடன் காணப்பட்ட வயதான மூன்று நான்கு மனிதர்களும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த இரண்டு மூன்று பெண்களும், மூன்று நான்கு உறவினர்கள்... ராம்லாலைப் போல அவனுக்கு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் உறவினர்களும் க்ளாஸ்- த்ரீ, க்ளாஸ்- ஃபோர் ஆஃபீஸர்களே. அதாவது- கரோல்பாக்கின் சில்லறை வியாபாரிகள். பெட்டிக் கடைக்காரர்களும், சேல்ஸ்மேன்களும்... அவர்கள் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்களென்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா? வியாபாரம் நடக்கவில்லையென்றால், இரவில் வீட்டில் அடுப்பு எரியாது என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியும். வேலை செய்பவர்கள் தங்களுடைய காஷுவல் விடுமுறை நாட்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். தாங்களும் பிணமாகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். மற்றவர்களுடைய பிணத்தின்மீது இரக்கம் உண்டானது. இரவு வரும்போது ராம்லாலின் பிண அடக்கம் நடைபெறவில்லையென்றால், அவர்கள் உடனிருந்தவர்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக பிணத்திற்கு அருகில் இரண்டு நிமிடங்கள் அமர்வார்கள். அதாவது- அவனுடைய மனைவிக்கு ஆறுதல் கூறுவார்கள். அதைத் தவிர, மனிதர்களால் என்ன செய்ய முடியும்,
அன்று மாலைநேரம் ஆனபோது, ராம்லாலின் இறந்த உடல் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்த நேரத்தில், பவன் மன்சந்தா தாஜிலிருந்த ஒரு ஸுட்டில் பத்திரிகையாளர்களுக்கு ஸ்காட்ச் சந்து கொண்டிருந்தான்.
பத்திரிகையாளர்களுக்கு எல்லா நேரங்களிலும் ஸ்காட்ச் தருவதில்லை. ஏதாவது மிகவும் பெரியஸ்கான்டல் உண்டாகும்போது மட்டுமே அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மன்சந்தாவின் ‘எஜமானர்கள்’ ஸ்காட்சும் தாஜும் ‘சேங்ஷன்’ செய்வார்கள். இந்தப் பழக்கத்தை ‘ஸ்கான்டல் செய்தி’யின் தனிப்பட்ட மொழியில், ‘வாட்டர் டவுன்’ என்று கூறுவார்கள். ஸ்கான்டலும், ஸ்கான்டல் செய்தியும் பவன் மன்சந்தாவின் தனித்துவ விஷயங்கள்.
இந்த தனித்துவ விஷயங்களின் பலத்தில்தான் பவன் மன்சந்தா இப்போதைய பி.ஆர்.ஓ. பதவியிலிலேயே இருக்கிறான். பத்திரிகை உலகைச் சேர்ந்த பெரிய பெரிய ஜாம்பவான்களைப் பார்க்க வேண்டும்! அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்! அந்த நட்பில் எந்தவொரு வேலையும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவருக்கொருவர் இடையே எந்த வேலையும் இருக்கக்கூடாது. ஒருவரையொருவர் புரிந்து கொண்டுதான் இந்த விளையாட்டே. அதுதான் சட்டம்... நாகரிகம்...
பத்திரிகையாளர்கள் ஓசியில் கிடைக்கக்கூடிய மதுவையும் மாமிசத்தையும் மூக்குபிடிக்க சாப்பிடுவார்களென்று ஒவ்வொரு பி.ஆர்.ஓ.விற்கும் தெரியும். திரும்ப வீட்டிற்குச் செல்ல முடியாத அளவுக்கு... இனி வீட்டிற்குச் சென்றாலும், போதை சற்று இறங்கி தூக்கம் வருவதற்கு நள்ளிரவாகிவிடும்... அதற்குப் பிறகு மனைவியுடன் படுக்கையில் சேர்ந்து படுக்கும்போது, வெங்காயம், மசாலா, வியர்வை ஆகியவற்றின் வாசனைபட்டு அவள் ஹேமமாலினியாகவோ பத்மினி கோல்ஹாப்பூராகவோ தோன்றுவாள். பிறகு... செய்தியைப் பற்றிய விஷயத்தை எப்படி ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்?
ஆனால், எந்த பிரச்சினைக்கும் பரிகாரம் இருக்கிறதே! செய்தியை ‘எம்பர்கோ’ ஆக்கி வைப்பார்கள். நாளை முதலில் அச்சகத்தில் கொடுக்க வேண்டாமென்று எல்லாரும் சேர்ந்து தீர்மானிப்பார்கள். அடுத்த நாள் ‘நியூஸ் எடிட்டரிடம் கொடுப்பதற்காக ‘ஸ்டோரி’யை பாக்கெட்டிற்குள் போடுவார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் சில சட்டங்களும் மரியாதைகளும் இருக்கின்றன. விலைமாதர்கள் இருக்கும் தெருக்களுக்குக் கூட சட்டங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்- பவன் மன்சந்தாவும் ஸ்டோரியை ‘எம்பர்கோ’ செய்துவிட்டான்... ராம்லாலின் பிணத்தின் லஞ்சக் கதையை தயார் செய்வதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டான்.
அந்த வகையில் ராம்லாலின் தற்கொலை நடைபெற்ற மூன்றாவது நாளில் செய்தி பிரசுரமாகி வந்தது. கிளார்க் ராம்லாலுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டது. சஸ்பென்ஷன் ஆர்டர் அதற்குப் பிறகு வந்து சேர்ந்தது. அதனால் உண்டான கெட்ட பெயருக்கு பயந்து அவன் தற்கொலை செய்து கொண்டான்.
அந்த இரண்டு நாட்கள் ராம்லாலின் விதவை மனைவி மிகுந்த துக்கத்தில் இருந்தாள். பிள்ளைகள் களைப்படைந்து சோர்ந்து போய்விட்டார்கள். பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் சாதாரண நிலையில் உள்ளவர்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் வசதி படைத்த வீடுகளில் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றல்ல. மரண வீட்டில் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய சமையலறைக்கு எப்போதும் ஓய்வே இருக்காது. பணியாட்களும் ஆயாவும் டிரைவர்களும் தேநீர் பருக வேண்டுமே! உணவு சாப்பிட வேண்டும். அதனால் தேதீர் பாத்திரத்தை எப்போதும் அடுப்பிலேயே வைத்திருப்பார்கள். உணவு தயாராகிக் கொண்டிருக்கும். வசதி படைத்தவர்களின் துக்கம் பெரிய விஷயம் என்பதால், துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கும் தேநீர் வேண்டும். வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் வற்புறுத்தி, உயிருடன் எஞ்சியிருப்பவர்களுக்கு தேநீரைத் தருவார்கள்.
மிகவும் ஏழையாக இருப்பவர்களின் விஷயத்திலும் பிரச்சினையில்லை. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடையே சாதாரண நாட்களிலேயே அடுப்பெரியுமாவென்று கூறுவதற்கில்லை. வருடத்தில் முன்னூற்று அறுபத்து நான்கு நாட்களிலும் சிரமங்கள்தான். ஆனால், நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்களின் விஷயம் பரிதாபகரமானது. சிரமகாலத்தில் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள்தான் ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள்.
மூன்றாவது நாள் பத்திரிகையில் ராம்லாலின் உண்மையான கதை பிரசுரமாகி வந்தபோது, ராம்லாலின் மனைவி காலையில் அந்த செய்தியைத் தெரிந்திருக்கவே இல்லை. உணவு சாப்பிடும் விஷயம்கூட சிரமத்திற்குரிய ஒன்றாக இருக்கக்கூடிய வீட்டில், பத்திரிகை போன்ற வீணான செலவு எப்போதும் இருந்ததில்லை. அவர்கள் மற்றவர்கள் கூறக்கூடிய விஷயங்களை மட்டுமே கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஊரிலுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் கதைகளை மட்டும்... வழி தவறிச் செல்லும் கணவர்கள் மற்றும் ‘பயங்கரமான’ மாமியார் மார்களைப் பற்றிய செய்திகள்... தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரத்தை அவர்கள் பெரும்பாலும், பக்கத்து வீடுகளில் நடக்கும் சம்பவங்களைத் தெரிந்து கொள்வதிலேயே செலவிடுவார்கள். கிராமப் பகுதிகளை விட்டு வெளியேறிச் சென்றால், நகரத்தில் கொள்ளைகள், பயங்கர விபத்துகள், நடக்கக்கூடாத மோசமான செயல்கள்- இவை பற்றிய செய்திகளே கிடைக்கும். தேசிய அளவில் என்றால்- இந்திரா தன் மகனுடைய மரணத்தின்போது அழவில்லை.