'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6839
கதை இதோ தொடங்குகிறது. ஒரேயொரு பிரச்சினை. அதை இப்போதே கூறிவிடுகிறேன். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். இதற்கு இலக்கியரீதியாக வர்ணனைகளைக் கொண்டு வரமுடியுமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. உண்மைச் சம்பவங்களை விவரிக்கிறபோது நாடகத்தனமான அம்சங்களும், நடையும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும். இருந்தாலும், இவை இரண்டுமே இல்லாமல் எப்படி ஒரு விஷயம் இலக்கியம் ஆகமுடியும்?
அதனால்தான் இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த காலகட்டத்தில் இருக்கிற பல விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு- பலவித மாற்றங்களையும் பெற்று தனக்கென்று ஒரு உலகத்தைப் படைத்துக்கொண்டு அதில் நாடகத்தன்மை, இதயத்தை வசீகரிக்கக்கூடிய சக்தி, காலத்திற்கேற்ற வளர்ச்சி, துடிப்பு, தெளிவு எல்லாம் கொண்டு விளங்குகிறது என்று ஒருமுறை ஒரு மனிதர் தனியாக இருக்கும் நிமிடத்தில் ரகசியம் கூறுவது மாதிரி கூறினார். அவர் கூறியது சரியாகவே இருக்க வேண்டும். மனிதர்களுக்கு பொதுவாக வாழ்க்கையில் பார்க்கக்கூடிய கதைகளைவிட கற்பனைக் கதைகளை அதிகம் பிடிப்பதற்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே இது ஆச்சரியமான விஷயம்தான். இருந்தாலும் இங்கு இப்போது நான் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தைத்தான் கூறப்போகிறேன். என்ன காரணத்தாலோ இந்த உண்மைச் சம்பவம் என் மனதில் தனியான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. கண்ட சம்பவத்திற்கும் எழுத்தாளனுக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பின் ரகசியம்தான் என்ன?
இனி நாம் இந்த உண்மைச் சம்பவத்திற்குள் நுழைய வேண்டியதுதான். நான் இதை விவரித்துச் சொல்லும்போது, சில இடங்களில் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. அதை என் கதாபாத்திரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுதான் உண்மை. காரணம்- காலம் அவர்களை விழுங்கிவிட்டது. ப்ரொஃபஸர் கிருஷ்ணன் நாயரோ, இலக்கியத்தைக் கூர்மையாகப் பார்த்து விமர்சனம் செய்யும் ஏதாவதொரு வாசகரோ என்னுடைய இந்தத் தோல்வியை உணரவே செய்வார்கள். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், என் மூலம் தோல்வி யடைகிற என் கதாபாத்திரங்கள், ஒருமுறை அவர்கள் அச்சடிக்கப்பட்டு விட்டால், பிறகு எப்படி அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்? அவர்களோடு சேர்ந்து நானும் அல்லவா மாட்டிக் கொள்ள நேர்கிறது? முன்பு ஒரு நண்பர் கூறியது எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அச்சடிப்பதுதான் ஒரு
எழுத்தாளனின் இறுதிச் சாசனம். அச்சும், மையும்தான் அவனின் இறுதி விதியைப் பறைசாற்றும் சான்றுகள்.
இப்போது கதை ஆரம்பமாகப் போகிறது. இந்த உண்மைச் சம்பவத்தின் தொடக்கத்தில் நம் கண்களில் எடுத்தவுடன் படுவது எது தெரியுமா? நகர்கிற ஒன்று. அதாவது- ஒரு காளை வண்டி. பழமையான, மிகப்பழமையான, தூசியும் ஒட்டடையும் பிடித்த ஒரு காளை வண்டி... அதன் இரு பக்கங்களிலும், பின்பக்கத்திலும் மூங்கிலாலான தட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த தட்டிகளில் "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. திரைக்கதை: பி. பத்மராஜன். இயக்கம்: ஐ.வி. சசி. சோமன் என்ற நடிகர் அன்று ஒரு இளைஞனாக இருந்தார். நான் மிகவும் விருப்பத்துடன் ரசிக்கக்கூடிய ஜெயபாரதியும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அவர்கள் இருவரும் இந்த விளம்பரச் சுவரொட்டிகளில் இருந்தவாறு வெளியே இருக்கிற உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தை நடிகர்- நடிகைகளைப் போல வேறு யாரும் இந்த அளவுக்கு உற்றுப்பார்க்க மாட்டார்கள். அவர்கள் உற்றுப் பார்ப்பதற்குக் காரணம்? ஒருவேளை இதுவும் அவர்களின் அபிலாஷையாக இருக்குமோ? அந்த அபிலாஷைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நோக்கம்தான் என்ன? அப்படி மக்களையும் உலகத்தையும் உற்று நோக்குவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் வெள்ளித் திரையிலும், சுவர்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காட்சியளித்து தங்களின் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் சாபல்யம் அடைந்ததாக நினைப்பு அவர்களுக்கு.
"இதா இவிடெ வரெ” நான் பார்த்து ரசித்த ஒரு திரைப்படம். மது அந்தப் படத்தில் ஒரு கொடூரமான வாத்து வியாபாரியாக வருவார். என் ஞாபகம் சரியாக இருந்தால், பழிக்குப் பழி வாங்குவதுதான் அந்தப் படத்தின் முக்கிய விஷயம். பொதுவாக பழிக்குப்பழி வாங்குவது என்பது நான் விரும்பக்கூடிய ஒரு அம்சமே. அந்தப் படத்தின் முடிவுப் பகுதியை இன்னும் கொஞ்சம் நன்றாகப் படமாக்கி இருக்கலாம் என்று அப்போதே எனக்குத் தோன்றியது. ஆனால், கலையாக இருக்கட்டும், வாழ்க்கையாக இருக்கட்டும்- இறுதிப் பகுதியை சரியாக அமைப்பதுதான் மிகமிகக் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. நமக்கும், மற்றவர்களுக்கும் ஒரே நேரத்தில் பிடிக்கக்கூடிய இறுதிப் பகுதி அமைவது என்பது வாழ்க்கையிலும், கலையிலும் அவ்வளவு சாதாரண ஒரு விஷயமில்லை. இந்தக் காளை வண்டியின் பின்னால் கட்டப்பட்டிருக்கின்ற இன்னொரு விளம்பரப் பலகையில் "மாதாவில் இன்று முதல்”என்று எழுதப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே பொய் என்பதுதான் நான் இப்போது உங்களிடம் கூறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம். இவையெல்லாமே பொய் என்பதுதான் இந்தச் சம்பவத்தில் மறைந்திருக்கும் உண்மை. மாதா தியேட்டரில் இப்போது காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் படம் "இதா இவிடெ வரெ” இல்லை. அந்தப் படம் மாதா தியேட்டருக்கு வந்து ஓடி முடிந்து எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டன.
இந்தக் காளை வண்டிக்கு முன்னால் வயதான ஒரு மனிதன், மார்பில் பெல்ட் மாதிரி கட்டியிருக்கும் துணியில் செண்டை மேளத்தைக் கட்டியவாறு நின்று கொண்டிருக்கிறான். அந்த மனிதனின் முகத்தில், தான் யாருக்குமே தேவையில்லாத ஒரு ஆள் என்ற நினைப்பு ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காளை வண்டியின் தனித்துவம் என்னவென்றால், இந்த வண்டியில் காளைகளே கிடையாது. ஏன், வண்டிக்காரன் கூட கிடையாது. அது மட்டுமல்ல... மாதா தியேட்டருக்கு முன்னால் இந்த வண்டி தற்போது நின்று கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு வீட்டுக்கு முன்னால்! இவை எல்லாமே மேலே சொன்ன பொய்யின் அம்சங்கள்தாம்.
கொஞ்சம் முன்னால் நடந்துசென்றால் நாம் காளைகளைப் பார்க்கலாம். அவை வீட்டின் முற்றத்தில் ஒரு மூலையில் படுத்துக் கிடக்கின்றன. அவற்றின் முகத்தில் தளர்ச்சி தெரிகிறது. எழுந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வமோ, வேகமோ அந்தக் காளையிடம் இல்லை. அவை படுத்துக் கிடக்கும் இடத்திலேயே சாணத்தை இட்டு, மூத்திரத்தைப் பெய்து கொண்டிருக்கின்றன. இலக்கிய நோக்கில் பார்க்காமல் சாதாரணமாகப் பார்த்தால்கூட, அவற்றின் முகத்தில் எந்தவித துடிப்பும் இல்லை என்பதே உண்மை.