கோட்டை நிழல் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8675
அவளின் நெற்றியில் தன் உதடுகளால் முத்தம் தந்த அவர் கோட்டைச் சுவரின்மேல் ஏறினார்.
இரவு நேரத்தின் குளிர்ந்த அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. சலனங்கள்... கோபம் நிறைந்த வார்த்தைகள்... தூரத்தில் ஒரு தீப்பந்தம் தெரிந்தது. மரணம் மீண்டும் தலையை உயர்த்திப் பார்க்கிறது. வேகம்... வேகம்... கயிறைக் கட்டிய பிறகு அவர் மெதுவாக கீழ் நோக்கி இறங்கினார். அந்தப் பக்கம் சுதந்திரமான உலகம் அவருக் காகக் காத்திருந்தது.
அந்தப் பக்கம் கால்களை வைத்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே வந்தது. இனிமேல் அகழியை நீந்திக் கடக்க வேண்டும். அது பிரச்சினையில்லை. சுவருக்கு அந்தப் பக்கம் உரத்த குரல்கள் கேட்டன. ஸுபைதா தன்னுடைய கூடாரத்திற்குப் போய்ச் சேர்ந்திருப்பாளா? காற்றைக் கிழித்துக் கொண்டு இரண்டு முறை மறுபக்கத்தில் குண்டு வெடித்தது... அப்போது உண்டான ஆரவாரத்திற்கு மத்தியில் எழுந்த ஒரு மெல்லிய சோகக் குரலை அவர் கேட்டிருப்பாரா?
திடீரென்று அவர் ஸுபைதாவை நினைத்தார். மூளையில் நெருப்பு பற்றியதைப்போல் இருந்தது. இறங்கிப் போன கயிறு மூலம் அவர் மீண்டும் கோட்டைச் சுவரின்மேல் ஏறினார். அவரின் நரம்புகளில் ரத்தம் கொதித்தது. இதயம் பற்றி எரிகின்றதோ?
கோட்டைச் சுவர்மீது ஏறி நின்று கொண்டு அவர் எதிரிகளைப் பார்த்து சவால் விட்டார்.
மீண்டும் துப்பாக்கி முழங்கியது.
“ஸுபைதா...”
அவர் இருட்டின் ஆழத்திற்குள் இறங்கி நடந்தார்.
அதற்குப் பிறகு அவர் ஸுபைதாவைப் பார்க்கவில்லை. அவள் சிதார் இசைத்துக் கொண்டு அவரைத் தேடி நடந்து கொண்டிருக் கலாம். பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை.
தூரத்திலிருந்து மீண்டும் அந்த மெல்லிய இசை காற்றில் மிதந்து வந்தது.
அவர் இருட்டுக்குள் பாய்ந்து ஓடினார்.
“ஸுபைதா...”
அவரைப்பின் தொடர்ந்து சென்றால் என்ன? அவரைப் பார்த்து ஒன்று கேட்க மறந்துவிட்டேன். அவருடைய பெயர் என்ன?
“நில்லுங்க...”
பார்க்கும்போது அவர் இல்லை. இருள் முழுமையாக விலகி விட்டிருந்தது. மைதானமும் கோட்டையும் ஒரு கனவைபோல வெறிச்சோடிக் காட்சியளித்தன.
தூரத்திலிருந்து அந்த இனிய பாடல் காற்றில் மிதந்து வந்தது.