'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6844
ஒரு உத்தரவு கிடைத்ததுபோல காளைகள் அந்த ஆளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பிக்கின்றன. வண்டிச் சக்கரத்தில் மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சிணுங்குகின்றன. சரளைக்கற்கள் பதிக்கப்பட்ட பாதையில் வண்டிச் சக்கரத்தின் தடம் விழுகிறது. "டேம்... டேம்... டேம்...” என்று செண்டை தொடர்ந்து அடிக்கப்படுகிறது. காளை வண்டி கிராமத்தின் சிறு பாதைகள் வழியாக வேகவேகமாகப் போகிறது.
வண்டிக்காரன் எந்தவித பரபரப்பும் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான். காளைகள், முன்னால் முழங்கிக் கொண்டிருக்கும் செண்டையின் தாளத்தில் மயங்கிக் கிடப்பதுபோல படுவேகமாக நடக்கின்றன. வண்டிக்குப் பின்னால் சிறுவர்களும், சிறுமிகளும் ஓடிவந்து கொண்டிருக்கின்றனர். "டேம்... டேம்... டேம்...” செண்டை தொடர்ந்து ஒலிக்கிறது. வண்டிக்காரன் வீசி எறிகிற சிவப்பு வண்ண நோட்டீஸ்கள் காற்றில் பறந்து, அவற்றை வாங்க வரும் சிறுவர்- சிறுமிகள் கையில் அவை கிடைக்கின்றன. இந்தக் காட்சியும் மகிழ்ச்சிகரமான ஒன்றுதான். உறங்கிக் கொண்டிருந்த செண்டைக்காரனின் களைப்பு அந்த நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. தியேட்டர் உரிமையாளரோ, வண்டிக்காரனோ அந்த ஆளைப் பொருட்படுத்தவே இல்லை.
காலத்தைப் பற்றி ஒரு வார்த்தை. இரண்டாவது கண்ட காட்சியை நாம் இனி பார்க்கப் போவதில்லை. செங்கல் தூசிகளுக்கு மத்தியில் செம்மண்மீது சூரியன் பட்டுத் தெரியும் வெளிச்சத்தில் காளைகளும் வண்டிக்காரனும் இனி எந்தக் காலத்திலும் தென்படப் போவதில்லை. காலத்தால் உண்டான மாற்றங்களினால், அவர்கள் தேவையில்லை என்று மாதா தியேட்டர் என்றோ அவர்களைக் கைவிட்டுவிட்டது. முதலில் கண்ட காட்சிக்கு நாம் மீண்டும் வர வேண்டியதிருக்கிறது. ஒரு மடிப்பு விசிறியைப்போல அந்த கடந்துபோன சம்பவங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கவேண்டி வரும். இப்போது நாம் கண்ட மூன்றாவது காட்சி மீண்டும் மீண்டும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நாட்களும் வருடங்களும் மாற மாற மழையிலும் காற்றிலும் வெயிலிலும் காளைகளும் வண்டியும் வண்டிக்காரனும் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரையிடப்படும் படங்களின் பெயர்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. மண் பாதைகளும், மரங்களும், வீடுகளும் அதேதான். நோட்டீஸ்கள் வாங்க ஓடிவரும் சிறுவர் சிறுமிகளின் கைகளைப் பொறுத்தவரையில், ஒரு மாற்றம் இருக்கவே செய்கிறது. அந்தக் கைகள் கொடி பிடிக்கவும், துப்பாக்கி பிடிக்கவும், பேனாவைப் பிடிக்கவும், இயந்திரங்களின் கைப்பிடியைப் பிடித்துச் சுழற்றவும் போய்விட்டன. அதற்கு பதிலாக புதிய சிறு கைகள், புதிய நோட்டீஸ்கள் வாங்க உயர்கின்றன. காளைகளையும் வண்டிக்காரனையும் செண்டை அடிப்பவனையும் காலம் மறக்கவில்லை. காலம் கருணை மனம் கொண்டு அவர்களை வளர்த்து முதியவர்களாக்குகின்றது.
இப்போது நாம் காணும் காட்சியில் தியேட்டர் நவநாகரீக அமைப்பு கொண்டதாக மாறியிருக்கிறது. மரப்பலகையால் ஆன கேட்டுக்குப் பதிலாக இப்போது இரும்பாலான பெரிய கேட் காட்சி தருகிறது. சுவரும் புதிதாகக் கட்டடப்பட்டிருக்கிறது. தியேட்டரின் முகப்பு இப்போது புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. அதில் சித்திர வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. டிக்கெட் கொடுக்கும் கவுன்டருக்கு மேலே எழுதப்பட்டிருக்கும் கட்டணங்கள் கூட்டப்பட்டிருக்கின்றன. தியேட்டருக்கு முன்னால் இப்போது மண்பாதை இல்லை. அதற்கு பதிலாக தார் போடப்பட்ட சாலை ஒன்று இப்போது காட்சியளிக்கிறது. அதன் வழியாக பஸ்களும், கார்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் அவ்வப்போது கடந்து போகின்றன. ஒரு ஆட்டோ ரிக்ஷா தியேட்டர் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. பூக்கள் போட்ட, பட்டன்கள் போடாமல் திறந்து விடப்பட்ட மேற்சட்டையும், பேண்ட்டும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்த இளைஞன் ஒருவன் தியேட்டர் அலுவலகத்திற்குள் இருந்த நோட்டீஸ்களுடன் நடந்து வந்து, ஆட்டோ ரிக்ஷாவிற்குள் அமர்ந்திருக்கும் இன்னொரு இளைஞன் கையில் தருகிறான். அந்த இளைஞன் தன் காலுக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் பேட்டரி பெட்டியுடன் இணைந்திருக்கும் ஆம்ப்ளிஃபயரில் இருந்து நீண்டு கொண்டிருக்கும் மைக்கை ஒரு கையால் பிடித்து, அதை கையால் மெல்ல தட்டுகிறான். ஆட்டோ ரிக்ஷாவின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டிருக்கும் லவுட் ஸ்பீக்கர் வழியாக அவன் மெதுவாகத் தட்டியது சற்று பலமாகக் கேட்கிறது. இளைஞன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மைக் வழியாகக் கூறுகிறான்: "ஹலோ... ஹலோ... ஒன்... டூ... த்ரீ...'' ஆட்டோ ரிக்ஷாவின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் ஒரு விளம்பரப் பலகையில் "யவனிக” என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. "யவனிக” இயக்குனர்: கெ.ஜி. ஜார்ஜ். கோபி, மம்மூட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். "மாதா”வில் இன்று முதல் இரண்டு காட்சிகள்.
வெளியே வந்தவுடன் நான் பார்த்து மகிழ்ந்த ஒரு படம் "யவனிக”. அந்தப் படத்தைப் பார்த்தபோது மழை மிகவும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது என்பது மட்டும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அவ்வப்போது கொட்டகைக்குள் வெளியே இருந்து வந்த இடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
ஆட்டோ ரிக்ஷா டிரைவர், வண்டியை "ஸ்டார்ட்” செய்தான். வண்டி மெதுவாக முன்னோக்கி நகர்ந்தது. ரிக்ஷாவில் கட்டப்பட்டிருந்த லவுட் ஸ்பீக்கர் முழங்கியது: "யவனிக, யவனிக... ஒரு அருமையான திரைப்படம் இன்று முதல்-மாதாவில்.''
மூன்றாவதாக நான் உங்களுக்குக் காட்டும் காட்சியில் தோன்றுவது ஏற்கெனவே நாம் பார்த்த பாதைகள்தாம். அதே வளைவுகளும், பாதை ஓரங்களும்தான். காளை வண்டிச் சக்கரங்கள் உருண்டோடிய இடங்களில் இன்று கறுப்பாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சாலை வழியாக ஆட்டோ ரிக்ஷா கடந்து போகிறது."யவனிக... யவனிக...''
ஐந்தாவது காட்சி. நாம் இப்போது மீண்டும் காளை வண்டிக் காரனின் வீட்டு முற்றத்திற்கு வருகிறோம். காளை வண்டி அது எப்போதும் நிற்கிற கொட்டடியில், நிலத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் நுகத்தடியுடன் நின்று கொண்டிருக்கிறது. சக்கரங்களின் இரு பக்கங்களிலும் புற்கள் வளர்ந்திருக்கின்றன. வண்டி முழுக்க மண்ணும், தூசியும், ஒட்டடையும் இருக்கின்றன. வண்டிச் சக்கரங்களின் இரும்பு வட்டங்கள் துருப்பிடித்துப் போய் நிறம் மாறியிருக்கிறது. காளைகளை அங்கு காணவில்லை. ஆனால், காளை வண்டிக்காரன் சற்று தூரத்தில் இருக்கும்- தார் போட்ட சாலையின் ஓரத்தில் இருக்கும் ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் சொந்தக்காரனாக இப்போது இருக்கிறான். அவனுக்கு இப்போது வயதாகி விட்டது. கடையைச் சுற்றிப் பலரும் நின்றிருக்கிறார்கள். வெற்றிலை பாக்கும், பீடியும், சிகரெட்டும் படுஜரூராக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. கடையின் சொந்தக்காரன் ஒரு ஆளிடம் என்னவோ தீவிரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் அந்த ஆளிடம் சொல்கிறான்: "கொட்டகை வேலை போனபிறகும் நான் இந்தக் காளைகளை அஞ்சு வருஷமா வளர்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இனிமே என்னால அது முடியாது. இந்த வெற்றிலை பாக்குக் கடையில இருந்து கிடைக்கிற காசை வச்சு ரெண்டு காளை மாடுகளுக்கும் வைக்கோல்கூடப் போட முடியாது. காளைகளுக்கும் வயசாயிடுச்சு! எனக்கும்தான்.