கோட்டை நிழல்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8673
நடந்து நடந்து கடைசியில் நான் வந்து சேர்ந்தது பரந்து கிடக்கும் ஒரு மைதானத்தில். எனக்கு முன்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை இருந்தது.
குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. வெயில் சற்று குறைவாக இருந்த மாலை நேரம். மைதானத்திலிருந்த வானொலியில் சோகம் நிறைந்த ஒரு இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சோகம் ததும்பும் காதல் உணர்வு கொண்ட பாடல்களென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. பாடலைக் கேட்டு முடித்தவுடன் நான் அழ ஆரம்பித்து விடுவேன்.
சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கான்க்ரீட் பெஞ்சுகளிலும் புல்வெளிமீதும் ஆட்கள் நிறைய உட்கார்ந்திருந்தார்கள். கூட்டத்திலிருந்து விலகி, கோட்டையின் மேற்குப் பகுதியில் இருந்த உயரமான ஒரு புல்மேட்டில் போய் நான் உட்கார்ந்தேன்.
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் இந்த நகரத்திற்கு மீண்டும் வந்திருக்கிறேன். ஆறு வருடங்கள் இதே நகரத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தினந்தோறும் மாலை நேரங்களில் இந்த வழியில் நான் செல்வதுண்டு. சில நேரங்களில் தலைக்குள் ஆயிரம் யோசனைகளை வைத்துக்கொண்டு மைதானத்தில் நான் சுற்றித் திரிவதுண்டு. அழியாத ஒரு கடந்த கால நினைவுச் சின்னத்தைப்போல கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்தக் கோட்டையின்மீது எனக்கு எப்போதும் ஒரு உயர்ந்த மரியாதை உண்டு. முதல் முறையாக இந்த நகரத்திற்கு ஒரு கல்லூரி மாணவனாக வந்த நாளன்றே நான் இந்தக் கோட்டைக்கு வந்திருக்கிறேன்.
அந்த நாளை நான் நினைத்துப் பார்க்கிறேன். கோட்டைக்குள் சுற்றி நடந்தேன். பட்டாளக்காரர்களும் படைகளும் இருந்த இடங்களில் அரசாங்க அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. சிவப்பு வண்ண சாயம் பூசிய கனமான மதில்களைக் கொண்ட கட்டடம் அது. அதைச் சுற்றி நடக்கும்போது உள்ளேயிருந்து குரல்கள் கேட்கும். உள்ளே இன்னொரு உலகம்- சிறை. முதல் முறையாக அதைச் சுற்றி நான் நடந்த நாளன்று ஒரு நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அதற்குமேல் அங்கு என்னால் நிற்க முடியவில்லை.
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் இங்கு வந்திருக்கிறேன். அந்த நாட்களை மனதில் நினைத்துப் பார்க்கும் போது என்னுடைய கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. வாழ்க்கை அப்போது ஒரு இனிய பயணமாக இருந்தது. கலைஞனும் காதலனுமான இளைஞன் நான். சிறிதும் குறையாத எதிர்பார்ப்புகள் வாழ்க்கையை வண்ணமயமாக்கி விட்டிருந்தன. கடந்துபோன இனிய நாட்களே, உங்களின் கல்லறையில் நான் இன்று என்னுடைய கண்ணீரால் மலர் அர்ச்சனை செய்கிறேன்.
வாழ்க்கையின் கசப்பையே பின்னால்தான் நான் உணர்ந்தேன். கால வெள்ளத்தின் போக்கில் அடிபட்டு நான் எங்கோ போய்ச் சேர்ந்தேன். இப்போது நரம்புகளில் இளம் ரத்தம் ஓடவில்லை. இதயத்தில் இனிமையான கனவுகள் தோன்றுவதில்லை. உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல், சொந்தத்தில் இருப்பதற்கு ஒரு வீடுகூட இல்லாமல், அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவாக மணலில் நடந்து கொண்டிருக் கிறேன்.
இருட்டு பரவிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் எங்கே திரும்பிப் போகிறார்கள்? தந்தையும் தாயும் மனைவியும் குழந்தைகளும் உள்ள தங்களின் வீடுகளுக்கு. வாழ்க்கை என்பது ஒரு மாலை நேர சவாரி என்று சொல்லலாம். மகிழ்ச்சியுடன் காணப்படும் மனிதர்கள் தங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இருப்பிடங்களுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
வானொலி சோகம் கலந்த இனிய பாடல்களை மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறது.
நேரம் என்னவாகியிருக்கும்? நகராட்சி அலுவலகத்தின் மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தேன். ஏழரை தாண்டியிருக்கிறது. அப்படியென்றால் நான் வந்து எவ்வளவு நேரமாயிற்று? சரியாக என்னால் ஞாபகப்படுத்திப் பார்த்துச் சொல்ல முடியவில்லை. கடந்த பல நாட்களாகவே அறிவு சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது என்றொரு சந்தேகம் எனக்கு. அவ்வப்போது தலைக்குள் ஒரே குழப்பமாக இருப்பதுபோல் தோன்றும். மது எதுவும் அருந்தாமலே தலை கிறுகிறுப்பதைப் போல் சில நேரங்களில் இருக்கும். இப்போது நான் மது அருந்துவதில்லை. மூன்று வருடங்களாக அதை கையால்கூட தொடுவதில்லை.
மைதானத்திலிருந்து மெல்லிய நிலவொளியை மின்சார விளக்குகள் விரட்டியடித்தன. நிலவு என்பது இயற்கையின் புன்னகை. மனிதர்களால் அந்தப் புன்னகையைக்கூட மறக்க முடிகிறது. இப்போது நான் சொன்னது ஒரு தத்துவ ஞானத்திற்குள் அடங்கியதா என்ன? நான் ஒரு தத்துவ ஞானியாக ஆனால் என்ன?
திரும்பிப் போக வேண்டும்போல் இருக்கிறது. இரவில் ஹோட்டல் அறையில் இருக்க வேண்டும். நேற்று இரவு ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கினேன். நினைத்துப் பார்க்கும்போது மனதில் வெறுப்புதான் உண்டாகிறது. அவளுக்கு... இருக்கட்டும். அவளுடைய பெயர் என்ன? ஜமீலா... அவளுக்கு இருப்பது சதை மட்டும்தான். இதயம் என்ற ஒன்று அவளுக்கு இல்லவே இல்லை என்று தோன்றியது.
அதற்குப் பிறகும் என்னென்னவோ நினைத்தேன். நடந்து முடிந்த காட்சிகள். நிமிடங்கள் கடந்து போனதே தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தபோது மைதானம் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த வெற்று மைதானமும், சற்று தள்ளி இருக்கும் கோட்டையும் ஒரு கனவு உலகத்தை ஞாபகப்படுத்துகின்றன. கோட்டையின் இருண்ட நிழலில்தான் நான் இப்போது அமர்ந்திருக்கிறேன். நானிருக்கும் இடத்திலிருந்து சில அடி தூரத்தில் ஆழமான அகழியொன்று இருக்கிறது.
கோட்டையையும் அகழியையும் கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள் கடுமையாக உழைத்திருப்பார்கள். அந்த கருங்கற்களில் அவர்களின் கைரேகைகள் பதிந்திருக்கும். அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
கோட்டையைக் கட்டிய சுல்தானைப் பற்றி சரித்திர நூல்களிலிருந்து பலவற்றையும் படித்திருக்கிறேன்.
இந்த பரந்து கிடக்கும் மைதானத்தில் ஒரு காலத்தில் படைகள் நிறைந்து நின்றிருக்கும். வெடிகுண்டுகளின் சீற்றமும் புகையும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் இப்போதும் இந்த காற்றில் கலந்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்தப் புற்களின் இலைகளில் ரத்தம் சிந்தியிருக்க வேண்டும். ஆழமான இந்த அகழியில் மனித உடல்கள் கூட்டம் கூட்டமாகக் கிடந்திருக்க வேண்டும். அதிலிருக்கும் சேறு கலந்த நீரில் ரத்தத்தின் சுவை இப்போதும் இருக்குமோ என்னவோ!
மூடுபனி படிப்படியாக சுற்றிலும் வந்து மூடிக்கொண்டிருக்கிறது. அடர்த்தி அதிகமாகி அதிகமாகி வருகின்ற மூடுபனி. இங்கு இந்தக் காலத்தில் மூடுபனி இருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாயிற்றே! யோசிக்கிறேன். இது டிசம்பர் மாதம்தானே! என்னால் எதையும் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எல்லாம் தெளிவற்ற ஒரு ஞாபகத்தில் மூடிக் கிடக்கின்றன. மின் விளக்குகள் அவ்வப்போது ஒளி குறைவதாகவும் கூடுவதாகவும் இருக்கின்றன. மைதானம் திடீரென்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது.