பாதி இரவு நேரத்தில்... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6850
அப்படி அழுதது எதற்காக? அது தான்தானே? ம்ருத்யுஞ்ஜயன் நினைத்தான். அவனின் மனைவி கர்ப்பம் கலைந்த அன்று அந்த பிறக்காத குழந்தையின் நின்றுபோன பயணத்தை நினைத்து தேம்பித் தேம்பி அழுதான் அவன். “பிறக்காத குழந்தையே... என்னுடைய உயிரின் வளர்ச்சியே... உன்னுடைய இறுதிப் பயணம் நல்லபடி முடியட்டும்” - அவன் மனதிற்குள் வேண்டினான். “பரிணாம வளர்ச்சியின்படி பிறவி எடுத்து வந்த நீ பிறப்பு, இறப்பு எதையுமே நிறைவு செய்ய முடியாமல் இந்த உலகத்தைவிட்டு போகிறாயே! நீ யார்? உன்னுடைய பயணத்தின் முடிவற்ற நிலையில் இருந்தும், அதன் அரவணைப்பில் இருந்தும் உன்னை பலவந்தமாகப் பறித்து எறிந்தபோது நீ மனதிற்குள் என்ன சொல்லியிருப்பாய்? என்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக பயணம் புறப்பட்ட அறிமுகமில்லாதவனே, எத்தனையோ துக்கங்களும், சந்தோஷங்களும், அன்பும், நினைவுகளும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் குடியிருந்து அதோடு சேர்ந்து அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போனதே!” - ம்ருத்யுஞ்ஜயனின் கன்னத்தின் வழியே திரண்டு வழிந்து கொண்டிருந்த ஒரு துளி கண்ணீரும் உதடுகளில் விறைத்துக் கொண்டிருந்த அழுகையும் பயணத்தை முடிக்காத ஒரு குழந்தை அவன் மீது மீண்டும் அன்பு செலுத்தவும், கவலை கொள்ளச் செய்யவும் செய்தது.
அப்போது இருட்டைத் தாண்டி மெழுதுவர்த்தியின் வெளிச்சத்திற்கு அப்பால் ஜன்னல் படியில் கேன்டீன் பூனை தெரிந்தது. படியில் இருந்து இறங்கிய அந்தப் பெண் பூனை செய்திச் சங்கிலியைக் கடந்து நடந்து ம்ருத்யுஞ்ஜயனின் மேஜைமேல் ஏறி இருந்தது. பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த இரண்டு கண்கள் அவனைப் பார்த்தன. பூனை சொன்னது: “ம்யாவ்!” அவன் அந்தப் பூனையின் குளிர்ந்த மூக்கில் தன்னுடைய சுட்டுவிரலை வைத்தவாறு கேட்டான்: “என்ன நீ சொல்ற? நேரமாயிடுச்சா?”
ம்ருத்யுஞ்ஜயன் எழுந்து சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வெளியே ஒன்றுமில்லை. இருட்டு மட்டுமே இருந்தது. கண்களுக்கு வெளியே யாரோ கைகளில் இறுக மூடியதைப் போன்ற இருட்டு. ம்ருத்யுஞ்ஜயன் மீண்டும் தான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியின் வெளிச்ச வளையத்தைத் தேடினான். அது சுருங்கி இருட்டில் ஒரு சிறு துண்டாக மாறியிருந்தது. அந்தச் சிறு வெளிச்சத்தில் இரண்டு பெரிய கண்கள் தெளிவாகத் தெரிந்தன. ம்ருத்யுஞ்ஜயன் இருட்டினூடே மேஜை மேல் இருந்த வெளிச்சத்தின் கரையைத் தேடி நீங்கிக் கொண்டிருக்க, திடீரென்று அவனே நடுங்கும் வண்ணம் இருட்டைக் கிழித்துக் கொண்டு டெலிபிரிண்டர் அலறியது. நெருப்பைப் போல பிரகாசமாக ஒளிர்ந்தபடி தன்னுடைய வடிவத்தைக் காட்டும் அந்த டெலிபிரிண்டரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ம்ருத்யுஞ்ஜயன். அதன் இதயத் துடிப்பைக் கேட்டவாறு அவன் அதையே வெறித்துப் பார்த்தான். அப்போது படுவேகமாக மந்திர சக்தியால் நடப்பதைப்போல அதன் முகத்திலிருந்து வார்த்தைகள் தொடர்ந்து புறப்பட்டு வந்தன. உலோகத்தின், இயந்திரத்தின் கடினத் தன்மையுடன் அது அலறியது. “உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம்...” இருட்டிற்கு கனம் ஏறிக் கொணடு வந்தது. ம்ருத்யுஞ்ஜயன் இருட்டினூடே நடந்து மீண்டும் ஜன்னலை நோக்கி நடந்தான். முடிவுக்கு வந்த தன்னுடைய உலகத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்ஜயன் இருட்டில் தடவிக் கொண்டிருந்தான். ஆனால், ஜன்னலின் இருட்டில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. அவன் மீண்டும் திரும்பி வந்தான். இருட்டு அவனை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. டெலிபிரிண்டரும் அதன் அலறலும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டிருந்தது. மேஜையும் அதன்மேல் இலேசாக தெரிந்து கொண்டிருந்த வெளிச்ச வட்டமும் இருட்டில் கலந்து காணாமல் போயிருந்தன. ம்ருத்யுஞ்ஜயன் அந்த இருட்டுக்கு மத்தியில் தெரிந்த இரண்டு கண்களையும் உற்று பார்த்தான். அந்தக் கண்களின் ஒளியைத் தன் மார்பில் படும்படி செய்தான். பிறகு... மறைந்து போய்க் கொண்டிருக்கும், முடிவுக்கு வந்திருக்கும் தன்னுடைய காலத்தைப் பார்த்துச் சிரித்தான். பூனையின் கன்னத்தில் முத்தம் கொடுத்த அவன் சொன்னான்: “நேரமாயிடுச்சு...” இருட்டு எல்லாவற்றையும் விழுங்கியபோது தூரத்தில் இருந்து, கோடி யுகங்களுக்கு அப்பால் இருந்து ஒரு மென்மையான குரல் இருட்டின் இதயத்திலிருந்து கிளம்பி வந்தது: “ம்யாவ்!” பிரபஞ்சங்கள் அழிவதையும் மறுபிறவி எடுப்பதையும் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ம்ருத்யுஞ்ஜயன் என்ற பத்திரிகைப் பணியாளன் தன்னுடைய பிறப்புகளைப் பற்றியும் மரணங்களைப் பற்றியும் நினைப்பதில் மூழ்கிப் போனான்.