'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6844
பசு, பறவைகள் போன்றவற்றிற்கு முக பாவங்களே இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான், இப்படியொரு கருத்தை நான் கூறுகிறேன். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் நாம் கதைக்குள் நுழைய வேண்டி இருக்கிறது. காளைகளின் முகத்தில் நாம் சில பாவங்களைக் காணவே செய்கிறோம். அவற்றுக்கு முன்னால் செண்டைக்காரனைப்போல, வயதான வண்டிக்காரனும் இப்போது நின்று கொண்டிருக்கிறான். அவன் முகத்திலும் காளைகளின் முகத்தில் தெரியும் தளர்ச்சி தெரிகிறது. கவலையும் அங்கு நிறையவே தெரிகிறது. அவன் கிட்டத்தட்ட அழும் நிலையில் நின்று கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. அந்த ஆளுக்குப் பக்கத்தில் மத்திய வயதைத் தாண்டிய தளர்ந்துபோன ஒரு ஆளும், வேறு சில இளைஞர்களும் நின்றிருக்கிறார்கள். எல்லாரும் காளைகளைப் பார்த்தவாறு நின்றிருக்கின்றனர். காளைகள் யாரையும் பார்க்கவில்லை. "இதா இவிடெ வரெ” விளம்பர ஊர்வலம் இப்போது ஆரம்பிக்கப் போகிறது என்று நம் மனதில் படும் ஒரு விஷயத்தைத் தற்போதைக்கு நாம் கொஞ்சம் மறப்போம். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. நான் சொல்லப்போகும் இப்போதைய காட்சியிலும் இதே காளை வண்டியைப் பார்க்கலாம். ஆனால், நாம் இப்போது பார்க்கும் வண்டிக்காரன் சற்று வயது குறைந்த இளைஞன். வண்டி செம்மண் நிறத்தில் இருக்கிறது. சக்கரங்களில் செம்மண் படிந்திருக்கிறது. வண்டியில் புதிதாகத் தயாரான செங்கற்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. வண்டி ஒரு செம்மண் பாதை வழியே போய்க் கொண்டிருக்கிறது. வண்டியை இழுத்துக்கொண்டு போவது நாம் ஏற்கெனவே பார்த்த காளைகள்தாம். அவற்றின் கொம்புகள் இப்போதுதான் வளைந்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. கண்களில் நல்ல பிரகாசம் தெரிகிறது. வால்கள் விசிறியைப்போல இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கின்றன. கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் "க்ணிங் க்ணிங்” என்று ஓசை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. குளம்புகளில் அடிக்கப்பட்டிருக்கும் லாடங்கள் சரளைக் கற்களில் படும்போது, தீப்பொறி பறக்கிறது.காளைகளின் கழுத்தில் முடிச்சுகள் போட்ட பச்சை, நீல நிறக் கயிறு மாலைகள் காளைகளுக்கு அழகு சேர்க்கின்றன. நெற்றியில் வளைவாகக் கட்டப்பட்டிருக்கும் கயிறில், கடலலைகளால் கரைக்குக் கொண்டு வரப்பட்ட சின்னச் சின்ன சங்குகள் வரிசையாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன. மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் வெளிச்சத்திற்கும் செங்கல்லின் சிவப்பு நிறம்தான். சக்கரங்கள் கற்கள் மேல் போகும்போது உண்டாகும் "சரக் சரக்” ஓசையும், மணிகள் குலுங்கும் சத்தமும், குளம்புச் சத்தமும் நாலா பக்கங்களிலும் கேட்கிற மாதிரி மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தைக் கிழித்துக் கொண்டு புழுதியைப் பறக்க விட்டவாறு செல்லும் வண்டியும் காளைகளும் வண்டிக்காரனும் கொஞ்சம் கொஞ்சமாக நம் பார்வையிலிருந்து மறைந்து போகிறார்கள். நாம் பார்த்த இந்த சம்பவத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.
இனி நான் நடத்தப் போகும் காட்சி இயக்கத்தில் நீங்கள் பார்க்கப் போவது ஒரு கிராமத்தில் இருக்கும் திரைப்படக் கொட்டகை. பாசி படர்ந்து நிறம் மங்கிப்போய்க் காட்சியளிக்கும் அந்த தியேட்டரின் முகப்பில் பச்சை நிறத்தில் பெரிய கொட்டை எழுத்தில் ஆங்கிலத்தில் "மாதா” என்று பெயர் எழுதப்பட்டிருக்கிறது. கீறல் விழுந்த, சிமெண்ட் ஆங்காங்கே இடிந்திருக்கும் காம்பவுண்ட் சுவரில் மரப்பலகைகளால் ஆன ஒரு கேட். அது ஒருமுறைகூட அடைக்கப்பட்டு இதுவரை யாரும் பார்த்ததில்லை.
அந்த கேட்டுக்கு வெளியே நம்முடைய காளை வண்டி இதோ மீண்டும் நின்றுகொண்டிருக்கிறது.
கொட்டகையில், "அவளுடெ ராவுகள்” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் விளம்பரப் போஸ்டர்கள் கேட்டுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையிலும், தியேட்டரின் அழுக்குப் பிடித்த சுவரிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன. எல்லா போஸ்டர்களிலும் சீமா என்ற இளம் நடிகைதான் இருக்கிறாள். இலேசாக முகத்தைக் குனிய வைத்தவாறு சீமா நின்று கொண்டிருக்கிறாள். அவள் ஒரு சட்டை மட்டும் அணிந்திருக்கிறாள். அது இடுப்புக்கு சற்றுக்கீழே- தொடைகளுக்கு மேலே வரைதான் இருக்கிறது. இந்தப் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியின் சாயல் இருக்கிறது. இருந்தாலும், அதில் ஒரு கள்ளம் கபடமற்ற தன்மையும் தெரியவே செய்கிறது. மாதா தியேட்டரில் திரையிடப்பட்டு பல வருடங்கள் கழிந்த பிறகுதான், நான் ஆர்வம் மேலோங்க இந்தப் படத்தைப் பார்த்தேன். என்னை அழ வைத்த ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இருந்தது. ஐஸன்ஸ்டைக், ட்ரூஃபோ ஆகியோரின் திரைப்படங்களைப் பார்த்துதான் பொதுவாக நான் அழுதிருக்கிறேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தைப் பற்றி நான் இங்கு கூறுவதால், உண்மையைச் சொல்கிறேன். நான் வெறுமனே பொய் சொல்கிறேன் என்றுகூட என் நண்பர்கள் நினைக்கலாம். நான் சொல்வது உண்மைதான் என்று என் பகைவர்கள் எண்ணலாம். ஆனால் என்னுடைய கண்ணீர்த் துளிகளை நான் மதிப்பு மிக்கதாக எண்ணுகிறேன். சீமாவின் போஸ்டரின் தனித்துவம் என்னவென்றால், மற்ற நடிகர்- நடிகைகளைப் போல சீமா போஸ்டரில் இருந்தவாறு உலகத்தைப் பார்க்கவில்லை. சீமா தன்னுடைய சொந்த உடலைப் பார்க்கிறாள். அது எனக்கு மிகவும் பிடித்தது.
மதிய நேரம். காளை வண்டியின் இரு பக்கங்களிலும், பின்னாலும் வைக்கப்பட்டிருக்கும் தகரத்தில் விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. நம்முடைய வண்டிக்காரன் ஒரு கட்டு நோட்டீஸ்களுடன் தியேட்டரின் அலுவலக அறையை விட்டு வேகமாக நடந்து வருவதையும் நாம் பார்க்கலாம். காளைகள் வண்டியில் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் கொம்புகள் நீண்டும் வளைந்தும் இருக்கின்றன. வண்டிக்காரனின் தலைமுடி இலேசாக நரைத்திருக்கிறது. அவன் ஓடிவந்து நோட்டீஸ் கட்டை தான் அமரும் இடத்திற்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, வண்டியில் குதித்து ஏறி காளைகளின் மூக்குக் கயிறை கையில் எடுத்து நாக்கைத் தொண்டைக்குள் வளைத்தவாறு, ஒரு மாதிரி சப்தமிடுகிறான். அப்போது வாலை ஆட்டிக்கொண்டும், தலையைக் குலுக்கிக் கொண்டும், கால்களை நின்ற இடத்தில் இருந்தவாறே மாற்றி மாற்றி வைத்துக்கொண்டும், காதுகளை அசைத்துக்கொண்டும்,
வண்டியின் நுகத்தடியைச் சுமந்து கொண்டும் நின்றிருந்த காளைகள் முன்னோக்கி ஒரு எட்டு வைக்கின்றன. ஆனால், அந்த இடத்தைவிட்டு நகர்வதாகக் காணோம். அப்போது வண்டிக்காரன் அவற்றின் முதுகில் சாட்டையை வைத்து அடித்து, ஒருவித சத்தத்தை உண்டாக்குகிறான். அப்போதும் அந்தக் காளைகள் அசையவில்லை. இந்தச் சத்தத்தைக் கேட்டு, நாம் முதல் காட்சியில் கண்ட செண்டைக்காரன் ஒரு பெட்டிக்கடை நிழலில் விரித்து தூங்கிக்கொண்டிருந்த துணியை விட்டு வேகமாக எழுந்து நிற்கிறான். முன்பு நாம் கண்டதைவிட அந்த ஆளுக்கு மிகவும் வயது குறைவாக இருக்கிறது. பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் இருந்த திண்டின்மேல் வைத்திருந்த செண்டையை எடுத்து, வேகமாகக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, சுவரின் மேற்பகுதி வழியாக தியேட்டர் அலுவலக அறையை ஒருமுறை பார்த்துவிட்டு, காளை வண்டிக்கு முன்னால் போய் நின்று, "டேம்.... டேம்...” என்று செண்டையை அவன் அடிக்கிறான்.