'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6844
நீ ஒரு விலையைக் கொடுத்துட்டு, அவன்களைக் கூட்டிட்டுப்போ. ஆனா, ஒரு விஷயம்... அவன்களைப் கொண்டுபோன பிறகு அடிக்கவோ, பட்டினி போடவோ, கஷ்டப்படுத்தவோ செய்யாம கொல்லணும். தப்பித் தவறிக்கூட அவன்களோட கறியை எடுத்துக்கிட்டு இந்தப் பக்கம் வந்துடாதே...''
இனி மீண்டும் நாம் ஆரம்பத்தில் சொன்ன காட்சிக்குப் போவோம்.நாம் பக்கத்தை பின்னோக்கித் திருப்ப வேண்டி இருக்கிறது. இந்தக் காட்சியில் நாம் காண்பது- வண்டிக்காரனும் கசாப்புக் கடைக்காரனும் வண்டிக்காரனின் பிள்ளைகளும் சேர்ந்து, முற்றத்தில் படுத்துக்கிடக்கும் நமக்கு நன்கு அறிமுகமாகி இருக்கும் இரண்டு காளைகளையும் எழுந்து நடக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதைதான். ஆனால், அந்த இரண்டு காளைகளும் கொஞ்சம்கூட அசையாமல், யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், தங்களைக் கசாப்புக்கடைக்காரன் கொண்டுபோவதற்காக வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி, படுத்தபடியே கிடக்கின்றன. அதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான் கசாப்புகடைக்காரன். அவனுக்கு ஒருவிதத்தில் தாங்க முடியாத கோபம் வருகிறது. வண்டிக்காரனின் மகன் அடுத்த நிமிடம் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டு வருகிறான். வண்டிக்காரன் அந்தப் பிரம்பை வாங்கி தூரத்தில் வீசி எறிகிறான். அவன் முகத்தில் தாங்க முடியாத வேதனையும், வருத்தமும் உண்டாகிறது. அவன் தன் மகனிடம் என்னவோ சொல்கிறான். மகன் வேகமாக நடந்து பாதை வழியே போகிறான். வண்டிக்காரன் வீட்டுக்குள் போய் அங்கிருந்த பழைய சினிமா நோட்டீஸ்களை எடுத்துக்கொண்டு வருகிறான். "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படம் சம்பந்தப்பட்ட விளம்பர நோட்டீஸ்கள் அவை. அவற்றுடன் காளை வண்டியை நிறுத்தியிருக்கும் கொட்டடியை நோக்கி அவன் நடக்கிறான். சிறிது நேரத்தில் வண்டிக்காரனின் மகனும் வேறொரு ஆளும் அங்கு வருகிறார்கள். இந்தப் புதிய ஆள்- செண்டைக்காரன் தான். மூன்றாவது காட்சியில் தூக்கம் கலைந்து எழுந்த அதே செண்டைக்காரன்தான். செண்டை முதுகில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முகத்தில் வியர்வை ஆறாக வழிந்து கொண்டிருக்கிறது. செண்டைக்காரன் வண்டிக்காரனையும் காளைகளையும் பார்க்கிறான்.
நாம் எந்த இடத்தில் கதையை ஆரம்பித்தமோ அந்த இடத்திற்கு மீண்டும் இப்போது வந்திருக்கிறோம். கதையின் இறுதிப் பகுதி இது. இத்துடன் கதை முடிந்துவிடும். இனி வேக வேகமாக நாம் முடிவை நோக்கிப் போக வேண்டியதுதான். செண்டைக்காரன் சாவகாசமாக செண்டை கட்டப்பட்டிருக்கும் பெல்ட்டை மார்புப் பகுதியில் தொங்கவிட்டுக்கொண்டு, கவலை தோய்ந்த, தளர்ச்சி அடைந்த, வயதாகிப் போன முகத்துடன் காளைகளையும், வண்டிக்காரனையும், கசாப்புக்கடைக்காரனையும் பார்த்தவாறு செண்டையை அடிக்கிறான்: "டேம்...” எல்லாரும் காளைகளையே பார்க்கின்றனர். காளைகள் யாரையும் பார்க்கவில்லை. ஆனால், அவை எதையோ காதில் கேட்கின்றன என்பது மட்டும் புரிகிறது.
"டேம்... டேம்... டேம்...” செண்டை முழங்குகிறது. காளைகள் அடுத்த நிமிடம் எழுந்து நிற்கின்றன. "டேம்... டேம்...” அவை மூத்திரத்தில் நனைந்திருக்கும் வாலுடன், சாணம் அப்பியிருக்கும் கால்களுடன் முற்றத்தில் தயாராக நின்றிருக்கும் வண்டியை நோக்கி நடக்கின்றன. அவற்றின் தளர்ச்சியடைந்துபோன கண்களில் ஒரு பிரகாசம் உண்டாகிறது. அவற்றின் மெலிந்துபோன வால்கள் விசிறியைப் போல மூத்திரத்தை நாலா பக்கங்களிலும் சிதறவிட்டவாறு இப்படியும் அப்படியுமாய் ஆடுகின்றன. அவை "இதா இவிடெ வரெ” விளம்பர வண்டிக்கு நேராகக் கனவில் நடப்பதுமாதிரி நடக்கின்றன. ஜெயபாரதி என்ற அழகியும் சோமனும் மதுவும் வண்டியில் இருந்தவாறு காளைகளையே உற்றுப் பார்க்கின்றனர். செண்டை முழங்குகிறது- "டேம்... டேம்...” காளைகளுக்காக மட்டுமே அந்த செண்டை அடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவற்றின் மரணத்திற்காக அடிக்கப்படும் செண்டை ஒலி அது என்பது விளம்பரப் போஸ்டரில் இருக்கும் ஜெயபாரதிக்குத் தெரியுமா என்ன? காளைகள் இதோ பாசி பிடித்து கரையான் அரித்துக் காட்சியளிக்கும் வண்டியின் நுகத்தடியை தம் தளர்ச்சியடைந்துபோன கழுத்தில் மனப்பூர்வமாகச் சுமந்து நின்றுகொண்டிருக்கின்றன. "டேம்... டேம்...” செண்டை மீண்டும் காளைகளுக்காக முழங்குகிறது. செண்டைக்காரனின் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து கண்ணீரும். "டேம்... டேம்...” செண்டை ஒலியைத் தொடர்ந்து ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக- பின்னர் வேக வேகமாக, வண்டிச்சங்கரங்களில் கட்டப்பட்டிருக்கும் பழைய மணிகள், "க்ணிங் க்ணிங்” என்று ஓசை எழுப்ப, தார்சாலையில் பழைய லாடங்களைப் பதித்துக்கொண்டும், துருப்பிடித்த சக்கரங்களை உருட்டிக் கொண்டும், சாலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கறுப்புத் தாருக்கு மேலே "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படத்தின் பொய்யான ஒரு விளம்பர வண்டி புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
இது ஒரு நடந்த நிகழ்ச்சி. ஒரு உண்மைச் சம்பவத்தை இலக்கியமாகப் படைப்பதில் குறைபாடு ஏதும் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. யதார்த்தமாக நாம் காணும் விஷயங்கள்தான் இலக்கியமா என்று யார்தான் இன்று கேட்காமல் இருக்கிறார்கள்? இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கும் மலையாள இலக்கிய உலகில்கூட இன்றும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? உண்மைச் சம்பவத்தை எழுதுகிறபோது, அது கலை அல்ல என்று வாதாடுகிறவர்களும் இல்லாமல் இல்லை. அது மட்டுமல்ல... வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தத்தை எழுத்து வடிவத்தில் கொண்டு வருகிறபோது, அதன் அதிக கனத்தால், கலை என்ற ஒன்று பாதிக்கப்பட்டு விடுகிறது என்பது அவர்கள் சொல்லும் கருத்து. கலை என்பது மலையாள இலக்கிய உலகைப்போல எப்போதும்- எல்லா காலத்திலும் ஒரு ரொமான்டிக் வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்க முடியுமா என்ன?
எழுத அமரும்போது... தேவையில்லாமல் ஏதாவது பேசி அந்த முயற்சியைக் கெடுக்க வேண்டாம். அது நீ இருக்கும் இடம்... அவ்வளவுதான்...
கலை என்பது ஒருவித சர்க்கஸ் வித்தை மாதிரி என்று ஏதோ ரகசியம் சொல்வது மாதிரி ஒருநாள் ஒருவர் சொன்னார். யதார்த்தத்தை விட்டு விலகி இருக்கவும் வேண்டும். அதே நேரத்தில் இறுகப் பற்றிக்கொண்டும் இருக்கவேண்டும். ஆனால், ரொமான்டிக் ட்ரப்பீஸில் பறக்கும் சுகம் அதை உண்மையாக அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எது எப்படியோ... நாம் சுகமாகப் பறக்கலாம். கீழே வரவேண்டிய அவசியம் இல்லை. கூடாரத்திற்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகளுக்குக் கீழே ஒரு மினுமினுக்கும் தாளாலான நட்சத்திரத்தைப்போல நாம் ஜொலிக்கலாம். விளக்குகள் அணைக்கப்பட்டு, கீழே வலையைச் சுருட்டி நடத்துகிற ஒரு ட்ரப்பீஸ் வித்தை இருக்கிறது. ஒரு மங்கலான வெளிச்சத்தில் கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு வினோத வித்தை...
முன்னால் குறிப்பிட்ட அதே ஆள் என்னிடம் ரகசியமாக இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கலையும் இலக்கியமும் இருட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெடி போன்றவை
ஆனால், சத்தியத்திற்கு வைக்கப்பட்டது உண்மை அல்லாத ஒன்றுக்கு ஒத்து வராது என்பதையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஆள் இந்தப் பக்கம் வரவில்லை. இத்தகைய ரகசியச் செய்திகளைக் கேட்பதில் எனக்குக்கூட ஆர்வம்தான். ஆனால், சொல்வதற்குத்தான் ஆளைக் காணோம். மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்தபோது, நடந்த இந்தக் கதையை எழுதுவதற்குக்கூட கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கடைசியில் அந்தக்கதை போய் முடிவது ஒரு பெரிய பொய்யில் என்று ஆகிவிட்டால்...? அதுவும் ஒரு வீழ்ச்சிதானே? ஒன்றிரண்டு பிறவிகளுக்குத் தேவையான திருட்டுத்தனங்களை ஏற்கெனவே நான் வாழ்க்கையில் சேர்த்து வைத்திருக்கிறேன். எதற்காக? யாருக்காக? இலக்கியத்தையும் கலங்கப்படுத்துவதற்கா? எதற்காக இந்த வேண்டாத காரியங்கள்?
என்னதான் சொல்லட்டும், கடைசியில் வெற்றி பெறுவதென்னவோ கலைதான். எழுத்தாளன் பென்சில் முனையைக் கூர்மைப்படுத்தவோ, பேனாவில் மை ஊற்றவோ செய்கிறான். அது எதற்காக? இந்த ரகசியம் கூட அந்த ஆள் முன்பு சொன்னதுதான். பாவத்தைப்போல, செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இருப்பதுதான் கலை என்ற ஒன்று. பாவம், கலை- இரண்டுமே ஒரே வகையான ஆசையிலிருந்து பிறப்பவைதாம். இரண்டின் நோக்கமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதைச் செய்கிறபோது, ஒன்றோ இரண்டோ பொய்கள், உண்மைக்காகவும் அழகிற்காகவும் சொல்லும் சூழ்நிலை உண்டாகும் பட்சம், அதை யாராவது மன்னிக்க மாட்டார்களா என்ன?