மனைவியின் காதலன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10284
இதற்கு மேலும் இந்த மாதிரியான கடிதங்களை எழுதி அனுப்பினால், என்னுடைய எழுத்தையோ என்னையோ பார்க்க முடியும் என்று நினைக்க வேண்டாம். உறுதியாக நான் கூறும் விஷயம் இது. கடவுளே! ஆண் வர்க்கத்தைக் காதலித்ததற்கான பலன் இதுதானா? என்னைப்போல இருக்கும் மற்ற சகோதரிகளுக்கும் இப்படி நடக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அன்பு இருப்பதையாவது பார்ப்பார்கள். நான் கள்ளங்கபடமில்லாமல் காதலித்ததற்கான பலன் இதுதானா? நான் உங்களை ஏமாற்றவில்லை. ஏமாற்றப் போவதும் இல்லை. நீங்கள்தான் கபடத்தன்மையுடனும் ஏமாற்றும் எண்ணத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.
ஓ.... என்னைப் பார்க்காவிட்டால் என்ன? அங்கு நல்ல அழகான இளம்பெண்கள் நிறைய இருப்பார்களே! பிறகு எதற்கு வரவேண்டும்? கண்கள் அகலும்போது மனமும் அகலும் என்று கூறுவது உண்மைதான்.’
அடுத்த கடிதம் துலாம் மாதம் 30-ஆம் தேதி-
‘அங்கிருந்து அனுப்பிய கடிதமும் பணமும் கிடைத்தன. என்னிடம் இறுதி விடை கூறுவதற்காக வரவேண்டாம். சுருக்கமாக எழுதுகிறேன். என்னிடம் விடை பெற்றுப் பிரிந்துசெல்ல வேண்டும் என்பதுதான் விருப்பமா?’
அடுத்த கடிதம் விருச்சிக மாதம் 22-ஆம் தேதி-
‘ஒரு இறுதிக்கடிதம்’ என்று மேலே எழுதப்பட்டிருந்தது.
‘இந்த மாதத்தில் இது மூன்றாவது கடிதம். ஒரு கடிதத்திற்குக்கூட பதில் கடிதம் பார்க்காத காரணத்திற்காக வருத்தப்படுகிறேன். இது என்னுடைய இறுதிக் கடிதம்.
இதற்கு பதில் கடிதம் எழுதி அனுப்பவில்லையென்றால், நம் இரண்டு பேரின் மரணம் வரை என்னுடைய ஒரு கடிதத்தையும் உங்களால் பார்க்க முடியாது. என்பதென்னவோ உண்மைதான். உங்களுடைய இதயம் இந்த அளவிற்குக் கடினமானதாக இருக்கும் என்று கடவுளை சாட்சி வைத்துக் கூறுகிறேன் - நான் நினைக்கவேயில்லை. எது எப்படியோ என்னுடைய சாமர்த்தியத்தால் குழந்தையை யாரும் பார்க்கவில்லை...
என்மீது இந்த அளவிற்குக் கோபம் வருகிற மாதிரி நான் என்ன செய்துவிட்டேன்? நாம் சந்திப்போம் என்பது கடவுளின் விதியாக இருந்தால், இதன் மீதியை நேரில் பேசிக் கொள்வோம். இப்படிக்கு, …. தாலுக்காவில் இருக்கும் இந்த அப்பாவியான நான்.’
அடுத்த கடிதம் விருச்சிக மாதம் 25-ஆம் தேதி காதல் மலர்ச்சியுடன் மனைவி காதலனுக்கு எழுதியிருக்கிறாள்.
‘எனக்குள் எவ்வளவோ காதலும் அன்பும் நிறைந்த என்னுடைய இதய நாயகனான பிரிய கண்மணி! இப்போதாவது ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைக்க வேண்டும் என்று மனதில் தோன்ற வைத்த கடவுளை நான் இதயப்பூர்வமாகத் தொழுகிறேன்.
எனினும் இந்த அளவிற்குக் கடினமான இதயத்தைக் கொண்ட மனிதராக ஆகிவிட்டீர்கள் இல்லையா? எனக்கும் நிறைய குறைகளும், வருத்தமும் இருக்கின்றன.
அங்கிருந்து அனுப்பி வைத்த பணம் 23-ஆம் தேதி இங்கு கிடைத்தது. நான் காலையில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது, சாலை சந்திப்பில் அஞ்சல் ஊழியரைப் பார்த்தேன். ‘ஒரு மணியார்டர் இருக்கிறது. அதில் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும்’ என்று சொன்னார். நான் பாதையருகில் இருந்த கடைத் திண்ணையில் ஏறி பெயரை எழுத ஆரம்பித்தபோது, என்னுடைய அண்ணன் அங்கு வந்து விட்டார். பிறகு கையெழுத்துப் போட்டு பணத்தை வாங்கக் கூடிய சக்தி எனக்கு இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, பணத்தை வாங்கினேன். அண்ணன் அந்த ஊழியரிடம் கேட்டார்: ‘எவ்வளவு ரூபாய்? எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது?’ தனக்குத் தெரியாது என்று அந்த மனிதர் கூறிவிட்டார். எப்படியோ ஒரு தவறு நடந்துவிட்டது. பணத்தை யார் அனுப்பியது என்பதும் எங்கிருந்து என்பதும் இதுவரை தெரியாது. ......லிருந்து மூத்த சகோதரர் அனுப்பியது என்று அம்மா கூறிவிட்டாள். அதை அண்ணன் முழுமையாக நம்பினாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனினும் என்மீது அவநம்பிக்கை எதுவும் இல்லாததால், நம்பித்தான் இருப்பார். எங்களுடைய தேர்வு நாளை முடிவடைகிறது. எல்லாவற்றையும் நல்ல முறையில் எழுதியிருக்கிறேன். இந்த வருடம் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இங்கிருந்து சென்ற பிறகு ஒரு பெண்ணைக்கூட தொட்டது இல்லை அல்லவா? அப்படியென்றால் என்னை ஒரு ஆண்கூட தொட்டதில்லை. தேன் குடிக்க வண்டு மலர்களை சுற்றிக் கொண்டிருப்பதைப்போல ஒரு மனிதர் என்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார். ஆனால், என்னுடைய மரணம் வரை என்னை அந்த மனிதரால் தொட முடியாது என்பதுதான் உண்மை.
எல்லோருக்கும் இருப்பதைப்போல ஒரு காம உணர்ச்சியோ, ஆணின் அணைப்பிற்கான விருப்பமோ என்னிடம் சிறிதும் இல்லை. அது தெரியுமல்லவா?
எனினும், கடந்த திங்கட் கிழமை சிறிதும் எதிர்பாராமல் ஒரு கனவு காண நேர்ந்தது. கனவில் பார்த்தது உங்களைத்தான். நீங்கள் இங்கு வந்தீர்கள். என்னிடம் எதுவும் பேசவில்லை. இங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் போய் படுத்தீர்கள். நான் தலை இருக்கும் பகுதியில் வந்து உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டேன். ஆனால், என்னிடம் நீங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நான் ஒரு முத்தம் தந்தேன். அதற்காக என்மீது கோபப்பட்டு அந்த நிமிடமே வண்டியில் ஏறி நீங்கள் போய்விட்டீர்கள். நீங்கள் வரும்போது, ஒரு வேளை இப்படி நீங்கள் நடந்தாலும் நடக்கலாம்.
சென்ற முறை வரும்போது சமையலறையில் நான் அரிசியைக் கழுவிக் கொண்டிருந்தபோது, என்னை வந்து நீங்கள் தொட்டீர்கள் அல்லவா? அப்போது நான் ஒரு முத்தம் தந்ததற்கு சிறிது கோபப்பட்டுக் கொண்டு ‘எனக்குத் தேவையில்லை’ என்று என்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் சொன்னீர்கள். அதற்குப் பிறகு நான் தரவும் இல்லை. நீங்களும் என்னிடம் வாங்கவும் இல்லை.
ஆனால், இப்போது எனக்குப் பெரிய ஒரு விருப்பம் இருக்கிறது. அது எப்போது நடக்கிறதோ, அன்றுதான் நான் முழுமையாகத் திருப்தியடைவேன். அது வேறொன்றுமில்லை. காதலுடன் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எனக்கு ஒரு முத்தம் தர வேண்டும். நானும் அப்படியொரு முத்தத்தைத் தர வேண்டும். அதனால் இந்தக் கடிதம் கிடைத்தவுடன், இங்கு புறப்பட்டு வரவேண்டும். இந்த ஒரு விருப்பம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. என்னுடைய கண்மணிக்கு கடிதம் மூலமாக ஓராயிரம் முத்தங்களைத் தருகிறேன். விரைவில் பதில் கடிதம் எழுதி அனுப்புங்கள். பதில் கிடைக்கத் தாமதமாகும்போது, எனக்கு எந்த அளவிற்கு கவலை உண்டாகும் என்பதைக் கணக்கிடுவது சிரமமானது. இப்படிக்கு உங்களுடைய சொந்தம்-’