கோட்டை நிழல் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8675
இருண்ட அமைதி. லேசாக பயம் தோன்றுகிறது. கோட்டையின் தெற்குப் பகுதியில் பைத்தியம் பிடித்தவர்கள் தங்கியிருக்கும் ஒரு இடமிருக்கிறது. ஆனால், எனக்கு பயமில்லை. எதற்கும் பயப்படாதவன் நான்.
அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம் காற்றில் மிதந்து வந்தது. ஒரு குருவிக் குஞ்சின் அழுகைச் சத்தம் மாதிரி தெரிந்தது. இல்லை. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒரு மனிதக் குரலே அது. பாடலாக மிதந்து வந்தது. அந்தப் பாடல் வரிகள் இதயத்திற்குள் நுழைந்து என்னவோ செய்தன.
“ஸுபைதா...”
எனக்கு அருகிலிருந்து யாரோ அழைத்தார்கள்.
“யார் அது?”
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
“நான்தான் ஸுபைதா. நீ எங்கே இருக்கே?”
“டேய்! நீ தேடுற பெண் இங்கே இல்ல...” என்று உரத்த குரலில் சொல்ல வேண்டுமென்று முதலில் நினைத்தேன். ஆனால் நான் சொன்னது இப்படித்தான்.
“நண்பரே, இது ஸுபைதா இல்ல... ஒரு சாதாரண மனிதன்.”
அந்த மனிதர் எனக்கு மிகவும் நெருக்கமாக வருவதுபோல் தோன்றியது.
இரவின் மறைவில் காதல்வயப்பட்ட இரண்டு ஆன்மாக்கள் சந்திக்க தேர்ந்தெடுத்த இடம் இதுவாக இருக்கலாம்.
“ஸுபைதா...”
அவர் இன்னும் சற்று உரத்த குரலில் அழைத்தார்.
நான் கேட்டேன்.
“உங்க தலையில மூளை இல்லையா?”
“ஸுபைதா எங்கே?”
“ஸுபைதான்னா யாரு?”
“பாவம்... அவளால் நடக்க முடியாது. அவ எங்கே?”
நான் மீண்டும் கேட்டேன்:
“யாரு ஸுபைதா?”
“தெரியாதா? அன்வர்கானோட மகள்.”
“அன்வர்கான்! அது யாரு?”
“இதுகூட தெரியலியா? நீங்க புதுசா இங்கே வந்திருக்குற ஆளா என்ன?”
“இன்னைக்குத்தான் வந்தேன். முன்னாடியும் இங்கே இருந்திருக்கேன்.”
“பட்டாளத்திலயா?”
“எந்தப் பட்டாளம்?”
“நீங்க பட்டாளக்காரர்தானே?”
“இல்ல.”
“அதுனாலதான் உங்களுக்கு தெரியல. அவ வருவா... அவளால் நடக்க முடியாது. இருந்தாலும் அவ வராம இருக்க மாட்டா.”
அவர் மேலும் சற்று நெருங்கி வந்தார். இருட்டில் அவருடைய வெண்மையான ஆடைகளும் ஒளி வீசிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டையும் தெளிவாகத் தெரிந்தன.
“நீங்க யாரு?”
அது காதில் விழாததைப்போல அவர் கேட்டார்.
“அப்போ நீங்க அவளைப் பார்க்கல?”
“உங்களுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”
“அவள் சிதார் வாசிக்கிறதை நான் கேட்டேன். அவளுக்கு நல்லா பாடத் தெரியும்.”
காதலில் தோல்வி அடைந்த ஒரு காதலன். மூளையில் சமநிலை பாதித்து விட்டிருக்கிறது. ஸுபைதா அவரை ஏமாற்றியிருக்க வேண்டும்.
ஸுபைதா! நல்ல பெயர். ஜமீலாவும் ஸுபைதாவும். ஜமீலாவிற்கு உடல் மட்டுமே இருந்தது. இதயம் இல்லை. ஒருவேளை எந்தப் பெண்ணுக்கும் இதயம் என்பது இருக்கவே இருக்காதோ? அழகான தசை மட்டுமே அவர்களிடமிருப்பது.
அமைதியான நிமிடங்கள்!
அவர் மெதுவாகப் பாடத் தொடங்கினார்.
“இரவு இருட்டானது.
அன்புள்ள ஸுபைதா. நான் தனியாக இருக்கிறேன்.
என் இதயம் நாளை துடிக்காது.
இருட்டின் மடியில் நான் நிரந்தரமாக உறங்கப் போகிறேன்... வாழ்க்கையில் நிலவாய் வந்த என் சினேகிதியே,நீ வர மாட்டாயா?”
அந்தப் பாடல் வரிகள் என் இதயத்திற்குள் நுழைந்து என்னென்னவோ செய்தன. கடவுளே, நோய் வாய்ப்பட்ட எத்தனை ஆன்மாக்கள் உலகத்தில்!
“சொல்லுங்க... ஸுபைதா உங்களை வேண்டாம்னு ஒதுக்கிட்டாளா?”
“அவ உலகத்தையே வேண்டாம்னு ஒதுக்கிட்டா. அவளால் என்னை மறக்க முடியாது. அவள் சிதார் வாசிக்கிறதை ஒவ்வொரு நாளும் நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
அவர் அந்தக் கதையைச் சொன்னார்.
அவர் ஒரு பட்டாளக்காரர். ஊரையும் வீட்டையும் விட்டு வந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. படையில் சேர்ந்து தன்னுடைய இளமையின் ஒளிமயமான நாட்களை அவர் செலவிட்டார். பலமுறை அவர் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். குருதியையும் பிணங்களையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன கண்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
சுல்தானிடமும் அவருடைய படைத் தலைவரான அன்வர் கானிடமும் அவருக்கு எந்தவித பகையும் கிடையாது. அவர் வெள்ளைக்காரர்களின் பட்டாளத்தில் சேர்ந்தது அவரின் குற்றமா? பட்டாளக்காரனாக இருந்தால், அவர் மனித ரத்தத்தைச் சிந்தச் செய்யவே வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அவரின் தொழிலாகிப் போனது.
சுல்தானின் படையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வருவதற்காக அவரைத்தான் வெள்ளைக்காரன் அனுப்பி வைத்தான். காட்டின் எல்லையில் அவரை சுல்தானின் ஆட்கள் பிடித்து விட்டார்கள். தவறு எதுவும் நடக்காமல் காரியத்தில் கண்ணாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எப்படியோ அப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. கீழ்ப்படிவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை.
தன் தலையில் குன்டடி பட்டது அவருக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அவருக்கு சுயநினைவு வந்தபோது, அவர் இருட்டு நிறைந்திருந்த ஒரு அறைக்குள் இருந்தார். சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
தான் எங்கு இருக்கிறோம்? அறிவு மங்கலானதுபோல் அவருக்குத் தோன்றியது. எதையும் ஞாபகத்தில் கொண்டுவர அவரால் முடியவில்லை.
சிதாரின் இனிய ஓசையை அவர் முதல் முறையாகக் கேட்டது அந்த அறையில் இருக்கும்போதுதான். இருண்டு கிடந்த அந்த அறைக்குள் நீர்ப் பாம்புகளைப்போல் அந்த இனிமையான இசை காற்றில் மிதந்து வந்தது.
மீண்டும் அவருக்கு மயக்கம் வருவதைப்போல் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்து பார்த்தபோது, அவருக்கு முன்னால் அன்வர்கான் நின்று கொண்டிருந்தான். கரி படர்ந்த லாந்தர் விளக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு சிப்பாயும் அவருடன் நின்றிருந்தான். அன்வர்கானின் குரல் அந்த அறைக்குள் உரத்துக் கேட்டது. என்னென்னவோ கேள்விகளை அவன் கேட்டான். அவரின் படையைப் பற்றியும் அவர்கள் எப்படி போரை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதுதான் அவனுடைய லட்சியம்.
அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
அன்வர்கானின் முகபாவம் மாறியது. கோபத்தால் அவனுடைய சிவந்த தாடி விரைப்பானது. சிப்பாய் அந்த மனிதரின் ஆடைகளை அகற்றினான். நிர்வாணமான உடம்பின்மீது அன்வர்கான் தன்னுடைய இடுப்பிலிருந்து வேகமாக எடுத்த தோலாலான வாரால் அடித்தான்.
ஒவ்வொரு அடி தன்மீது விழும்போதும் அவர் இப்படியும் அப்படியுமாய் தெளிந்தார். ஒன்று... இரண்டு... மூன்று... எத்தனை அடிகள் விழுந்தன என்பது தெரியாது... பயங்கரமாக வலித்தது. எனினும், அவர் வாய் திறக்கவில்லை.
அன்வர்கான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவ்வப்போது வந்து அடிகள் கொடுத்தான். பலரும் அவரைச் சோதித்துப் பார்த்தார்கள். அவர் எதுவும் சொல்லவில்லை.
ஒரு பெரிய படையின் முழு அழிவே அவரின் நாக்கின் நுனியில் இருக்கிறது. வேதனையைப் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கியவாறு அவர் படுத்திருந்தார். குளிர்ந்த கருங்கல்மீது அவரின் ரத்தத் துளிகள் சொட்டு சொட்டாக விழுந்தன.