
உங்களுக்குத் தெரியுமா?"- அம்மிணி வேகமாக எழுந்து நின்றுகொண்டு கேட்டாள்: "நான் இன்னைக்கு முழுவதும் உங்ககூட இருந்திருக்கேன். உங்க ரெண்டு பேர்ல யாராவது எனக்கு முத்தம் தந்தீங்களா? எனக்கு உதடுகள் இருந்தாலும் உங்களுக்கு அதைப் பற்றிய ஞாபகம் இருந்துச்சா? எனக்கு முத்தம் தர்றதுன்னா ரொம்பவும் பிடிக்கும்."
சித்தார்த்தனும், பத்ரோஸும் ஒருவகை குற்ற உணர்வுடன் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்தன் சொன்னான்: "எங்களுக்கும் யாரும் இதுவரை முத்தம் தந்தது இல்ல... நாங்க போயி இன்னும் கொஞ்சம் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வர்றோம். நீ எங்களுக்கு முத்தம் தருவியா?"
அம்மிணி வேகமாக நடந்து சென்று இரண்டு பேரின் நெற்றியிலும் உதட்டைப் பதித்து முத்தம் தந்தாள். "பிள்ளைகளுக்கு இது போதும்"- அவள் சொன்னாள்.
"நாங்க பிள்ளைங்க இல்ல..." - பத்ரோஸ் சொன்னான்: "நீ எங்கக்கிட்ட விளையாட வேண்டாம். அம்மா முத்தம் தர்ற மாதிரி இருந்துச்சு நீ தந்தது."
"அப்போ நீங்க சொன்னது பொய்" - அம்மிணி அவர்களுக்கு அருகில் சென்று அவர்கள் இருவரின் முகங்களையும், இலேசாகத் தடித்திருந்த தன்னுடைய வயிற்றின் மேல் வைத்தவாறு சொன்னாள்: "உங்களோட அம்மாமார்களாவது உங்களுக்கு முத்தம் தந்திருக்காங்கள்ல? நானும் உங்களுக்கு அம்மாதான். உங்களோட தம்பிப் பயலோட இதயத் துடிப்பை நீங்க கேக்குறீங்களா?"
அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அம்மிணியின் கைகளில் இருந்து தங்களின் தலைகளை வெளியே எடுத்தார்கள். அவளின் புடவைக்கும் ரவிக்கைக்குமிடையில் காணப்பட்ட வயிற்றுப் பகுதியை உற்றுப் பார்த்தார்கள். ஒரு இதயத்துடிப்பைத் தாங்கள் கேட்டதையும், அதைக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டதையும் அவர்கள் உணராமல் இல்லை.
"என்னோட காதலனோட மகன் அது"- அம்மிணி சொன்னாள்: "அவன் பேரு என்ன தெரியுமா...? சித்தார்த்தன்..."
இதைக் கேட்டதும் சித்தார்த்தன் அதிர்ச்சியடைந்தான்.
பத்ரோஸ் கேட்டான்: "உள்ளே இருக்குறது மகன்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"அவன் என்னை எட்டி எட்டி உதைக்கிறானே! அவன் என் வயித்துல இஷ்டப்படி விளையாடுறான். ஆண் குழந்தைகள்தான் இப்படியெல்லாம் செய்யும். அவனோட இதயத்துடிப்பை இன்னொரு தடவை நீங்க கேக்குறீங்களா?"
சித்தார்த்தனும் பத்ரோஸும் கட்டிலை விட்டு வேகமாக எழுந்துநின்று சொன்னார்கள்: "வேண்டாம்... நீ எங்களை ஏமாத்திட்டே!"
அம்மிணி கேட்டாள்: "எதை வச்சு நான் உங்களை ஏமாத்திட்டேன்னு சொல்றீங்க?"
"நீ கர்ப்பமா இருக்கிறதா எங்கக்கிட்ட நீ சொல்லவே இல்லியே!"
இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்த அம்மிணி அவர்களுக்கு நேராக ஓடிச் சென்று, அவர்கள் இருவரின் கன்னத்திலும் முத்தமிட்டாள்: "நான் கர்ப்பமா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை? உங்களுக்கும் எனக்கும்தான் தொடர்பு? என் வயித்துல இருக்கிற குழந்தைக்கும் உங்களுக்கும் எந்தவிதத்துல தொடர்பு இருக்கு? அவன் உங்களை என்ன பண்ணப் போறான்?"
அம்மிணி அகல விரிந்து- மகிழ்ச்சியுடன் காணப்பட்ட கண்களுடன் அவர்கள் இருவர் கண்களையும் உற்றுப் பார்த்தாள்.
பத்ரோஸ் சொன்னான்: "அதுக்கு இல்ல... அறையில நம்மகூட, இன்னொரு ஆளும் சேர்ந்து இருக்குறது மாதிரி ஒரு தோணல்..."
சித்தார்த்தன் கேட்டான்: "சரி... அவனுக்கு ஏன் என்னோட பெயரை வச்சே?"
அம்மிணி சிரித்தவாறு கட்டிலில் போய் படுத்து போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள். அவள் சுவர் பக்கம் சாய்ந்து படுத்தவாறு பேசினாள்: "நீங்க ஏன் என் மகனைப் பார்த்து பயப்படுறீங்க? அவன் ஒரு அப்பாவி... பாவம்... என்னோட அன்பு மகன். நானும் அவனும் ஒரு மூலையில உறங்கிக்கிறோம்..."
சித்தார்த்தனும் பத்ரோஸும் இரவு நேரத்தில் சிறிதுநேரம் வெளியே போய் நடந்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டார்கள். நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து படகுகளின் வெளிச்சம் கடல் நீரில் பிரதிபலிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். தூரத்தில் கப்பல்கள் எழுப்பும் ஒலி கேட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு மகன் பிறந்த ஞாபகமாக நள்ளிரவு நேரத்தில் மணிகள் தொடர்ந்து ஒலித்தபோது பத்ரோஸ் சொன்னான்: "சித்தார்த்தா..."
"என்ன?"
"இன்னைக்கு கிறிஸ்துமஸ்..."
"ஆமா..."- சித்தார்த்தன் சொன்னான்:
"உண்மைதான்."
இரவு நேரத்தில் மேகங்கள் சூழ காணப்பட்டட ஆகாயத்தைப் பார்த்தவாறு சித்தார்த்தன் மெல்லிய குரலில் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தான்.
சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பவும் அறைக்கு வந்தார்கள். அம்மிணியை உறக்கத்தைவிட்டு எழுப்பாமல் மெதுவாகக் கதவைத்திறந்து- எந்தவித ஓசையும் கேட்காதபடி அங்கு இருந்த இன்னொரு கட்டிலில் திறந்த கண்களுடன் சிலைகளைப்போல், இருவரும் போய் படுத்துக் கொண்டனர். அவர்களின் காதுகளில் பெரும் பறை என ஒலித்துக் கொண்டிருந்தது தங்களின் இதயத்துடிப்பா அல்லது அம்மிணியின் வயிற்றில் இருக்கும் பையனின் இதயத் துடிப்பா என்று அவர்களுக்கே புரியவில்லை. பின்னிரவு நேரத்தில் அம்மிணி உறக்கத்தில் ஏதோ உளறிக்கொண்டிருந்தாள். தொடர்ந்து அவளின் நிம்மதியான மூச்சு சத்தத்தை அவர்கள் கேட்டுக்கொண்டே படுத்துக் கிடந்தார்கள். "தெய்வமே..."- சித்தார்த்தன் அழைத்தான். பத்ரோஸ் கேட்டான்: "நீ என்ன சொல்ற?"
"ஒண்ணுமில்ல"- சித்தார்த்தன் சொன்னான்.
சிறிது நேரத்தில் அவர்களின் கட்டில், ஒரு தொட்டிலாக மாறி, கனவுகள் இல்லாத ஒரு உறக்கத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook