Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பாதி இரவு நேரத்தில்...

த்திரிகை அலுவலகத்தில் பாதி இரவு தாண்டி விட்டது. ஆட்கள் யாரும் இல்லாத மேஜைகளின் மேல் மின் விசிறிகள் வீசிக் கொண்டிருந்தன. கீழே சிதறிக் கிடந்த பேப்பர் துண்டுகள் இங்குமங்குமாய் காற்றில் அலைந்தன. செய்தித் துண்டுகள் தரையில் இலட்சியமே இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவை மேஜைக் கால்களை இறுக கட்டிப் பிடித்தன. சுவர்களில் ஏற முயற்சித்தன. அலமாரியின் அடியில் போய் ஒளிந்தன. மூலை முடுக்குகளில் காற்றில் விறைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றும் ருத்யுஞ்ஜயனின் காலைச் சுற்றி வளைத்தபோது, அவன் நடுங்கிப்போய் காலை விட்டு அதை விடுவித்து உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு படு வேகமாக எழுந்தான். தான் எழுதிக் கீழே போட்ட செய்தி டெலிபிரிண்டருக்குக் கீழே போவதைப் பார்த்துக் கொண்டிருந்த ம்ருத்யுஞ்ஜயன் சொன்னான்: “டெலிபிரிண்டர்ல இருந்து வந்தது. டெலிபிரிண்டர்க்கே போகுது. இது இனி பிறக்காம இருக்கட்டும். கடவுளே!” மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்தவாறு அவன் தூரத்தில் எங்கோ பன்னிரெண்டு மணி அடிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஜன்னல்களில் திரண்டு நின்றிருந்த இருட்டைக் கடந்து வந்த காலத்தின் மணியோசை ம்ருத்யுஞ்ஜயனை என்னவோ செய்தது. இதுவரை அமைதியாக இருந்த டெலிபிரிண்டர் திடீரென்று ஒரு இயந்திரத் துப்பாக்கி வெடிப்பதைப்போல மீண்டும் செய்திகளைத் தயார் பண்ண ஆரம்பித்தது. ம்ருத்யுஞ்ஜயன் என்னதான் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு மணியோசை அந்தச் சத்தத்தில் கேட்க முடியாமலே போய்விட்டது. செய்திகள் பிறப்பெடுப்பதன் ஓசை. மனிதகுலத்திற்கு சொந்தப் பிறப்புகளைப் பற்றி எவ்வளவுதான் செய்திகளைக் கேள்விப்பட்டாலும், போதுமென்றே தோன்றாது. கேள்வியின் ஆரவாரத்தில் காலத்தின் தாளங்கள் கரைந்து மறைந்து கொண்டிருக்கின்றன. மேஜைமேல் செய்திகள் நெளிந்தன. தரையில் அவை நெளிந்து ஓடின. அபலைகளைப்போல அலைந்தன. ‘செய்திகளுக்கு இன்னைக்கு சுறுசுறுப்பு அதிகம்தான்’ - ம்ருத்யுஞ்ஜயன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஒரு செய்தி மின் விசிறி காற்றால் தரையை விட்டு மேலே கிளம்பி அறைக்குள் சுற்றித் சுற்றித் திரிந்து மின் விசிறியின் சிறகுகளில் பட்டு அடித்து அடித்து சத்தம் உண்டாக்கி ஜன்னல் வழியே பறந்து போனது. "எங்கே போற?" - ம்ருத்யுஞ்ஜயன் அதைப் பார்த்துக் கேட்டான். “எங்கே போனாலும் பாதுகாப்பு இல்ல...” அப்போது திறந்திருந்த ஜன்னலுக்கு அப்பால் இருந்து இருட்டைக் கிழித்துக் கொண்டு கேன்டீனைச் சேர்ந்த பூனை சொன்னது: “ம்யாவ்!”

இரவு வேலையை எடுத்த பிறகு இன்றுதான் செய்திகள் இந்த அளவிற்கு தன்னைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதாக உணர்ந்தான் ம்ருத்யுஞ்ஜயன். இரவு நேர வேலையில் அமர்ந்து அவன் செய்திகளின் துடிப்பையும் தவிப்பையும் தினமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் அவற்றின் வாழ்க்கையைச் சின்னதாக்கி, நீட்டி, அவற்றிற்கு புதிய பரிமாணங்கள் தந்து, வேண்டாம் என்று ஒதுங்கி - எல்லாமே அவன் செய்தான். டெலிபிரிண்டர் இரவு முழுக்க பேச்சை நிறுத்தாத ஒரு பைத்தியக்காரனைப்போல உலகச் செய்திகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. பேப்பர் சுருள் சுருளாக வந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் ம்ருத்யுஞ்ஜயன் ஈவு இரக்கமே இல்லாத ஒரு சக்திக்கு கீழ்ப்பட்டவனைப் போல அவற்றை எது பற்றியும் கவலைப்படாமல் வெட்டவும், கிழிக்கவும், வடிவத்தை மாற்றவும் செய்து கொண்டிருந்தான். தரையிலும், மேஜை மேலும் அவை உண்டாக்கிய ஆர்ப்பாட்டங்களையும் அட்டகாசப் பார்வைகளையும் அவன் கவனிக்கவே செய்தான். மீதி நேரத்தில் தன்னுடைய கடந்து போன முன்பிறவிகளைப் பற்றிய நினைப்பில் அவன் ஆழ்ந்து போனான். பாம்பாகவும், புழுவாகவும், மரமாகவும், மானாகவும், பெண்ணாகவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிராகவும் தான் கோடிக்கணக்கான வருடங்களாக நடத்திய பயணத்தின் வழிகளில் இந்த பூமியின் மண்ணில் எங்கெல்லாம் தன்னுடைய தகர்ந்துபோன கல்லறைகளும் கரையான் அரித்த நினைவுச் சின்னங்களும் இப்போதும் யாருக்குமே தெரியாமல் மறைந்து கிடக்கும் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய சாம்பல் கலசங்களும், மிச்ச எலும்புகளும் இந்த மண்ணுக்கடியில் எப்படியெல்லாம் உருமாறிப்போய் கிடக்கும் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய சாம்பல் கலசங்களும், மிச்ச எலும்புகளும் இந்த மண்ணுக்கடியில் எப்படியெல்லாம் உருமாறிப்போய் கிடக்கும் என்பதையும் அசைபோட்டுப் பார்த்தான். இரவு முழுக்க டெலிபிரிண்டர் செய்திகளை வெளியே தள்ளிக் கொண்டே இருக்கும். மிருத்யுஞ்ஜயன் திரும்பத் திரும்ப அவற்றைத் தேர்ந்தெடுப்பான். மாற்றி எழுதுவான், சுருக்குவான், சுருட்டி வீசி எறிவான். பிறகு அவன் தூங்க முயல்வான். ஆனால் தூக்கம்தான் வராது. தான் நடந்துவரும் தெருக்களில் எப்போதும் பசியாலும் களைப்பாலும் தாகத்தாலும் வாடி நடந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றிய நினைப்பு அவனின் மூடியிருந்த கண்களில் கவலைகளை உண்டாக்கும் படங்களாகப் பதியும். கசப்பும் உப்பும் நிறைந்த கண்ணீர் துளிகள் அவன் கண்களில் அரும்பி உறக்கத்தையே இல்லாமல் ஆக்கும். “அவர்களின் உலகமும் என்னுடைய உலகமும் முடிவுக்கு வரட்டும், கடவுளே...” - ம்ருத்யுஞ்ஜயன் முணுமுணுப்பான். இளம் தளிர்களை நசுக்குகின்ற இந்த ராட்சச சக்கரங்களின் சுழற்சி நிற்கட்டும். குழந்தைகளின் கண்ணீர் கடல்கள் முழுமையாக வற்றட்டும். பூமியின் மண்ணில் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கல்லறைகளின் அணிவகுப்பு முடியட்டும். டெலிபிரிண்டர் செய்திகளைப் பிறப்பித்து அலறும். செய்திகள் போகும் இடங்கள் தேடி அலையும். ம்ருத்யுஞ்ஜயன் உலகத்தின் முடிவைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போயிருப்பான்.

ம்ருத்யுஞ்ஜயன் கேன்டீன் பூனையைக் கண்டு பிடிப்பதற்காக நாற்காலியை விட்டு எழுந்தான். திடீரென்று குழல் விளக்குகள் அணைந்தன. மின்விசிறிகள் நின்றன. செய்திகளின் நர்த்தனம் நின்றது. டெலிபிரிண்டர் ஊமையானது. ஜன்னலுக்கு அப்பால் இருந்தவாறு பூனை சொன்னது: “ம்யாவ்!” ம்ருத்யுஞ்ஜயன் இருட்டைக் கிழித்துக் கொண்டு அவளிடம் சொன்னான்: “வா... என்னைப் போலவே உறங்காமல் இருப்பவளே... இன்னைக்கு நாம ஒண்ணா இருந்து காத்திருப்போம்...” ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து எரிய வைத்து மேஜை மேல் அதை நிறுத்திவிட்டு அவன் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். மெழுகுவர்த்தியின் வெளிச்ச வட்டத்திற்கு அப்பால் இருந்த இருட்டு முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்தது. ம்ருத்யுஞ்ஜயன் ஆடிக் கொண்டிருந்த நெருப்பின் விளிம்பையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். உலகத்தின் இறுதியையும் குழந்தைகளின் கஷ்டத்தையும் அவர்களின் முடிவையும் மக்களின் மரணத்தையும் சிந்தித்துக் கொண்டிருந்த தன்னுடைய பிறக்காத குழந்தைக்காக தான் ஒரு முறை கண்ணீர் விட்டு அழுததை அவன் நினைத்துப் பார்த்தான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version