கோட்டை நிழல் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8675
அந்தக் கல்லாலான அறையின் வாசல் கதவை அடைந்தபிறகு அவர் கருங்கல்மீது முகத்தை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுவார். ஒரு ஆயுதம் மட்டும் அப்போது அவர் கையில் கிடைத்திருந்தால்... கூர்மையான ஏதாவதொன்று... அதை மகிழ்ச்சி யுடன் தன்னுடைய இதயத்திற்குள் நுழைத்திருப்பார் அவர்.
அந்த அறைக் கதவு இடைவெளி வழியாக சிதாரின் இனிய ஓசை அப்போதும் மிதந்து வந்து கொண்டிருந்தது. பாட்டும் வேதனையும்! சம்மட்டியும் சிதாரும்! இனி எப்போது வாசல் கதவைத் திறப்பார் கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு அவர் படுத்திருந்தார்.
அப்போதும் சிதார் இசை கேட்டுக் கொண்டுதானிருந்தது.
அன்வர்கான் இறுதியாக எச்சரித்தான். மறுநாள் அதிகாலைக் குள் வாயைத் திறந்து உண்மையைச் சொல்லவில்லையென்றால், அவர் உலகத்திடமிருந்து இறுதி விடை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
மரணம் ஆறுதலாக இருந்தது.
மிகவும் கொடூரமான தண்டனையை அவருக்காக ஏற்பாடு பண்ணியிருந்தான் அன்வர்கான். அவருடைய கால்களை படைக் குதிரைகளின் காலில் கட்டி இரு பக்கங்களிலும் அவற்றை ஓட விட்டு அவரைச் சின்னாபின்னமாக்குவது. இதுதான் அவன் திட்டம்.
நிமிடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தன. அவர் சிறிது சிறிதாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நெருங்கியிருக்கும் நேரம். கோட்டையின் உட்பகுதி ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பகல் நேரத்தில் பட்டாளக் காரர்களின் உரையாடலும், காலடிச் சத்தமும், போர்க் கருவிகளின் ஓசையும், குதிரைகளின் குளம்புச் சத்தமும் கேட்டுக் கொண்டே யிருக்கும். இரவில் எல்லாம் அடங்கிப் போயிருக்கும்.
இருபத்து நான்கு வருடங்கள் மட்டும் பார்த்த ஒரு வாழ்க்கை பொழுது புலரும் நேரத்தில் முடியப் போகிறது. வாழ்க்கை இனிதாக இருந்தது. அதிகாலைத் துடிப்பும் மாலை நேரத்து சிவப்பும் நிலவும் நட்சத்திரங்களும் உள்ள பிரபஞ்சத்திடமிருந்து விடை பெற முடியாது... வாழ வேண்டும்! மனதில் அதற்கான ஆசை நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.
இருட்டில் ஒரு இடைவெளி உண்டாக்கிக் கொண்டு வாசல் கதவு மெதுவாகத் திறந்தது... ஒரு மெல்லிய வெளிச்சம் அறைக்குள் படர்ந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு வெள்ளை நிற உருவம் தெரிந்தது. தான் காண்பது கனவு அல்ல என்பது தெரிந்தது. காண்பது உண்மை. ஒரு பெண். வெள்ளை நிறத் துணியால் உடலையும் தலை யையும் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். வெண் மேகங்களுக் குப் பின்னால் மறைந்திருக்கும் நிலவை அவளுடைய முகம் நினைவு படுத்தியது. கதவை மூடிவிட்டு அவள் உள்ளே வந்தாள்.
அப்போதுதான் அவர் அதை கவனித்தார். அவளால் நடக்க இயலவில்லை. ஒரு கால் ஊனமாகி விட்டிருந்தது. ஊன்று கோலின் உதவியுடன்தான் அவள் நடந்துகொண்டிருந்தாள்.
“யாரு அது?”
“ஒரு அப்பாவிப் பெண்.”
“சொல்லுங்க... நீங்க யாரு?”
“என் பேரு ஸுபைதா. அன்வர்கானோட மகள்.” அன்வர்கானின் பெயரைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து விட்டார்.
“பயப்பட வேண்டாம். நான் உங்களுக்கு உதவுறேன்.”
அவள் ஊன்றுகோல் உதவியுடன் விந்தி விந்தி நடந்தவாறு அவருக்கருகில் வந்தாள். அவரின் உடலோடு ஒட்டி இருந்தவாறு அவள் அமர்ந்தாள். அவரின் உடம்பில் இருந்த காயங்களைப் பார்த்து அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. தன்னு டைய நீளமான மெல்லிய விரல்களால் அந்தக் காயங்களைத் தடவியவாறு அவள் சொன்னாள்.
“எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.”
அவர் அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அவள் சொன்னாள். அன்வர்கானின் கூடாரம் பக்கத்தில்தான் இருக்கிறது. படை இருக்கும் இடத்திற்கு தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் அழைத்து வரக்கூடாது என்பது சுல்தானின் உத்தரவு. அன்வர்கானுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார். ஸுபைதா பிறக்கும்போதே, அவளுக்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. அவளின் உம்மா அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே இந்த உலகை விட்டுப் போய்விட்டாள். அன்வர்கான் எங்கேயிருந்தாலும் அவருடன் ஸுபைதாவும் இருப்பாள்.
கடந்த பதினாறு வருடங்களாகவே போர்க் கருவிகளுக்கு மத்தியிலும் மரணத்திற்கு மத்தியிலும்தான் அவளின் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தனிமைதான் அவளுக்கு இருக்கும் ஒரே தோழி. சிதார் வாசித்துக் கொண்டு பகல் முழுவதும் அவள் இருப்பாள். இரவில் உறக்கம் வருவது வரை அழுது கொண்டே இருப்பாள். அதற்கான காரணத்தை அவர் கேட்கவில்லை.
அவள் மீண்டும் சொன்னாள்:
“என்மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களைக் காப்பாத்துறேன்.”
அவர் அவளுடைய முகத்தையே பார்த்தார். நிலவொளி விழுந்திருக்கும் ஒரு ஆம்பல் மலரைப்போல அழகாக இருந்தாள் அவள். பார்ப்பதற்கு அவள் ஒரு தேவதையைப்போல் இருந்தாள். சொர்க்கத்திலிருந்து வெண் மேகங்கள் வழியாக சிறகுகளை விரித்துக் கொண்டு இறங்கி வரும் ஒரு தேவதை...
“ஸுபைதா, உங்க வாப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா...”
“என்னைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு. ஆனா, என் வாப்பாவுக்குத் தெரியாது.”
“ஸுபைதா.”
அவரின் கண்களிலிருந்து சூடான கண்ணீர் அவளின் ஊனமுற்ற கால் பாதத்தில் விழுந்தது.
“இப்போது தப்பிக்கணும்.”
“எப்படி?”
“சாவி என் கையில இருக்கு. கோட்டைச் சுவருக்குப் பக்கத்துல பாதை இருக்கு. சுவத்துல ஏர்றதுக்கு கயிறு எடுத்து வச்சிருக்கு.”
அவள் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே பணயம் வைக்கிறாள். அவர் வாழ்வதால் அவளுக்கு என்ன லாபம்?
“வாங்க.... தாமதம் செய்ய வேண்டாம்.”
அவள் சொன்னதை அவர் அமைதியாகப் பின்பற்றினார். இருட்டாக இருந்த அந்த அறையைத் தாண்டி கற்படிகளில் இறங்கி அவர் வெளியே வந்தார். அவரின் தோள்மீது சாய்ந்தவாறு அவள் நடந்தாள். வெடி மருந்துகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் நிழலில் அவள் சுருட்டி வைத்திருந்த கயிறு இருந்தது. வெளியே வந்த அவர்கள் மெதுவாக முன்னோக்கி நடந்தார்கள்.
வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. அவர்களின் நிழல்கள் ஒன்றோடொன்று இணைந்தன.
இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துவிட்டால்! இல்லை... யாருமில்லை. கோட்டைச் சுவர்மீது ஏறும் இடத்தை அடைந்தபோது அவள் நின்றாள்.
“ம்... போங்க...”
அவள் கயிறை எடுத்து அவருடைய தோளில் போட்டாள்.
அவளின் கைகளைத் தன் மார்புமீது வைத்துக்கொண்டு அவர் அழைத்தார்.
“ஸுபைதா...”
அவர்கள் பிரியப் போகிறார்கள்.
“ஸுபைதா...”
அவருடைய மார்பின்மீது தன்னுடைய முகத்தைச் சாய்த்தவாறு அவள் நின்றாள். மார்பு கண்ணீரால் நனைந்தது.
காவல் காக்கும் அறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.
“போங்க... வேகமா... வேகமா...”